ஹலோ With காம்கேர் -225: வாழ்க்கை எனும் பரிசு! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 225
August 12, 2020

கேள்வி: வாழ்க்கை எனும் பரிசை நீங்கள் எப்படி கொண்டாடுகிறீர்கள்?

காபியை கொதிக்கக் கொதிக்க சூடாக குடிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் சூடு குறைவாக இருந்தாலே அதன் சுவை குறைந்துவிட்டதைப் போல உணர்வார்கள். அதுபோன்ற சூழலில் காபி டம்ளரை உதட்டில் வைத்து சாப்பிடாமல் டம்ளரைத் தூக்கி காபியை வாயில் விட்டு குடித்தால் சூடு கொஞ்சம் அதிகம் இருப்பதைப் போல உணர முடியும்.

சாப்பிடும்போது நமக்குப் பிடிக்காத காய் ஏதேனும் இருந்தால் அதை முதலில் சாப்பிட்டுவிட்டால் நமக்குப் பிடித்ததை ரசித்து சாப்பிடலாம். மேலும் வேண்டாம் என எதையும் ஒதுக்கவோ அல்லது பிடிக்கவில்லை என எதையும் வீணடிக்கவும் செய்யாமல் உண்ணும் உணவுக்கு மரியாதை தர இது ஒரு நல்ல வழி.

நமக்குப் பிடித்த தின்பண்டமாக இருந்தால் அதை அதீத ஆர்வத்தில் வேக வேகமாக சாப்பிட்டால் சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இன்னும் சாப்பிட தோன்றும். அதனால் நம் தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுவிடுவோம். கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக சாப்பிட்டால் நிறைய சாப்பிட்டதைப் போல மனநிறைவு கிடைக்கும். ருசியும் வாயிலும் மனதிலும் நீண்ட நேரத்துக்கு நிறைந்து நிற்கும். சரியான அளவு சாப்பிட இது ஒரு யுக்தி.

தாகமாக இருக்கும்போது நம் எல்லோருக்குமே ஜில்லென்ற நீர் பருகவே தோன்றும். வேக வேகமாக ஃப்ரிட்ஜைத் திறந்து குளிர்ந்த நீரையே பருகுவோம். அது அப்போதைக்கு தாகத்தைத் தீர்த்தாற்போல இருந்தாலும் சில நிமிடங்களிலேயே திரும்பவும் தாகம் எடுக்க ஆரம்பித்துவிடும். மாறாக தாகம் எடுக்கும்போது சூடான தண்ணீர் சாப்பிட்டால் தாகம் உடனே அடங்கிவிடும்.

தாகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலையில் எழுந்தவுடன், காபி டீ சாப்பிடும் முன்னர், உணவு உண்ணும் முன்னர், குளிக்கும் முன்னர், தூங்கும் முன்னர், உடற்பயிற்சிக்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் அசிடிட்டி, இரத்த அழுத்தம், உடல் வறட்சி போன்றவை குறைந்து  நம் உடல் உறுப்புகள் சீராக இயங்கும்.

அதுபோல நன்றாக பசி எடுக்க ஆரம்பித்து வயிறு ‘கப கப’-வென பசியால் துடிக்கும்போது சாப்பிட அமர்ந்தால் வழக்கத்துக்கு மாறாய் இரண்டு மடங்கு அதிகம் சாப்பிட்டு விடுவோம். பசி வருவதற்கு முன்னரோ அல்லது பசியை லேசாக உணர ஆரம்பிப்பதற்கு முன்னரோ சாப்பிட்டால் சரியான அளவு சாப்பிடலாம்.

எதுவாக இருந்தாலும் ஒரு நேரம் வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் சாப்பிடும்போது வயிறு குழப்பமில்லாமல் அதை உள்ளே எடுத்துக்கொள்ளும். இந்த நேரத்தில் இது கிடைக்கும் என புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தன் பணிகளை செய்யும். அதைவிட்டு கிடைத்ததையெல்லாம் நினைத்த நேரத்தில் வேண்டுமோ வேண்டாமோ உள்ளே தள்ளிக்கொண்டிருந்தால் வயிற்றுக்குக் குழப்பமே உண்டாகும். குறிப்பாக ஜீரண உறுப்புகள் சரியாக இயங்காமல் செரிமானப் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து சர்க்கரை நோய், இதய நோய் என ஒவ்வொன்றாக உங்கள் உடம்புக்குள் நுழையக் காத்திருக்கும் அத்தனை வியாதிகளையும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அனுப்பும்.

நாம் எல்லோருமே பசி எடுக்கும்போது சாப்பிடுகிறோம். தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம். ஆனால் அதையே ஒரு வரைமுறையோடு செய்யும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒருவேளை ஏதேனும் நோய்கள் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வல்லமையையும் கொடுக்கும்.

உண்ணும் உணவை ரசித்து ருசித்து சாப்பிடுவதற்கே இத்தனை சூட்சுமங்கள் இருக்கும்போது நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் அவை நல்லதோ கெட்டதோ அவற்றை எதிர்கொள்ள எத்தனை வழிகள் இருக்கும். அந்த சூட்சுமத்தை கண்டறிந்துகொண்டால்போதும் எப்படிப்பட்ட சூழலையும் நம்மால் சமாளிக்க முடியும். ஜமாய்க்க முடியும்.

பிறந்த எல்லோரும்தான் வாழ்கிறோம். நேர்மையாகவும் மனசாட்சிக்கு விரோதமில்லாமலும் வாழ்கிறோமா என்பதில்தானே அவரவர்கள் வித்தியாசப்படுகிறோம்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்பவர் ஒரு ரகம். எப்படியும் வாழலாம் தவறில்லை, கொள்கையாவது மண்ணாவது என அறத்தைப் புறந்தள்ளி வாழ்பவர்கள் மற்றொரு ரகம். வாழ்க்கை அனைவருக்கும் கொடுக்கப்பட்ட பரிசு. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் வைத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். அதை துவம்சம் செய்து தூக்கி எறிந்து நாசம் செய்பவர்கள் மற்றொரு ரகம். அவரவர் வாழ்க்கை. அவரவர் சாய்ஸ்.

நான் முதல் ரகம். அப்போ நீங்க?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர்  17,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari