ஹலோ With காம்கேர் -220: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே!

ஹலோ with காம்கேர் – 220
August 7, 2020

கேள்வி: கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல துறப்பதும் தர்மமே என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

தர்மம் என்பது யாரும் கேட்காமலேயே பிறர் நிலை அறிந்து கொடுப்பது. என்னைப் பொறுத்தவரை பிறர் நிலை அறிந்தும், நம் நிலை உணர்ந்தும் சில விஷயங்களை துறப்பதும் தர்மமே. கொடுப்பதைவிட துறப்பது கடினம். ஆனால் அதுவே மிக மிக உயரிய தர்மம்.

குடிப்பவர்களிடமும், சிகரெட் பிடிப்பவர்களிடமும் பேசிப் பாருங்கள். என்னவோ அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சனைகள் இருப்பதை போலவும், அவற்றை மறக்கவே அந்தப் பழக்கங்களுக்கு அடிமையானதாகவும் சொல்வார்கள்.

இது எப்படி தெரியுமா இருக்கிறது. வீட்டில் ஒரு அறையில் பல்லி இறந்து கிடந்தால் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க ஊதுவத்தி ஏற்றி வைத்தோ அல்லது ரூம் ஸ்ப்ரேயரோ அடித்து கதவை நன்றாக திறந்து வைத்து அந்த நாற்றத்தை தற்காலிகமாக துரத்துவதைப் போல உள்ளது.

ஊதுவத்தி எரிந்து முடிந்தவுடன், ரூம் ஸ்ப்ரேயர் காற்றில் கரைந்தவுடன் திரும்பவும் துர்நாற்றம் வரத்தான் செய்யும். நிரந்தரமாக துர்நாற்றத்தைப் போக்குவதற்கு இறந்து கிடக்கும் ஜந்துவை கண்டறிந்து அறையைவிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

போலவே, பிரச்சனையின் அடிநாதத்தை கண்டறிந்து அதில் இருந்து மீள்வதற்கும் அதை தீர்ப்பதற்கும் முயன்றால் மட்டுமே பிரச்சனைகளில் இருந்து வெளிவந்து நிம்மதியாக இருக்க முடியும்.

சிகரெட், மது இவை மன அமைதியைக் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு புதை குழி என தெரிந்தும் தங்கள் காலை தாங்களே அதில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே தங்களை அழித்துக்கொள்வதற்கு சமம்.

இவர்களைப் போன்றவர்கள் தங்களை மட்டும் இல்லாமல் தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், தாங்கள் வாழும் இந்த பூமிக்கும் துரோகம் செய்பவர்களே.

புகைத்து தங்கள் நுரையீரலை சீரழித்துக்கொள்வதுடன் தாங்கள் வெளியிடும் புகையினால் காற்றையும் மாசுபடுத்துகிறார்கள். தங்கள் வாழ்நாளை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் பிறரது உடல்நிலையை சீரழிக்கவும் அவர்களின் வாழ்நாளை குறைக்கவும் இவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது? இதே நியதிதான் குடிப்பவர்களுக்கும்.

வன்கொடுமைகள், வயது வித்தியாசமின்றி பாலியல் பலாத்காரங்கள், தந்தையே மகளை சீரழித்தல், தாத்தாக்கள் பேத்திகளை காமக்கொடூரங்கள் செய்தல், கொலை, கொள்ளை, விபத்துகள் போன்றவை பெரும்பாலும் போதையில் இருக்கும்போது நடப்பவைதான்.

இல்லையெனில் இரண்டு வயது மூன்று வயது குழந்தைகளிடமும் காமத்தை எதிர்பார்த்து சீரழிக்க முயன்று கொலை செய்ய துணிவு வருமா? பேத்தியின் தோழிகளுக்கு வலை விரிக்க மனம் வருமா?

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பதைப்போல போதை தலைக்கேறினால் அடிப்படையில் தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வையே மறந்துவிடுகிறார்கள். மனிதத்தன்மையில் இருந்து விலகி கொடூரர்களாகி விடுகிறார்கள்.

மதுவோ, சிகரெட்டோ அல்லது அதற்கு நிகரான வேறெந்த பழக்கமோ அவற்றை விலக்கி வைப்பதுகூட மிகப்பெரிய தர்மமே. உங்களுக்கும் உங்களைச் சேர்ந்த உறவுகளுக்கும், நீங்கள் சார்ந்து இயங்கும் இந்த சமுதாயத்துக்கும் செய்யும் ஆகச் சிறந்த தர்மம்.

தர்மம் என்பது காசாகவோ பொருளாகவோ கொடுப்பது மட்டும் அல்ல. பிறர் நிலை அறிந்து அவர்கள் கேட்காமலேயே கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல, பிறர் நிலை அறிந்தும் தங்கள் நிலை உணர்ந்தும் பிறர் சொல்லாமலேயே தம்மிடம் உள்ள சிலவற்றைத் துறப்பதும் தர்மமே.

ஆம். அந்த வகையில் மது சிகரெட் போன்ற பழக்கத்துக்கு அடிமையானவர்கள் தங்கள் உடல்நலத்தையும் பிறர் உடல்நலத்தையும் காக்கவும், கொலை கொள்ளை வன்கொடுமைகள் போன்ற கொடும் துன்பங்கள் எதுவும் இல்லவே இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் யாருமே யாசகம் கேட்காமல் தாங்களே தங்கள் நிலை அறிந்து தங்களின் போதை பழக்கத்தை துறப்பதுதான் இருப்பதிலேயே மிக உயரிய தர்மம்.

தர்மம் செய்ய இப்படியும் ஒரு வழி உள்ளது. யார் யாரெல்லாம் இந்த வழியில் தர்மம் செய்ய நினைக்கிறீர்களோ கிளம்பலாம். ரெடி ஸ்டார்ட்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 7 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari