டெக்னோஸ்கோப்[4] – இ-புக்ஸ் படிப்பதும் சுலபமே!

மின்னூல்கள் என்பதும் இ-புக்ஸ் என்பதும் ஒன்றா?

ஆம். இ-புக்ஸ், இ-புத்தகங்கள், மின்னூல்கள் இவை அனைத்துமே ஒரே பொருள் தரக்கூடியவை.

இ-புக்ஸ் என்பது PDF ஃபைலா?

இ-புக்ஸ் என்பது PDF ஃபைல்கள் என்றே பலரும் கருதி வருகிறார்கள்.  இ-புக்ஸ்களை பயன்படுத்துவதற்கு PDF ஃபைல்களைப் படிப்பதைப் போல இருப்பதால் அப்படித் தோன்றலாம்.  மின்கருவிகளில் படிப்பதற்கு pdf  தவிர  epub, mobi என்ற ஃபைல் ஃபார்மேட்டுகள் உள்ளன.

இ-புக்ஸ்களை எதில் படிப்பது?

இ-புக்ஸ் என்பது கம்ப்யூட்டர்(டெஸ்க்டாப்), லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட், டேப்லெட் என அனைத்து மின்கருவிகளிலும் படிக்கக்கூடிய மின்னூல்கள்.

தவிர, மின்னூல்களைப் படிப்பதற்கு பிரத்யேகமாக கிண்டில் (Kindle), நூக் (Nook), கோபோ (Kobo) போன்ற மின்கருவிகளும் உள்ளன.

மொபைலிலேயே இ-புக்ஸ்களைப் படிக்கலாம் என்றால் எதற்காக மின்கருவிகளை வாங்க வேண்டும்?

ஸ்மார்ட்போன்களிலும், டேப்லெட் மற்றும் ஐபேட்களில் தொடர்ச்சியாக  மின்னூல்களைப் படிக்கும்பொது சில பக்கங்களைப் படிப்பதற்குள் கண்கள் வலிக்க ஆரம்பிக்கும். மின்னூல்களைப் படிக்க உதவும் மின்கருவிகள் E-ink திரை கொண்டவை. அந்தத் திரைகளில் படிக்கும்போது கண்கள் வலிக்காது.

அச்சுப் புத்தகங்களைப் போலவே இ-புக்ஸ்களைப் படிப்பது சுலபமா?

நிச்சயமாக.  ஃபான்ட்டின் அளவையும் அதிகரிக்கலாம், குறைக்கலாம். அப்படி மாற்றும்போது படிப்பதற்குப் பயன்படுத்தும் கருவியின் திரையின் அளவுக்கேற்ப பக்க அளவுகள் தாமாகவே மாறிவிடும். அதாவது, ஃபான்ட்டின் அளவுக்கு ஏற்ப ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படும் தகவல்களும் கூடும், குறையும். உதாரணத்துக்கு, ஐபோனில் படிக்கும்போது ஒருபக்கத்தில் 20 வரிகள் இருந்தால், ஐபேடில் 40 வரிகள் இருக்கும்.

மேலும் ஒவ்வொரு பக்கத்தையும் திருப்பும் வசதி, புக்மார்க் வைத்துக்கொள்ளும் வசதி, எந்தப் பக்கத்துக்கு வேண்டுமானாலும் செல்லும் வசதி  என ஏராளமான வசதிகள் உள்ளன.

அச்சுப் புத்தகங்களை கைகளில் வைத்துப் படிப்பதைப் போலவே மின்கருவிகளில் இ-புக்ஸ்களை படிக்க முடியும்.

கிண்டில் போன்ற மின்கருவிகள் எங்கு வாங்கலாம்?

அமேசான் நிறுவனத்தின் கிண்டில் கருவியை அமேசான் விற்பனைத்தளத்திலேயே வாங்கலாம். லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட்போன்களின் விலைக்கு நிகரான விலையில் கிடைக்கிறது.

மின்கருவிகள் இல்லாமல் ஸ்மார்ட்போனில் எப்படி இ-புக்ஸ்களைப் படிப்பது?

ஆண்ட்ராய்ட், ஐபோன் போன்ற ஸ்மார்ட்போன்களில்  இ-புக்ஸ்களைப் படிப்பதற்காகவே கிண்டில் அப்ளிகேஷன்கள் (App) உள்ளன. அவற்றை முற்றிலும் இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ளலாம். கிண்டில் மின்கருவியில் படிப்பதுபோலவே அத்தனை வசதிகளுடன் படிக்கலாம்.

கிண்டில் ஆப்கள் மூலம் இ-புக்ஸ்களை டெஸ்க்டாப், லேப்டாப், ஸ்மார்ட்போன், ஐபேட், டேப்லெட் என எல்லா சாதனங்களிலும் படிக்கலாம்.

இ-புக்ஸ்களை யார் வெளியிடுகிறார்கள்?

ஒருசில புத்தக பதிப்பளர்கள் தங்கள் புத்தகங்களை தாங்களே தங்கள் தளத்தில் இ-புத்தகங்களாக வெளியிட்டு விற்பனை செய்கிறார்கள்.

இன்று பல பதிப்பகங்கள் அமேசான் போன்ற தளங்களில் அவர்களுடன் விற்பனை ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விற்பனை செய்கிறார்கள்.

உலக அளவில் அமேசான் இ-புத்தகங்கள் பரவலாக மக்களைச் சென்றடைந்துள்ளன.

அமேசான் நிறுவனம் தன் கிண்டில் புக்ஸ்டோரில் தமிழ், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் மின்னூல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு துறைச்சார்ந்த  ஆயிரக்கணக்கான மின்னூல்களைக் கொண்டு வந்துள்ளது.

அமேசான் கிண்டில் அள்ளித் தரும் சலுகைகள்

இந்தியாவில் இ-புக்ஸ் பயன்பாட்டை அதிகப்படுத்த அமேசான்  நிறுவனம் பல போட்டிகள் வைக்கிறது. பரிசுகளையும் அள்ளிக்கொடுக்கிறது.

நூலகங்களில் புத்தகம் எடுத்துப் படிப்பதைப்போல இ-புக்ஸ்களை வாங்கிப்  படிப்போரை ஊக்கப்படுத்த  விருப்பமான புத்தகங்களை தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதிகள் உள்ளன. கிண்டில் அன்லிமிடெட் என்ற வசதி மூலம் ஒருவர் எத்தனைப் புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம்.

தவிர ஏகப்பட்ட தள்ளுபடிகளையும் வாரி வாரி வழங்குகிறது. ஒரு சில புத்தகங்களுக்கு திடீர் சலுகையாக ஒருநாள் மட்டும் விலையில்லாமல் படிக்கும் ஜாக்பாட் சலுகையையும் கொடுக்கிறது.

அமேசானில் இ-புகஸ்களை எப்படி வாங்குவது?

Amazon.in அல்லது amazon.com வெப்சைட்டுக்குள் சென்று நீங்கள் விரும்பும் இ-புக்கை கிளிக் செய்தால் அது உங்களை கட்டணம் செலுத்தி வாங்கும் பக்கத்துக்குக் கொண்டு செல்லும்.

உதாரணத்துக்கு இங்கு ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்ற சைபர் க்ரைம் விழிப்புணர்வு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

  1. இதில் Kindle Edition, Paper Pack என இரண்டு விவரங்கள் இருக்கும். இ-புத்தகத்தை வாங்க வேண்டும் எனில் Kindle Edition என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  2. இதில் Send a Free Sample என்ற விவரத்தைக் கிளிக் செய்து, Deliver To என்ற இடத்தில் நாம் கிண்டில் App ஐ ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் என எந்த சாதனத்தில் இன்ஸ்டால் செய்துள்ளோமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டால், அடுத்த 5 நிமிடங்களுக்குள் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் சில பக்கங்கள் மாதிரிக்காக அந்த சாதனத்துக்கு அனுப்பப்பட்டுவிடும். அதைப் படித்துப் பார்த்துப் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.
  3. மாதிரி பக்கங்களைப் படித்துப் பார்த்து இ-புக்கை வாங்க முடிவெடுத்துவிட்டால், Buy Now என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். உடனடியாக நாம் கட்டணம் செலுத்த வேண்டிய விவரம் குறித்த பக்கத்துக்கு அழைத்துச் செல்லும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியவுடன், நாம் தேர்ந்தெடுத்த இ-புக் கிண்டிலுக்கோ அல்லது கிண்டில் App இன்ஸ்டால் செய்து வைத்துள்ள சாதனக்களுக்கோ அனுப்பப்பட்டுவிடும்.
  4. மாதம் 169 ரூபாய் சந்தா கட்டினால் கிண்டில் அன்லிமிடெட் வசதியின் மூலம் எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கும் வசதியும் உள்ளது. இதற்கு Read for Free என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த செவ்வாய் கிழமை (ஜூன் 4, 2019)

எழுத்தாளர்கள் தாங்களாகவே இ-புக்ஸ்களை வெளியிட முடியும்.   அமேசான் கிண்டில் கொடுக்கும் வரப்பிரசாதம்… காத்திருங்கள்

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

மே 28, 2019

(Visited 110 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari