ஹலோ With காம்கேர் -84:  வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 84
March 24, 2020

கேள்வி:  வாழ்க்கைக்கும் OTP உண்டு தெரியுமா?

OTP – One Time Password குறித்து தெரியாதவர் யாரும் உண்டோ?

நம் வங்கி அக்கவுண்ட்தான், நாம் பணம் செலுத்தி பயணம் செய்யும் கார்தான்… ஆனாலும் அவர்கள் அனுப்பும் OTP பாஸ்வேர்ட் மூலம்தான் அவர்கள் சேவையை அனுபவிக்க முடிகிறது. இதில் நம் பாதுகாப்பும் இருப்பதால் நாமும் உடன்படுகிறோம்.

போலவே நம் பிறப்பு, நம் வாழ்க்கை, நம் குடும்பம் எல்லாமே நமக்கானதுதான், நம்முடையதுதான், நம் விருப்பம்தான். ஆனாலும் நம்மை செம்மைப்படுத்திகொள்ள, சீனா புகழ்  ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்ட வாசகங்களைப் போல, வாழ்க்கை நித்தம் நமக்கு யாரோ ஒருவர் மூலம் OTP பாஸ்வேர்டை அனுப்பி வைக்கிறது. அந்த ஒருவர் நம் அம்மா அப்பாவாகவோ, அண்ணன் தம்பியாகவோ, அக்கா தங்கையாகவோ, குழந்தையாகவோ இருக்கலாம். ஏன் ரயில்வே ஸ்டேஷன்களிலும், கோயில்களிலும், ஓட்டல்களிலும், சினிமா தியேட்டர்களிலும் நாம் எதேச்சையாக சந்திக்கின்ற முன்பின் அறியாத மனிதர்களாகக்கூட இருக்கலாம்.

அவர்களின் சின்ன சின்ன செயல்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்,  வார்த்தைகள் உருவாக்கும் சூழல்கள் இவைதான் நம் வாழ்க்கைக்கான OTP. இறை நம்பிக்கை உள்ளவர்கள் அதை தெய்வீக உணர்வாகவும், மற்றவர்கள் அதை இயற்கையின் அற்புதமாகவும் உணர்வார்கள். இறைவனோ இயற்கையோ எதிலாவது ஒரு நம்பிக்கை இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் பிடிப்பு.

பாண்டவ நாட்டை தர்மர் தலைமையிலான பாண்டவர்களிடம் இருந்து கைப்பற்ற துரியோதனன் தலைமையிலான கெளரவர்கள் திட்டம் தீட்டியதால் போர் மூண்டது.

வில்வித்தை வீரனான அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் சாரதியாகி பாண்டவர்கள் சார்பாக போர் களம் இறங்கினார்.

தன் எதிரே நிற்பது தன் உறவினர்கள். அவர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்று  ராஜ்ஜியம் அடைய வேண்டுமா? என்று அர்ஜூனன் மனம் கலங்கி நின்றபோது அவனுக்கு கிருஷ்ணன் வழங்கிய அறிவுரைதான் பகவத்கீதை.

‘எப்போதெல்லாம், எங்கெல்லாம் அநீதி தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அங்கெல்லாம் நான் அவதரிப்பேன். அநீதியை அழிப்பேன். நான் நான் என்று கூறுகிறாயே அர்ஜுனா? நான் என்பது எது? நான்தான் நீ! நீ தான்நான்! உன்னை இயக்குபவன் நான்…’ என்று தொடங்கி கீதா உபதேசம் செய்ய அர்ஜூனன் போருக்குத் தயார் ஆனான்.

இங்கு அர்ஜூனனுக்கு கிருஷ்ணரே சாரதியானதுடன் அவன் வெற்றி பெறவும் அறிவுரை கூறி வழி நடத்திச் செல்கிறார். கிருஷ்ணரின் அறிவுரை அர்ஜூனனுக்கான OTP.. அதை சரியாகப் பயன்படுத்தி அர்ஜூனன் போரில் வெல்கிறான்.

இப்படி இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து உதவ முடியாததால்தான் நாம் சந்திக்கின்ற மனிதர்கள் மூலம் ‘தெய்வம் மனுஷ ரூபனே’  என ஏதேனும் ஒரு ரூபத்தில் நமக்கான OTP பாஸ்வேர்டை அனுப்பி வைக்கிறார். புரிந்துகொள்பவர்கள் புத்திசாலிகள்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு OTP. ஒருவரது OTP மற்றவருக்கு உதவாது.

ஒருமுறை என் கண்ணாடி ஃப்ரேம் உடைந்துவிட என் சகோதரியின் 12 வயதேயான மகன் என்னிடம் சொன்ன ஒரு சிறு தகவல் எனக்குள் பெரிய வெளிச்சத்தை உண்டு செய்தது.

‘பெரிமா… நீ ஏன் என்னைப் போல பெரிதாக நல்ல தடி ஃப்ரேம் போட்ட கண்ணாடி போட்டுக்கொள்ளக் கூடாது… விஷனுக்கும் நல்லதாக இருக்குமே…’

‘எனக்கு அது சூட் ஆகாது கண்ணா…’

‘முதலில் ஹெல்த்தான் முக்கியம். அப்புறம்தான் அப்பியரன்ஸ்…’

இதுதான் இந்த நிகழ்வு எனக்குக் கொடுத்த OTP. சொன்னது யார், எப்படிச் சொல்லலாம், எதற்காகச் சொன்னார்கள் என காரண காரியங்களை ஆராயாமல் அதிலுள்ள நியாயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் நாம் நமக்களிக்கப்பட்ட பாஸ்வேர்டை சரியாக பயன்படுத்துகிறோம் என வைத்துக்கொள்ளலாம். விதண்டாவாத சிந்தனைகளுடன் யோசித்துக்கொண்டிருந்தால் பாஸ்வேர்ட் தவறாகி இயக்கம் தடுமாறுவதோடு சிந்தனைக் குழப்பமும் தெளிவின்மையுமே உண்டாகும்.

எந்த ஒரு விஷயம் நமக்குள் ஒரு சிறு அசைவையாவது ஏற்படுத்துகிறதோ, அதுவே நமக்கு அளிக்கப்பட்ட OTP. அதைப் பிடித்துக்கொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

குறிப்பு
‘புதியதலைமுறை பெண்’ மாத இதழில் ஒவ்வொரு மாதமும்
‘வாழ்க்கையின் OTP என்ற தலைப்பில் தொடர் எழுதி வருகிறேன்.
2018-ம் ஆண்டு தொடங்கிய இந்தத் தொடர் இன்னமும் தொடர்கிறது.
அதில் நான் எழுதிய முதல் கட்டுரையின் சிறு பகுதிதான் இது.

(Visited 7 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari