வாழ்க்கையின் OTP-10 (புதிய தலைமுறை பெண் – மே 2019)

யார் நல்லவர் என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினம்தான்.  இதற்கான விடை தேடிய போது பல விஷயங்களை ஆராய வேண்டி இருந்தது.

தினந்தோறும் காலை 6 மணிக்கு ஃபேஸ்புக்கில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தொடரை எழுதி வருகிறேன். தினமும் ஒரு நல்ல செய்தியுடன் ‘அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்’ என்ற வாழ்த்துடன் அந்த பதிவை முடிப்பேன்.

இப்படி மற்றவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிடும்போது என் மனதும் புத்துணர்வாகிறது. படிப்பவர்களுக்கும் அன்றைய தினம் உற்சாகமாக இருப்பதாக பல வாசகர்கள் சொன்ன கருத்தில் இருந்து அறிய முடிந்தது. இப்படி மகிழ்ச்சி என்பது ஒரு சங்கிலித் தொடர்போல ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் ஒரு நிகழ்வு.

‘இந்த நாள் இனிய நாள்’ தொடரில் ஒருநாள், நல்லவர் என்பதற்கான இலக்கணம் கால மாற்றத்துக்கு ஏற்ப எப்படி உருமாறிவிட்டது என்பது குறித்து எழுதினேன்.

முன்பெல்லாம் தான தர்மங்கள் செய்பவர்களையும், ஊருக்கு உழைப்பவர்களையும், ஏழைகளுக்கு உதவுபவர்களையும் ‘அவர் ரொம்ப நல்லவர்’ என்று சொல்வார்கள்.

இப்போது சிகரெட் புகைக்காதவர்களையும், மது அருந்தாதவர்களையும் பெண்களை மதிப்பவர்களையும் ‘அவர் ரொம்ப நல்லவர்’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். மற்றபடி அவர்கள் தன்னையும், தன் வீட்டையும் தாண்டி எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்திருக்காவிட்டாலும் அவர் நல்லவராகிவிடுகிறார்.

ஒரு நல்ல ஆண் மகனின் அடிப்படைத் தகுதியே சிகரெட், மது, மாது இவற்றுக்கு அடிமையாகாமல் இருப்பதே. ஆனால் இவை இன்று ‘நல்லவன்’ என்ற பட்டப்பெயருக்கான தகுதிகள் ஆகிவிட்டன.

ஒரு சந்தேகம்….

ஊருக்காகவும் நாட்டுக்காகவும் உழைப்பவர்களுக்கும், தான தர்மங்கள் செய்பவர்களுக்கும் என்ன பெயர் கொடுப்பார்கள்?

மனிதன் அவனளவில் மனிதனாக இருப்பதே இப்போதெல்லாம் நல்லவன் என்பதற்கான தகுதி ஆகிவிட்டது.

மற்றவர்களுக்கு உபத்திரவம் நினைக்காதவனே இந்த உலகில் உத்தமன் என்பதே இந்த கலியுகத்தில் இயற்கை நமக்கு அளித்துள்ள OTP.

உயிருக்கு கொடுக்கும் மரியாதை 

நாம் இறந்த பிறகு நம் உடலை சுமந்து வரும் ஆம்புலன்ஸ் முதல், சுடுகாட்டில் நம் உடலை எரிப்பவர்கள் வரை அனைவருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதுதான் நடைமுறை.

ஒரு சிறிய கற்பனை.

எழுபது வயதான ஒருவர் இறந்த பிறகு அவர் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸுக்கு பணம் கொடுத்துக்கொண்டிருந்தனர் அவன் உறவினர்கள். அப்போது அவரைவிட்டுப் பிரிந்து சென்ற உயிர் இறந்த உடலைப் பார்த்து கேட்டதாம்.

‘உன்னை நான் இந்த உலகத்தில் எங்கெல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறேன். அப்படியெல்லாம் சந்தோஷமாக வாழ வைத்திருக்கிறேன். எவ்வாறெல்லாம் உன் குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நாட்களை செலவழிக்க உதவியிருக்கிறேன்… எனக்கு எதுவுமே கொடுக்கவில்லை நீ…

ஆனால் உன் உடலை சுமந்துவந்த ஆம்புலன்ஸுக்கு பணம் கொடுக்கிறார்கள்… இதோ உன்னை எரிக்கப் போகிறவருக்கும் பணம் கொடுக்க எடுத்துத் தயாராக வைத்துக்கொண்டுள்ளனர் உன் உறவினர்கள்…

உன்னை இந்த உலகில் வாழ வைத்த எனக்கு என்ன ஊதியம் கொடுக்கப் போகிறாய்?’

இந்த கற்பனை அபத்தமானதாக இருந்தாலும் யார் நல்லவன் என்ற கேள்விக்கான பதில் இந்த உயிரின் கேள்வியில் உள்ளது.

இதற்கான பதிலை திருவள்ளுவர் சொல்கிறார்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

நம்மால் முடிந்த உதவிகளை தான தர்மங்களை மற்றவர்களுக்கு செய்து  ‘நல்ல மனிதன் இவன்’ என்று பாராட்டும்படியாக வாழ்வதே நம்மை இயக்கத்தில் இருக்க வைக்கும் உயிருக்கு நாம் கொடுக்கும் ஊதியம்.

வள்ளுவரின் இந்த குறளே நல்லவராக வாழ நினைக்கும் நம் ஒவ்வொருக்குமான OTP.

மனமே நம் கடிவாளம் 

எங்கள் பெரியப்பா ஹோமியோபதி கிளினிக் வைத்திருந்தார். ஹோமியோபதி மாத்திரைகள் குட்டிகுட்டியாய் ஜவ்வரிசி தித்திப்பாய் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். மருந்தை அதில் ஊற்றுவதற்குமுன் அவை வெறும் சர்க்கரை உருண்டைகளே. அதில் மருந்தை கலந்தவுடன் அவை மருத்துவ குணம் பெறுகின்றன.

இந்த மருத்துவப்படி நோயின் வீச்சுக்கும் மருந்துகளின் பவருக்கும் ஏற்ப சில மருந்துகளை ஒரு வாரத்துக்கு ஒரு நாளோ அல்லது 15 நாட்களுக்கு ஒருநாளோ சாப்பிட்டால் போதுமானது.

அந்த நிலையில் ஒரு நோயாளிக்கு மருந்தே கொடுக்காமல் மருந்து கலக்காத அந்த மாத்திரைகளை மற்ற நாட்களுக்குக் கொடுத்து  அதன் மூலம் நோயை சரி செய்வார்களாம்.

சிலருக்கு நோயே இருக்காது. மனதளவில் நோய் இருப்பதாக கற்பனையிலேயே மனதை வருத்திக்கொள்வார்கள். அவர்களுக்கு இத்தகைய ட்ரீட்மென்ட் நூறு சதவிகிதம் பொருந்தும்.

நாம் மருந்தை சாப்பிடுவதாக நமது மனம் நினைத்தாலே போதும் உடல் பல்வேறு நோய்களை தானே சரி செய்து கொள்ளும்.

இத்தனை சக்திவாய்ந்தது நமது மனம். மனதை ஆளும் சக்தி நம்மிடம்தான் உள்ளது.

நம் மனதை ஆளும் கடிவாளம் நம்மிடம் இருக்கும்வரை நம்மை நம்மால் ஆள முடியும். இதுதான் நம் மனதை நாம் ஆள உதவும் OTP.

நாம் நினைத்தால் நல்லவராக வாழமுடியும். நினைத்தால் கெட்டவராகவும் உலா வரமுடியும். அதைத் தேர்ந்தெடுக்கும் சாய்ஸும் அதற்கான வாய்ப்பும் நம் கைகளில்.

நல்லவனும் கெட்டவனும்! 

யார் நல்லவர் கெட்டவர், எது நல்லது கெட்டது என்பது குறித்த ஆராய்ச்சி செய்யாமல் நல்லது என்பதை நேர்மறை என்றும், கெட்டது என்பதை எதிர்மறை என்றும் எடுத்துக்கொள்வோம்.

ஒரு நல்லவரால் ஒரு நல்லவரையே உருவாக்குவது கடினம். அதில் எங்கிருந்து ஒரு கெட்டவரை நல்லவராகுவது?

ஆனால் ஒரு கெட்டவரால் பல கெட்டவர்களை உருவாக்க முடியும். அது மட்டுமில்லாமல் நல்லவர்களைக்கூட கெட்டவர்களாக மாற்ற முடியும்.

இதையே இயக்குனர் மகேந்திரன் தன் உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் கடைசி காட்சியில் சொல்லி இருப்பார்.

அந்தத் திரைப்படத்தில் ஓர் அழகான கிராமம். அந்த ஊரின் பள்ளிக்கூட கரெஸ்பாண்டன்ட்டின் குணாதிசயங்களும் செயல்பாடுகளும் மிக மிக கொடூரமாக இருக்கும். அந்தப் படத்தில் அவர்தான் ஹூரோ. அவரின் கொடுமை தாங்கமுடியாமல் அவரது மனைவி இறந்துப்போவார்.  அவருக்கு இரண்டு குழந்தைகள்.

அவருக்கு மனைவியின் தங்கை மீது காதல். ஆனால் அவரோ வேறொருவரை காதலித்து திருமணமும் நிச்சயமாகிவிடுகிறது. தன் திருமணப்பத்திரிக்கையை கொடுக்கத் தனியாக வரும்போது  வீட்டுக்குள் வைத்து பூட்டி நிர்வாணமாக்கி ‘இந்த நினைப்பே இனி ஒவ்வொருநாளும் உன்னை  நிம்மதியில்லாமல் கொல்லும்… இதுதான் உனக்கு நான் தரும் திருமணப் பரிசு’ என்று சொல்லிவிட்டு எகத்தாளமாக சிரிப்பார்.

ஊர்மக்கள் ஒருக்கட்டத்தில் பொறுக்க மாட்டாது, அவரை  ஊரின் எல்லையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றுக்கு விரட்டிச் செல்வார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக ஊர்மக்கள் அவரை நெருங்கிக்கொண்டே வந்து அவரை தானே தண்ணீரில் மூழ்கி இறக்கச் செய்வதே ஊராரின் நோக்கம்.

தப்பிக்க வேறு வழியே இல்லாமல் தண்ணீரில்  இறங்கிக்கொண்டிருப்பவர் திரும்பிபார்ப்பார்.  ஊராரிடம், ‘இதுவரைக்கும் நான் செய்த பாவத்திலேயே மிகப்பெரிய பாவம் இன்று உங்கள் அனைவரையும் என்னை மாதிரி மாத்தினதுதான்…’ என்று சொல்லிவிட்டு தண்ணீரில் மூழ்கிப் போவார்.

இந்தத் திரைப்படம் மனிதன் மனிதனாக வாழ நம் ஒவ்வொருவருக்குமான OTP.

மிக மிக நல்லவர்களாக சாத்வீகமானவர்களாக இருந்த ஊர் மக்களால் ஒரு கெட்டவனை நல்லவனாக்க முடியவில்லை. ஏன் அன்பான அவன் மனைவியாலும், பாசமான குழந்தைகளாலும்கூட முடியவில்லை.

ஆனால் ஒரு கெட்டவனால் அந்த ஊர் மக்கள் அனைவரையும் கொடூரமான செயலை செய்ய வைக்க முடிந்துவிட்டதல்லவா?

தவறு செய்தால் உணரவாவது வேண்டும் 

‘தெறி’ திரைப்பட கிளைமேக்ஸ்.

குழந்தைகளை நல்லவர்களாக வளர்க்கத் தவறிய அப்பாக்களுக்கு வார்த்தைகளாலேயே சவுக்கடி.

ஹீரோவாக நடிகர் விஜய். வில்லனாக இயக்குனர் மகேந்திரன்.

திரைப்படத்தில் ஹீரோவினுடைய குழந்தையின் அம்மா மற்றும் பாட்டியை கொலை செய்தவர்கள், தன் முன்னே இருக்கும் வில்லன்தான் என தெரிந்தும் அக்குழந்தை அவனிடம் சென்று ‘சாரி சொல்லுங்க தாத்தா… தப்புப் பண்ணா சாரி சொல்லணும்…’ என்று சொல்லும் காட்சி கிளாசிக்.

அதன்பிறகு வரும் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான உரையாடலும் காட்சியும் ‘அட இது நாம நினைக்கிற கருத்தா இருக்கிறதே…’ என நிச்சயம் நம் ஒவ்வொருவரையும் ‘அட’ போட வைக்கும்.

 “தன் அம்மாவை கொலை செய்தது நீதான்னு தெரிஞ்சும் என் பொண்ணு உன்னிடம் வந்து…

‘சாரி சொல்லுங்க தாத்தா… செஞ்ச தப்பை உணர்ந்து சாரி சொல்லுங்க தாத்தான்னு’ சொன்ன போதே…

ஒரு நல்ல அப்பாவா நான் ஜெயிச்சுட்டேன். எப்ப ஒரு அப்பாவி பொண்ண உன் பையன் கற்பழித்து கொன்னானோ அப்பவே நீ ஒரு அப்பனா தோத்துட்டே…

கொலகாரன், கொள்ளக்காரன், பொம்பள பொறுக்கி, குடிகாரன், ரயில்ல குண்டு வைக்கிறவன் இத்தியாதி இத்தியாதி இவங்கல்லாம் அப்படி ஆனதுக்குக் காரணமே அவன்களை ஒழுங்கா வளக்காத அப்பன்கள்தான் காரணம்…

பிள்ளைங்கள ஒழுங்கா வளக்கத் தெரியாத ஒவ்வொரு அப்பனும் குற்றவாளிதான்…’

மிக மிக நிறைவான இந்தக் காட்சியும், வசனமும்தான் அப்பாக்களுக்கு சொல்லப்பட்ட OTP.

தீயதை விரட்ட நல்லவற்றை அதிகரிப்போம்

பொதுவாகவே சந்தோஷமான நிகழ்வின் தாக்கம் குறுகிய காலங்கள் மட்டுமே நம் மனதில் இருக்கின்றன. ஆனால் அதுவே சோகமான நிகழ்வின் தாக்கம் நீண்ட நாட்களுக்கு வடுவாய் மனதில் பதிந்துவிடும்.

வாழ்க்கையில் நினைத்து நினைத்து சந்தோஷப்பட எத்தனையோ சம்பவங்கள் இருக்கும்போது யாரோ என்றோ சொன்ன ஒரு வார்த்தையை மனதில் வைத்துக்கொண்டு வருத்தப்படுகிறோம்.

நேர்மறையை அதிகரிப்பதுதான் எதிர்மறையை விலக்குவதற்கான அல்லது குறைப்பதற்கான ஒரே வழி. எந்த அளவுக்கு நேர்மறையை அதிகரிக்கிறோமோ அந்த அளவுக்கு எதிர்மறை குறைய ஆரம்பிக்கும்.

எந்த அளவுக்கு நல்ல விஷயங்களை நம்முள் கொண்டு செல்கிறோமோ அந்த அளவுக்கு கெட்ட விஷயங்களை நம்மைவிட்டு நீங்கத் தொடங்கும்.

உதாரணத்துக்கு சமையலில் சாம்பார் செய்கிறோம். உப்பு தவறுதலாக அதிகம் போட்டுவிட்டோம் என வைத்துக்கொள்வோம். உப்பை சரிகட்ட என்ன செய்யலாம் என்றுதானே யோசிப்போம். உப்பு அதிகமாகிவிட்டதால் மொத்த சாம்பாரையும் கொட்டி விடுவோமா? இல்லையே.

இன்னும் கொஞ்சம் தண்ணீர் கலந்து, காரப் பொடி சேர்த்து, தக்காளி அரைத்துவிட்டு உப்பை சமன் செய்து சாப்பிட தயாராவோம்தானே.

இந்தா பிடிங்க உங்களுக்கான OTP… வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நிறைய நல்லவர்களையும் நிறைய நல்ல விஷயங்களையும் வைத்துக்கொண்டால் தீய சக்திகள் நெருங்க பயப்படும் அல்லது அவற்றின் ஆதிக்கம் குறையும்.

எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 10
மே 2019

(Visited 273 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon