ஜம்முனு வாழ காம்கேரின் OTP-51: யார் முக்கியஸ்தர்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 51
பிப்ரவரி 20, 2021

யார் முக்கியஸ்தர்?

எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர். கதை கவிதை எழுதுவார். தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். தன் முதல் புத்தகத்தை செலவு செய்து பிரமாண்டமாக வெளியீட்டு விழா செய்தார். அதற்கு அவர் பிரமிக்கும் ஒரு பிரபலத்தை தலைமை தாங்க அழைத்திருந்தார். ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. தகவலும் கொடுக்கவில்லை. நிகழ்ச்சி தாமதமாகிக் கொண்டிருக்கும் வேலையில் அவரது உதவியாளருக்கு போன் செய்து கேட்டதில் ‘அவருக்கு முக்கியமான வேலை வந்துவிட்டதால் அதற்கு சென்றுவிட்டார்’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் பதில் சொல்லி இருக்கிறார்.

அந்த இளைஞருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓரிரு பத்திரிகைத் துறை சார்ந்தவர்களை கெஞ்சி கூத்தாடி மேடைக்கு அழைத்து சிறப்புரை ஆற்றச் சொல்லி தன் புத்தகத்தை  வெளியிட்டு விழாவை நிறைவு செய்தார்.

அவர் என்னிடம் போனில் அந்தத் தகவலை மிக வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். ‘வர பிடிக்கவில்லை என்றால் ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்…’, ‘சரி ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனால் ஒரு போன் செய்து சொல்லி இருக்கலாம் அல்லவா?’ அப்படி இப்படி என ஒரே புலம்பல்.

நான் அவரிடம் சில நிதர்சனங்களை சொன்னேன்.

‘நீங்கள் ஒரு புது முயற்சி செய்கிறீர்கள். அதுவும் புத்தக வெளியீடு. உங்களுக்கு கல்வி கொடுத்து உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியவர்கள் உங்கள் பெற்றோர். உங்கள் முதல் படைப்பை உங்கள் பெற்றோர் கைகளால் வெளியிட்டு நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் கைத்தட்டலை அள்ளி இருக்கலாம். அனைவரின் கவனத்தையும் உங்கள் மீது குவித்திருக்கலாம். ஆனால் நீங்கள் பரபரப்பாக இருக்கும் ஒரு பிரபலத்தின் மீது உங்கள் கவனத்தைக் குவித்தீர்கள். அவர் உங்கள் மீது கவனத்தை குவிக்கவில்லை. உங்களுக்கு அவர் உயர்வாக இருக்கலாம். அவர் உங்களை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறாரா என்பதை நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள்…’

அவர் நான் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும் என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை உதாரணமாக்கினேன்.

2007-ம் ஆண்டு சென்னை தி.நகர் வாணி மஹாலில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற என் பெற்றோரின் ஆவணப்படத்தை வெளியிட்டேன். 1-1/2 மணி நேர ஓடக்கூடிய அந்த  படம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டதுடன் பாராட்டவும்பட்டது. பலர் கண்ணீருடன் நெகிழ்ச்சியுடன் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோருக்கு வாழும் காலத்திலேயே செய்த சிறப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதில் சிறப்பு என்னவென்றால் அந்த ஆவணப்படத்தை என் பெற்றோருக்குத் தெரியாமல் சர்ப்ரைஸாக எடுத்திருந்தேன். காட்சிப்படுத்தும் நாள் அன்று விழா நடக்கும் ஹாலுக்கு வரும் வரையில்கூட தெரியாது. மிக சர்ப்ரைஸாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.

அந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த ஆவணப்படத்தில் பணி செய்த எங்கள் நிறுவன முதன்மை கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டின் பெற்றோர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அப்பாவுக்கு மது பழக்கம் உண்டு. உடன் பிறந்தவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் பணிக்குச் சென்றுவிட அவர்கள் இருவரும் கிராமத்திலேயே. அவரது அப்பா தன் அம்மாவை அழைத்துக்கொண்டு எங்குமே சென்றதில்லை, எப்பவும் சண்டை அடிதடி கூச்சல்தான் என  ஒருமுறை என்னிடம் பகிர்ந்துகொண்டது நினைவில் இருந்தது.

அவருக்குத் தெரியாமலேயே அப்பாவையும் அம்மாவையும் சென்னைக்கு வரச் செய்து ஒரு ஓட்டலில் தங்க வைத்து நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸாக. வரவழைத்திருந்தேன். விழா மேடையில் அந்த ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஷீல்ட் கொடுத்து மரியாதை செய்தபோது அந்த கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டுக்கு ‘Best Animator cum Vizualiser’ என்ற விருதளித்தேன். விருதை அவருடைய பெற்றோருடன் சேர்ந்து மேடையில் பெற்றுக்கொள்ளச் செய்தேன். அவரைப் பொருத்தவரை அது வாழ்நாள் மகிழ்ச்சியானது.

என் பெற்றோருக்கு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே ஆவணப்படமாக்கி, அதை சர்ப்ரைஸ் கிஃப்டாக அவர்களுக்கு வழங்கியதற்கு இணையான பாராட்டை எங்கள் காம்கேரில் அந்த ஆவணப்படத்துக்காகப் பணிபுரிந்த முதன்மை கிராஃபிக்ஸ் ஆர்டிஸ்ட்டின் மனக்குறையை போக்கி அவரது பெற்றோருக்கு மரியாதை செய்த நிகழ்வு பேசப்பட்டது.

அந்த நிகழ்ச்சிக்கு ஊரறிந்த பிரபலங்கள் யாரையும் தலைமைத்தாங்க அழைக்கவில்லை. எங்கள் காம்கேரின் நம்பிக்கைப் பிள்ளையாரை ஆன்லைனில் வரவழைத்து பூஜை செய்து என் பெற்றோர் ஆவணப்படத்தை வெளியிட, இருகண்களிலும் பார்வைத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி பேராசிரியர் ஒருவரை தலைமைத்தாங்கச் செய்து நிகழ்ச்சியை நடத்தினேன்.

ஆவணப்படத்தை பார்த்த பிறகு (அவர் காதுகளால் கேட்டு மனக்கண்களால் உணர்ந்தார்) பற்றி ஆவணப்படத்தில் வந்த காட்சிகளை வைத்து அவர் பேசிய கருத்துக்கள் பார்வையாளர்களை வியக்க வைத்தது.  ‘அப்பா அம்மாவுக்கு வாழ்த்து அட்டை வழங்குவதைப் போல இவர் தன் தொழில்நுட்ப அறிவால் அழகிய ஆவணப்பட பரிசை வழங்கியுள்ளார்…’ என்று பேசியது 14 வருடங்கள் ஆகியும் இன்றும் என் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாமே ஒரு முக்கியஸ்தர்தான். நாமே முக்கியஸ்தர் எனும்போது நம்மைப் பெற்றோர் அதிமுக்கியஸ்தர்தானே. சந்தேகம் உண்டா?

நம்மைச் சுற்றி நம்முடன் இணைந்து நமக்காக செயல்படுவோர்களை மதிக்கக் கற்றுக்கொள்வோம். அவர்களே நம் படைப்புகளைப் பொருத்தவரை முக்கியஸ்தர். பிரபலம். புகழ் பெற்றவர். இன்னும் என்னனென்ன வார்த்தைகள் உள்ளதோ அவற்றைப் பொருத்திக்கொள்ளுங்கள் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப.

கடைசியாக அந்த இளைஞருக்கு நான் சொன்ன விஷயம் நம் எல்லோருக்கும் பொருந்தும்.

‘உங்கள் மீதும் உங்கள் படைப்புகள் மீதும் கவனம் குவிக்க விரும்பினால் பிரபலங்களை முக்கியஸ்தர் ஆக்காதீர்கள். உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் முக்கியஸ்தராக்குங்கள். நீங்களும் பாராட்டப்படுவீர்கள். உங்கள் படைப்புகளும் பேசப்படும்.’

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon