ஹலோ With காம்கேர் -364: இருபது வயதில் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டுமா?


ஹலோ with காம்கேர் – 364
December 29, 2020

கேள்வி: இருபது வயதில் என்னைப் பற்றி கவிதை எழுதிக்கொடுத்தவரை தெரிந்துகொள்ள வேண்டுமா?

நமக்குக் கிடைக்கும் அனுபவங்களும் சூழல்களும் நம் சுபாவத்தை இயல்பை மென்மேலும் இறுக்கி பலப்படுத்தும் என்பது என் கருத்து.

அந்த வகையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களும் எனக்குக் அமையப்பெற்ற சூழல்களும் எனக்கு வரமாகவே அமைந்திருந்தது. என் இயல்பை சிதைக்கும் எந்தவொரு சூழலிலும் சிக்காமல் அருமையான பாதையை வாழ்க்கை எனக்கு அமைத்துக்கொடுத்தது. அப்படியே சிக்கல்கள் உண்டாகும் சூழல் உருவானால்கூட என் இயல்பினாலும் சுபாவத்தினாலும் அந்தச் சூழலை சமாளிக்கும் பக்குவமும் பெற்றோரின் ஆதரவும் இருந்ததால் சிக்கல்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் எனக்கான பாதையில் தைரியமாக நடைபோட முடிந்தது.

எந்த ஒரு சிறிய அசாதாரண சூழல் உருவானாலும் அதை பணம், பதவி, பட்டம் இவற்றுக்காக அனுசரித்துச் செல்லாமல் அப்படியே விட்டு விலகிவிடும் துணிவு இருந்ததால் எதையும் தூக்கிச் சுமக்காமல் இலகுவாக என் பயணத்தைத் தொடர முடிகிறது. அதனால் நான் இழந்தது எதுவும் இல்லை. என்னை விட்டு விலகிச் செல்வதை நான் இழப்பாகக் கருதினால்தானே அது இழப்பு என சொல்ல முடியும்.

கல்லூரிப் படிப்பை முடிக்கும் காலம்வரை நான் யாருடனும் கலகலப்பாக பேச மாட்டேன். அதென்ன கலகலப்பு, வாயைத் திறந்து பேசவே காசு கொடுக்க வேண்டும் என்று சொல்வார்களே அதுபோல்தான் அமைதியாக இருப்பேன். நானுண்டு, என் வேலையுண்டு என்றிருப்பேன். வெளியில் சட்டென யாருடனும் பழகி விட மாட்டேன். புற வலிமையைவிட அகவலிமை அதிகம். வெளியில் கூச்ச சுபாவம். புகைப்படமெடுக்கும் இடத்தில்கூட நிற்க மாட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால் உள்ளுக்குள் அத்தனை தன்னம்பிக்கை. தைரியம். எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்துடன் இருப்பேன். இதைத்தான் அகவலிமை என்கின்றேன். தேவைப்பட்டால் மட்டுமே அவை உள்ளுக்குள் இருந்து புறத்தில் வெளிப்படும். மற்ற நேரங்களில் அமைதி. பேரமைதியைத் தவிர வேறொன்றறியேன் பராபரமேதான்.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் என் சுபாவத்தை அப்படியே கவிதையாக வடித்துக்கொடுத்து என்னைக் கொண்டாடியவர்களை வாழ்நாளில் மறக்க முடியுமா?

பதினெட்டு பத்தொன்பது வயதில் ஒரு இளம் பெண்ணுக்கு அவளைப் பற்றி யார் கவிதை எழுதுவார்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் எனக்கோ… பாடம் சொல்லிக்கொடுத்த மூன்று பேராசிரியர்கள் ஆட்டோகிராஃப் எழுதிக்கொடுத்து கெளரவப்படுத்தினார்கள். அதில் ஒரு பேராசிரியை கவிதையே எழுதி பெருமைப்படுத்திவிட்டார்.

பொதுவாக வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வுகளாக காதல், திருமணம், குழந்தைகள் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளை சொல்வார்கள்.

எனக்கு இதுவரை மறக்க முடியாத இனியும் மறக்கவே இயலாத ஒரு நிகழ்வு உண்டென்றால் அது என்னை எனக்கே அடையாளம் காட்டிய தமிழ் பேராசிரியர்களின் ‘ஆட்டோகிராஃப்’ எழுதிக் கொடுத்த நிகழ்வைத்தான் சொல்வேன்.

ஆம். திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்திக் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தபோது எனக்கு தமிழ் பேராசிரியர்களாக இருந்தவர்களையும் அப்போது அவர்கள் எனக்கு எழுதிக்கொடுத்த ஆட்டோகிராஃப்களையும் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இத்தனைக்கும் நான் அந்த பேராசிரியர்களை பார்த்தால் தூர நின்று  ‘குட் மார்னிங்’,  ‘குட் ஈவினிங்’ மட்டுமே சொல்வேன். தனிப்பட்ட முறையில் சந்திப்பது, பேசுவது எதுவுமே செய்ய மாட்டேன்.  நான் அவர்கள் மனதுக்கு மிக அருகில் இருந்திருக்கிறேன் என்பதே அவர்கள் எனக்கு எழுதிக்கொடுத்த ஆட்டோகிராஃபுக்குப் பிறகுதான் எனக்கே தெரியும். அதனால்தான் எனக்கு அந்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு என நீங்கள் மனதுக்குள் கேட்பது எனக்கு தெளிவாக கேட்கிறது.

கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் அந்தக் கல்லூரி குறித்து ஒரு வீடியோ தொகுப்பு தயார் செய்திகொண்டிருப்பதால் என்னிடமும் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்துகொண்டிருப்பதால் அந்த வைப்ரேஷனில் இன்றையப் பதிவு.

இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள இங்கே செல்லவும்… http://compcarebhuvaneswari.com/?p=2672

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari