ஹலோ With காம்கேர் -147: யார் பிரபலம்,  பிரபலங்களை கொண்டாடுவது ஏன்?

ஹலோ with காம்கேர் – 147
May 26, 2020

கேள்வி:   யார் பிரபலம்,  பிரபலங்களை கொண்டாடுவது ஏன்?

நம்மை விட பிறரை ஒருபடி உயர்வாக நினைப்பதால்தான் பணத்தினாலோ, பதவியினாலோ, திறமையினாலோ, கலையினாலோ அல்லது இன்ன பிற காரணங்களினாலோ நம்மைவிட ஒருபடி மேலிருப்பவர்களை பலரும் தங்கள் மனதுக்குள் கொண்டாடி மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பிரபலம் என்ற அந்தஸ்த்தையும் வாரி வழங்குகிறார்கள்.

சமயம் கிடைக்கும்போது பேசவும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டத்தில் முட்டி மோதியாவது நேரில் சந்தித்து ஒரு செல்ஃபியாவது எடுத்துவிடவும் துடிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பதிவேற்றி லைக்குகளை அள்ளத் துடிக்கிறார்கள். தங்களின் மதிப்பை பிறரது மதிப்பின் மூலம் கூட்டிக்கொள்ளும் சிறு முயற்சி அது. அவரவர்கள் மனமுதிர்ச்சிக்கு ஏற்ப அந்தத் துடிப்பின் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற ஆழமான மனமுதிர்ச்சி பெற்றவர்களால் மட்டுமே பிரபலங்கள் என ஊர் உலகமே கொண்டாடி மகிழ்பவர்களை ஒரு அடி தள்ளியே வைத்து அழகுபார்க்க முடியும். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், தன் சுயத்தை துல்லியமாக எடை போடத் தெரிந்தவர்கள் யாரையும் பிரபலம் என தூக்கியும் வைக்க மாட்டார்கள், எவரையும் அற்பம் என தூக்கி எறியவும் மாட்டார்கள்.

அந்தப் பக்குவம் எனக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது. பெற்றோரின் வளர்ப்பும் முதன்மைக் காரணம்.

டிரைவிங் லைசன்ஸ் என்றொரு மலையாள திரைப்படம் பார்த்தேன். ஒரு  ரசிகனுக்கும், அவனது ஆதர்ச நாயகனுக்கும் நடக்கும் ஈகோ மோதேலே கதை.

மோட்டார் வாகன ஆய்வாளர் (சுராஜ் வெஞ்சரமூடு) திரைப்பட நடிகர் ஹரீந்தரனுக்கு (பிரித்விராஜ்) அதிதீவிர ரசிகர்.

பிரித்விராஜ் சம்மந்தப்பட்ட ஒரு கிளைமேக்ஸ் காட்சியை ராணுவப் பகுதியில் படமாக்குவதற்கு அனுமதி பெற அவருடைய டிரைவிங் லைசன்ஸ் தேவைப்படுகிறது. அது அவரிடம் காணாமல் போனதும் அது சம்மந்தப்பட்ட டாக்குமெண்ட்டுகள் ஆர்டிஓ அலுவலகத்தில் தொலைந்துபோனதும் தெரிய வருகிறது. இதனால் புது டிரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க வேண்டிய சூழல்.

பிரித்விராஜின் அரசியல் நண்பர் மூலம் இந்தப் பணி சுராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. தன் அபிமான நடிகருக்கு உதவி செய்யப் போகிறோம் என்ற நினைப்பே அபரிமிதமான ஆனந்தத்தைக் கொடுக்கிறது அவருக்கு. ஒரு ஃபார்மாலிடிக்காக பிரித்விராஜை ஆர்டிஓ அலுவலகத்துக்கு வந்து செல்லுமாறு சொல்கிறார். அவர் வரும் நாளுக்காக காத்திருக்கிறார். கனவில் தனியாகப் பாடுகிறார். ஆடுகிறார். மகனைக் கொஞ்சுகிறார்.  மனைவியுடனும் கைக்கோர்த்துக்கொண்டு ஆடி தன் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கிறார். அவருக்காக பரிசையெல்லாம் தயார் செய்து வைக்கிறார். தன் அபிமான நடிகருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் அந்த நொடிக்காக தவம் இருக்கிறார்.

பிரித்விராஜ் ஆர்டிஓ அலுவலகம் வரும் நிகழ்வை எத்தனைப் பிரயத்தனப்பட்டு இரகசியமாக வைத்திருக்க முயன்றும் விஷயம் கசிந்து மீடியா அவரை சூழந்துகொள்ள எரிச்சல் அடைகிறார் பிரித்விராஜ்.

பிரித்விராஜின் வருகைக்காக தன் அலுவலகத்தில் தன்னுடைய மகனுடன் கிஃப்ட்டுடன் பல கனவுகளுடன் காத்திருக்கிறார்.

ஆனால் நடந்ததோ வேறு. மீடியா தன்னை இனம் கண்டு கொண்டு டிரைவிங் லைசன்ஸ் இல்லாமலா இத்தனை நாட்கள் வண்டி ஓட்டி இருக்கிறார் என்ற கேள்விக்குறி போட்டு அந்த விஷயத்தை தலைப்பு செய்தியாக்கிவிட்டதற்கு சுராஜ்தான் காரணம் என்று அவர் மீது கடும் கோபம் கொள்கிறார்.

அவரது முதல் சந்திப்பிலேயே சுராஜின் மகன் முன்னிலையிலேயே அவரை கடுமையாகத் திட்டி விடுகிறார். மகன் பயத்தில் அழவே ஆரம்பித்துவிடுகிறான். தான் மிகவும் மதிக்கும் ஹீரோ தன்னை மதிக்காமல் பல முன்னிலையில் குறிப்பாக தன் மகனின் முன்பே அவமானப்படுத்தும்போது இத்தனை நாட்கள் அவர் மனதுக்குள் கொண்டாடி வந்த பிரமாண்ட நடிகர் என்ற பிம்பம் சரிந்து விழுகிறது. அவரும் சுக்கல் நூறாக உடைந்து போகிறார்.

கடுமையான மோட்டார் வாகன ஆய்வாளராக சுராஜூக்கும், நடிகரான பிரித்விராஜூக்கும் இடையேயான மோதல்தான் டிரைவிங் லைசன்ஸ்.

திரைப்பட விமர்சனத்துக்காக இதைச் சொல்லவில்லை. தூரத்தில் இருந்து நாம் ரசிக்கும் பல விஷயங்கள் அருகே சென்று பார்க்கும்போது அசாதரண விஷயங்களாகி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவரவர்கள் துறையில் சிறப்பாக, நேர்மையாக, ஒழுக்கமாக பணி செய்பவர்களே என்னைப் பொருத்தவரையில் பிரபலம். அவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவது கொண்டாடுபவருக்கும், கொண்டாடப்படுபவருக்கும் கஷ்டத்தைத்தான் கொடுக்கும்.

கொரோனா காலத்து சமூக இடைவெளியைப் போல எல்லோரிடமும் போதுமான இடைவெளியை கடைபிடிப்பது சுமூகமான நல்லுறவுக்கு வழிவகுக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 357 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon