ஹலோ With காம்கேர் -290 : வயோதிகத்தில் அதிகம் கஷ்டம் கொடுப்பது என்ன தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 290
October 16, 2020

கேள்வி: வயோதிகத்தில் அதிகம் கஷ்டம் கொடுப்பது என்ன தெரியுமா?

சமீபத்தில் ஒரு பாட்டியை சந்தித்தேன். வயது 70+ இருக்கும். வயதில் பெரியோர்களை சந்தித்தால் அவர்களிடம் அமர்ந்து நிதானமாக சில நிமிடங்கள் பேசுவது வழக்கம். அன்றும் அப்படியே.

எல்லா கஷ்டங்களையும்விட வயோதிகம் மிகக் கொடுமை என்பது என் கருத்து. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை தலை நிமிர்த்திவிட்டு ‘அக்கடா’ என அமர்ந்து ஓய்வெடுக்கலாம் என நினைக்கும்போது தன் இணையை இழக்கும் சோகம் ஒரு பக்கம், பிள்ளைகளின் பாராமுகம் மறுபக்கம். கூடவே பழைய நினைவுகளின் தாக்கம் என்று அவர்களை அலைகழிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

நான் சந்தித்த பாட்டியின் கணவர் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த பிறகு, தன் இரண்டு பிள்ளைகளிடமும் மாறி மாறி இருந்து வருகிறார். கணவரின் பென்ஷன் வருகிறது. அதை இரண்டு பேரும் பங்கிட்டு எடுத்துக்கொள்கிறார்கள். இத்தனைக்கும் அவர்களும் அவர்களின் மனைவியும் நல்ல பணியில் குறைவில்லாமல் சம்பாதிக்கிறார்கள்.

தன் கணவரின் பென்ஷன் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர டெபாசிட்டில் போட்டு வைக்கிறார்கள். அது எதற்காக என்றால், அவர் இறந்துவிட்டால் காரியங்கள் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்ற பெரிய மனது.

கொஞ்ச நேரம் பேசியதும் அவர் நெகிழ்ச்சியாக மெதுவாக என்னிடம், “யாருக்கும்மா வேணும் இந்த டெபாசிட்டும் அதுவும் இதுவும், என் கையில ஆயிரம் ரூபாய் இருந்தா பேரன் பேத்தி பிறந்தநாள் அது இதுன்னு வந்தா அவர்கள் கையில்  ‘இந்தாப்பா ஏதேனும் உனக்குப் பிடித்ததை வாங்கிக்கோ’ என்று கொடுத்து ஆசிர்வதிக்கலாம். வெறும் கையுடன் அம்போன்னு உட்கார்ந்திருந்திருப்பதைப் போல் இருக்கிறது…’ என்று கசியும் கண்களுடம் பேசினார். வாயில் மாஸ்க் போட்டிருந்ததால் முகத்தில்  கண்கள் மட்டும் மிகப் பிராதனமாய் தெரிய அதில் வலியும் அப்பட்டமாக தெரிந்தது.

‘நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் தைரியமாக சொல்லலாமே பாட்டி. எனக்கு கொஞ்சம் கையில் காசு வேண்டும் என்று…’ என்றேன். என்  மாஸ்க்கைத் தாண்டி குரல் அவர் காதுகளில் சரியாக விழவில்லை என்பதால் என் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் கொஞ்சம் சப்தமாக சொன்னேன் சைகையுடன் சேர்த்து.

‘சொல்லியாச்சும்மா, உனக்கெதுக்கு காசு. வெளியில் போகப் போறியா, சாமான் வாங்கப் போறியா, என்ன வேண்டுமோ கேள். கையில் காசு இருந்தால் எங்காவது தொலைத்து விடுவாய். எது வேண்டுமானாலும் வாங்கித் தர நாங்கள் இருக்கிறோம்..’ என்று பிடிவாதமாய் கையில் காசு கொடுக்க மறுக்கிறார்கள்.

நான் அமைதியாக இருந்ததால் அவரே தொடர்ந்தார்.

‘என் கணவனின் பென்ஷன் தானே… எனக்குத்தானே வரணும்… நான் தானே அவர்களுக்குக் கொடுக்கணும்… ஆனால் என் பிள்ளைகள் என் கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார்கள்… கோயில் குளம் என்று போனால் வழியில் தென்படும் ஏழைகள் யாரேனும் கை நீட்டினால்கூட  காசு போட வக்கில்லாதவலா ஆயிட்டேன்…’ என்று சொல்லி கொஞ்சம் விசும்பவே விசும்பினார்.

‘எல்லாம் சரியாயிடும்’ என்று நான் சமாதானப்படுத்தியபோது அவசரமாக கைகளை இன்னும் இறுக்கமாக அழுத்தியபடி ‘இதையெல்லாம் என் பிள்ளைகளிடம் சொல்லிடாதம்மா… அப்புறம் வருகிறவர்கள் போகிறவர்களிடம் எல்லாம் எங்களைப் பற்றி குறை சொல்லிக்கொண்டு இருக்கிறாயா என திட்டி வீட்டில் அறையை தாண்டவிடாமல் செய்துவிடுவார்கள். இப்போது எனக்கு இந்த வீட்டு வாசல்வரை வந்து அமர சுதந்திரம் இருக்கிறது…’ என்றார்.

இவருடைய இந்த நிலையை வயதில் மூத்த பெரியோர்களின் ஒட்டுமொத்த முகமாக எடுத்துக்கொள்ளலாம்.

உண்மைதான். மனிதனுக்கு மிகப் பெரிய பலம் நிரந்தர சம்பளம், நல்ல குடும்பம், குழந்தைகள். அதை அடுத்து உற்றார், உறவினர், நண்பர்கள்.

இவை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய பலமாக இருப்பது என்ன தெரியுமா? நம் கைகளால் நாமே எடுத்து செலவு செய்யும் வகையில் பணம் வைத்துக்கொண்டிருப்பது.

பெற்ற பிள்ளைகள்தான். கேட்டால் கொடுக்கப்போகிறார்கள். ஆனாலும் காரணம் சொல்லி, விளக்கம் சொல்லி, அதையும் அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லி இப்படி ஏகப்பட்ட ‘சொல்லி’-களைக் கடந்தல்லவா வரவேண்டும்.

தங்களுக்கு சொந்தமான பணத்தை தாங்களே யாசகம் கேட்பதைப் போல கூனிக் குறுகி கேட்கும் சூழலை உங்கள் பெற்றோர்களுக்கு வைக்க வேண்டாமே.

நம்மை பெற்று, வளர்த்து, ஆளாக்கி இந்த சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வருவதற்கு காரணகர்த்தாவான நம் பெற்றோருக்கு பிரதிபலனாய் இதைக்கூட செய்ய முடியாதா என்ன?

பெற்றோர்களை நிற்க வைத்து தினமும் நமஸ்கரிக்கச் சொல்லவில்லை. நேரம் கிடைக்கும்போது பொறுமையாய் அவர்கள் பேச நினைப்பதை காதுகொடுத்து கேட்பதும், அவர்கள் கைகளில் எடுத்து செலவு செய்வதற்கு வசதியாய் கொஞ்சம் பணமும் இருக்குமாறும் பார்த்துக்கொள்வோம்.

அவர்கள் உங்களிடம் பாரபட்சம் காட்டி வளர்த்திருக்கலாம். உங்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டலாம். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமே. இனி எதையும் எடுத்துச் சொல்லி மாற்ற முடியப் போவதில்லை.

அவர்கள் நடந்து கொண்டதைப் போலவே நீங்களும் நடந்துகொள்ள வேண்டிய அவசியம் அல்லவே.

உங்கள் பெற்றோர் எப்படி நடந்துகொண்டிருக்கலாம் என நீங்கள் ஆசைப்பட்டீர்களோ அப்படி உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் நடந்து கொள்வது மட்டுமே நடைமுறையில் சாத்தியம். பெரியோர்களை மதிப்போம். பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 54 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon