ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!

இன்று காலை ஒரு ஃபேஸ்புக் பதிவில் என் பெயர் Tag செய்யப்பட்டிருந்தது. என் ஃபேஸ்புக் தொடர்பில் இருப்பவருக்கு ஏதோ தொழில்நுட்ப சந்தேகம் இருந்ததால் அதை மெசஞ்சரில் கேட்டிருந்தார். அதற்கு தீர்வு சொல்லி இருந்தேன். அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான பதிவு அது.

அவர் என்ன சந்தேகம் கேட்டிருந்தார், அதை எப்படி தீர்வு சொன்னேன் என்ற அளவில் அந்த பதிவு அமைந்து அதற்கு நான் உதவினேன் என்ற அளவில் இருந்திருந்தால் எனக்கு நெருடலாக இருந்திருக்காது.

ஆனால் அதில் ‘என் முகத்தைக்கூட பார்த்தது இல்லை, போனில் பேசியதில்லை, ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்…ஆனாலும் நான் உதவி கேட்டவுடன் உதவினார்…’ என்று என்னை பெருமைப்படுத்துவதாக அந்தப் பதிவை எழுதி இருந்தார்.

உடனே அவருக்கு மெசேஜ் அனுப்பி அவரது பதிவில் மாற்றம் செய்யச் சொன்னேன். மேலே சொன்ன வரிகளை எடுத்துவிட்டு அவர் என்ன சந்தேகம் கேட்டார், அதற்கான தீர்வு என்ன என்பதைச் சொன்னால் மற்றவர்களுக்குப் பயன்படும் என்று சொன்னேன். எனக்கு நன்றி சொல்லியே தீர வேண்டும் என்றால் என் பெயரை குறிப்பிட்டு Tag செய்து ‘எளிமையாக தீர்வு சொன்னமைக்கு நன்றி மேடம்’ என்று குறிப்பிட்டால் போதும்.

‘என் முகத்தைக்கூட பார்த்தது இல்லை, போனில் பேசியதில்லை, ஃபேஸ்புக்கில் மட்டுமே அறிமுகம்…ஆனாலும் நான் உதவி கேட்டவுடன் உதவினார்…’ என்பதுபோன்ற வார்த்தைகளை படிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ள முடியும்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பலநூறு அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மனிதர்கள் இணைந்திருப்பார்கள். எல்லோருமே ஒரே மாதிரியான புரிதலில் இருக்க மாட்டார்கள்.

வேறுவிதமான செயல்பாடுகளுக்கும் இந்த வார்த்தைகள் தூண்டுதலாக அமையலாம்.

இவருக்கு என்றல்ல… யார் தொழில்நுட்ப சந்தேகம் கேட்டிருந்தாலும் (எனக்குத் தெரிந்தால்) விளக்கம் அளித்திருப்பேன்.

இன்று நேற்றல்ல….  1992 – க்கு பிறகானவர்களுக்கு நம் நாட்டில் தொழில்நுட்பம் வளரவே ஆரம்பிக்காத காலகட்டத்தில் முதன்முதலில் தமிழில் தொழில்நுட்பத்தை எளிய முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சியை என் நிறுவனமும் (காம்கேர்), நானும் தொடங்கிய காலத்தில் இருந்தே யாரேனும் தொழில்நுட்ப சந்தேகம் என்றால் கூடுமானவரை அவர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறேன்.

கடிதம் வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் தொழில்நுட்ப சந்தேகங்கள் கேட்பவர்கள் கால மாற்றத்துக்கு ஏற்ப இமெயில், வாட்ஸ் அப், மெசஞ்சர் போன்றவற்றை பயன்படுத்தி கேட்கிறார்கள்.

எனக்கு நேரம் இருக்கும் நாட்களில் உடனடியாக சொல்லிவிடுகிறேன். அப்படி இல்லை எனில் நேரம் கிடைக்கும்போது சொல்கிறேன். அப்படி நேரம் கிடைப்பதற்கு ஓரிரு நாட்களும் ஆகும். ஓரிரு வாரங்களும் ஆகும், மாதங்களும் ஆகலாம். என் பணிச்சூழல் அப்படி.

அதற்காக ஒரு சாஃப்ட்வேர் தயாரித்துக்கொடுங்கள், மல்டிமீடியா சிடி தயாரித்துக்கொடுங்கள் என்று சொன்னால் நிச்சயம் என்னால்  ‘இலவசமாக’ செய்ய முடியாது. அந்தப் பணியில் என்னுடன் இணைந்து பலர் பணிபுரிய வேண்டி இருக்கும்.

ஃபேஸ்புக்கில் நன்றி சொல்வதும் ஒரு கலை!

அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஏப்ரல் 16, 2019

(Visited 65 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari