ஹலோ With காம்கேர் -282 : எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா?


ஹலோ with காம்கேர் – 282
October 8, 2020

கேள்வி: எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறும் என்பது சரியா?

சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஜெனலியா ஒருநாள் தன் காதலன் ஜெயம்ரவி வீட்டில் சாப்பிடும்போது, அவர்கள் வீட்டில் அனைவரும் சாப்பாடு மேலே சிந்தாமல் இருப்பதற்கு கழுத்தில் துணி கட்டிக்கொண்டு சாப்பிடுவார்கள். ஆனால் ஜெனலியா அப்படிச் செய்யாமல் சாப்பிடும்போது  ‘என்ன உங்க வீட்டில் இதெல்லாம் சொல்லித் தரவில்லையா?’ என்று கேட்க ‘மேலே சிந்தாமல் இருக்க துணி கட்டிக்கொள்ள கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் சிந்தாமலேயே சாப்பிடக் கற்றுக்கொடுத்திருக்கிறார் என் அப்பா…’ என்று சொல்வார்.

இதே தத்துவத்தை நம் வாழ்க்கையில் எல்லா விஷயங்களோடும் ஒப்பிட்டுக்கொள்ளலாம். சினிமா பார்த்துத்தான் வாழ்க்கைத் தத்துவத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமா என யாரும் கொடிபிடிக்க வேண்டாம்.

புத்தகங்கள், திரைப்படங்கள், மனிதர்கள் இப்படி எல்லாவகையிலும்தான் வாழ்க்கை அனுபவங்களை பெற வேண்டியுள்ளது. எல்லாவற்றிலும் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளப் பழகலாமே.

பிரச்சனைகளே வராமல் வாழ கற்றுக்கொள்வது, பிரச்சனைகள் வந்துவிட்டால் அதில் இருந்து மீண்டு வாழப் பழகுவது இரண்டுமே வாழ்க்கைக்கு அவசியமானது.

பிரச்சனைகள் அதிகம் (Note this point) வராமல் இருக்க ஒழுக்கமான வாழ்க்கை முறையும் சுயகட்டுப்பாடும் உதவி செய்யும். ஒழுக்கமாக வாழ்பவர்களுக்கு பிரச்சனைகளே வராதா என யாரும் கொடி பிடித்துக்கொண்டு வர வேண்டாம். நான் என எழுதி இருக்கிறேன் என மீண்டும் ஒருமுறை நன்றாக படித்துப் பாருங்கள். பிரச்சனைகள் அதிகம் வராமல் இருக்க என்றே எழுதியுள்ளேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் பிரச்சனை வரும்தான். அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப இயங்கும் தளத்துக்கும் களத்துக்கும் ஏற்ப பிரச்சனைகள் புதுப்புது அவதாரங்கள் எடுக்கும். மற்றபடி யாரும் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

எல்லா காலங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். முன்பெல்லாம் நல்லவர்கள் அதிகமாகவும் கெட்டவர்கள் குறைவாகவும் இருந்தார்கள்.  ‘அதோ அவன் கெட்டவன்… கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என கை நீட்டி சொல்ல முடிந்தது. இன்று அந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளதால் ‘அதோ அவர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர்… அவரிடம் சென்றால் உங்களுக்கான தீர்வு கிடைக்கும்’ என சொல்கிறோம்.

எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறுகிறது.

யாருக்கேனும் நான் என்ன சொல்ல வருகிறேன் என புரியவில்லை என்றால் “எல்லா காலங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள். முன்பெல்லாம் நல்லவர்கள் அதிகமாகவும் கெட்டவர்கள் குறைவாகவும் இருந்தார்கள்.  ‘அதோ அவன் கெட்டவன்… கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என கை நீட்டி சொல்ல முடிந்தது. இன்று அந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளதால் ‘அதோ அவர் ரொம்ப நல்லவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர்… அவரிடம் சென்றால் உங்களுக்கான தீர்வு கிடைக்கும்’ என சொல்கிறோம்” என்பதை ஒருமுறைக்கு இருமுறையாக படித்துப் பாருங்கள். எண்ணிக்கையில் எது குறைவாக இருக்கிறதோ அதுவே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நான் ஏன் சொல்கிறேன் என்பது புரியும்.

ஒழுக்கமான கட்டுக்கோப்பான வாழ்க்கைமுறையில் நாமாக சென்று சிக்கலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் குறைவு. இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கட்டற்ற சுதந்திரத்தில் நம்மை நோக்கி வரும் பிரச்சனைகளுடன், நாமாக வலிய சென்று மாட்டிக்கொள்ளும் பிரச்சனைகளும் சேர்ந்துகொண்டு பிரச்சனைகளின் எண்ணிக்கையை  அதிகமாக்கிவிடும்.

நன்றாக கவனித்துப் பார்த்தால் சக மனிதர்களாலும், நோயின் தாக்கத்தினாலும்தான் பிரச்சனைகள் உருவாகின்றன. நோயின் தாக்கத்தை யாராலும் தவிர்க்க முடியாது. சில நோய்கள் பாரம்பரியமாக வழிவழியாக வருவதாக சொல்கிறார்கள். தற்காப்புடன் தகுந்த சிகிச்சையுடன் கடந்து செல்ல வேண்டியதுதான் ஒரே வழி.

சக மனிதர்களால் வரும் பிரச்சனைகளை நம் சாதுர்யத்தால் ஓரளவுக்கு தவிர்க்க முடியும். நம் சாதுர்யம் சிறப்பாக தேவையான நேரத்தில் நமக்குக் கைக்கொடுக்க வேண்டுமானால் ஒழுக்கமும் சுயகட்டுப்பாடும் அவசியம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 52 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon