Disclaimer
‘அக்னிபத்’ மற்றும் ‘அக்னி வீரர்கள்’ குறித்த இந்தக் கட்டுரையில் நான் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் தொலைக்காட்சி, பத்திரிகை செய்திகள் மற்றும் அரசு சார்பில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் அவர்களின் பிரத்யோக இணையதளம், சமூகவலைதள செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தக் கட்டுரையின் சாராம்சம் எதுவும் என் சொந்தக் கருத்தல்ல. கற்பனையும் அல்ல. எனக்குத் தெரிந்த இளைஞர்கள் சிலரும் அவர்களின் பெற்றோரும் என்னிடம் இந்தத் திட்டம் குறித்து ஆலோசனை கேட்டார்கள். அவர்களுக்காக செய்திகளை ஆராய்ந்து கேள்வி பதில் பாணியில் கட்டுரை ஆக்கி உள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள சம்பள விகிதங்கள், ஓய்வூதிய விவரங்கள் மற்றும் பணிக்காலங்கள் இவை அனைத்திலும் எந்த நேரத்திலும் மாற்றம் இருக்கலாம். அவற்றை துல்லியமாக கணக்கிட்டு எழுதவில்லை. தகவல்களின் அடிப்படையில் கணக்கிட்டு எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரையில் கூறியுள்ள ஊதிய விவரங்கள், பணிக்காலம் இவை காலமாற்றத்துக்கு ஏற்ப, அப்டேட் செய்யப்பட்ட திட்டத்தில் (ஏன் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்கும் நேரத்தில் கூட) மாறி இருக்கலாம். எனவே இந்தத் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களை துல்லியமாக கவனமாக படித்து ஆராய்ந்து அறிந்துகொண்டு புரிந்துகொண்டு இணையுங்கள். அக்னிவீரர்களாக பணி புரிய விரும்பும் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
—
அக்னிபத் – இளைஞர்களுக்கான கம்பீர உலகம்!
அக்னி குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
அக்னிபத், அக்னிவீர் இவை இரண்டுமே பாரதியின் இந்த வரிகளை நினைவூட்டுகிறது.
‘100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்’
என்று வீரமாய் கோரிக்கை விடுத்த சுவாமி விவேகானந்தர் பிறந்த இந்த தேசத்தில் அக்னிவீரர்களை உருவாக்கும் இந்தத் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இயங்கும் மத்திய அரசு அறிவித்துள்ளதில் வியப்பேதும் இல்லை.
‘அக்னிபத்’ என்ற திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களால் நிரம்பப் போகும் இந்திய இராணுவம் துடிப்புடன் செயலாற்றப் போகிறது. இளம் அக்னி வீரர்களின் செயல்திறன் கொழுந்துவிட்டு எரியப் போகிறது.
இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதற்கு முன் ஒருவிஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அரசாங்கம் யாரையும் கட்டாயப்படுத்தி இந்தத் திட்டத்தில் சேர வற்புறுத்தவில்லை. இராணுவத்தில் சேர்வது என்பது அர்பணிப்பு உணர்வுடன் செய்யப்படும் ஒருவிஷயம். விருப்பப்பட்டவர்கள் சேர்ந்து தேசத்துக்காக தன்னார்வத் தொண்டாற்றுவதுடன் தாங்களும் பயன்பெறலாம்.
யாருடைய ஏழ்மையையும், இயலாமையையும் அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக, பத்தாம் வகுப்பும் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்த பிறகு மேற்படிப்புப் படிக்க வசதி வாய்ப்பு இல்லாதவர்களும், படிப்பின் மீது ஆர்வமே இல்லாதவர்களும், படிப்பே வராதவர்களும் இந்தத் திட்டத்தால் பயன்பெறலாம் அல்லவா?
பரவலான பொதுவான உதாரணம் ஒன்றையே சொல்கிறேனே. ஜவுளிக் கடைகளில் காலை 9 மணி முதல் இரவு 9, 10 மணி வரை நின்று கொண்டே (இன்று அவர்களுக்கு உட்கார சீட் கொடுக்கும் சட்டம் வந்திருக்கலாம். ஆனால் எத்தனை கடைகளில் அதை அமல்படுத்தி இருக்கிறார்கள்?) வேலை செய்யும் 17, 18 வயது இளம் ஆண்களையும் பெண்களையும் பார்த்திருப்பீர்கள் தானே?
வீட்டைப் பிரிந்து, ஊரைப் பிரிந்து, உறவுகளைப் பிரிந்து அவர்கள் போடும் சாப்பாட்டையும், குடோன் போன்ற ஓரிடத்தில் ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டு படுத்துறங்கி நாட்களைக் கழிக்கும் அவர்களில் பெரும்பாலானோர் கிராமங்களில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகம் படிக்காத பெற்றோர். இவர்களை நம்பி இருக்கும் தம்பி தங்கைகள் என குடும்பப் பொறுப்பு. சரி இப்படித்தான் கஷ்டப்பட்டு உழைக்கிறார்களே அவர்களுக்கு என்ன சம்பளம் கொடுத்துவிடப் போகிறார்கள்? என்னன்ன எதிர்கால வசதிகள் செய்து கொடுத்துவிடப் போகிறார்கள் என நினைக்கிறீர்கள்?
உங்களுக்கு நேரம் இருந்தால் அவர்களில் ஒருவரிடம் நின்று நிதானித்து வேலை குடும்பம் பற்றிப் பேசிப் பாருங்கள். அவர்கள் கலங்கும் கண்கள் ஆயிரம் கதை சொல்லும். முதாலாளி / மேனேஜர் பார்த்துவிடப் போகிறாரே என்ற பயத்தில் கண்களை 360 டிகிரியில் சுழற்றி அக்கம் பக்கம் பயத்துடன் பார்த்து மட்டுமே உங்களுடன் பேசுவார்கள்.
அவர்களைப் போன்றோருக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் தானே? எப்படியோ வறுமையின் காரணமாகவோ, படிப்பு வராத காரணத்தினாலோ குறைவான சம்பளத்தில் குடும்பத்தைப் பிரிந்து அல்லாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதற்கு பதிலாக மிக கெளரவமாக கம்பீரமாக அக்னிவீரர்களாக நான்கு வருடங்கள் பணி புரிவது எத்தனை செளகர்யம். நல்ல விஷயம் தானே?
உதாரணத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே கிராமத்தில் வசித்து வரும் ஒருசில இளைஞர்களுக்கு படிப்பு வரவில்லை. 10-ம் வகுப்புடன் நிறுத்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காமல் வீட்டில் உள்ள இரண்டு மாடுகளை வைத்து ஜீவனம் செய்து வருகிறார்கள். படிப்பும், வேலையும் இல்லாததால் பெண் கிடைக்காமல் திருமணமும் ஆகவில்லை. இப்போது 40, 45 வயதாகிறது. இவர்கள் மட்டுமல்ல, இன்றைய தலைமுறையினரிலும் படிப்பே வராத இளைஞர்கள் இருக்கிறார்கள். ஐயாயிரத்துக்கும் ஆறாயிரத்துக்கும் முதுகொடிய வேலை செய்து பிழைக்கிறார்கள். இந்த கஷ்டத்துக்கு படித்திருக்கலாம், ஆனால் படிப்பே கசப்பாக மட்டுமல்ல விஷமாக அல்லவா இருக்கிறது என்கிறார்கள்.
இவர்களைப் போன்றோருக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதம் அல்லவா? இவர்களின் 20 வயதில் இதுபோன்றதொரு திட்டம் இருந்திருந்தால் இப்போது அவர்கள் வாழ்க்கையே வேறு மாதிரி சுபிக்ஷமாக அல்லவா இருந்திருக்கும்.
அக்னி வீரர்களாய் பணி புரிந்துவிட்டு வெளியில் வரும்போது மிக இளம் வயதில் இராணுவ வீரராய் பணியாற்றிய கம்பீரம் ஒருபுறம் கிடைக்க, மறுபுறம் தோராயமாக கைகளில் கிடைக்கும் 11 லட்சம் ரூபாயை வைத்துக்கொண்டு சுய தொழில் ஆரம்பிக்கலாம். படிக்கலாம். வேறு வேலைக்குச் செல்லலாம். இப்படி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
இந்தத் திட்டம் வலுபெற வலுபெற பல்வேறு நிறுவனத் தலைவர்களும், தொழிலதிபர்களும் தங்கள் ஆதரவு கரத்தை நீட்டத் தொடங்கிவிட்டனர்.
மஹேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திரா தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கொடுப்பதாக உத்திரவாதம் அளிப்பதாக தெரிவித்தவுடன், ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு உள்ளிட்ட பல்வேறு தொழில்துறையினர் அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த ஆதரவு எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுமே தவிர குறைய வாய்ப்பில்லை. வேலை வாய்ப்புக்கு பஞ்சம் ஏற்படப் போவதில்லை.
அக்னிபத் திட்டத்தின் மூலம் உருவாகும் அக்னி வீரர்களால் எதிர்காலத்தில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதிலும், ஒழுக்கமான கட்டுக்கோப்பான சமுதாயம் உருவாகும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.
என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் சொல்லி விடுகிறேன்.
‘பெற்றோரை இழந்து ஆதரவற்றோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், காப்பகங்களிலும் வாழ்ந்து வரும் இளைஞர்களையும் இளம் பெண்களையும் கண்டறிந்து அவர்களை இந்தத் திட்டத்தில் இணைக்க முன்னெடுப்புகள் செய்யலாம். இப்படி செய்வதினால் அவர்கள் கெளரவமாக தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்.
மேலும் ஆதரவற்ற அவர்களை தவறாகப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்தும், கடத்தல் அது இது என கொடுமையான வன்செயல்களுக்கு பயன்படுத்தியும் அவர்களை சீரழிக்கும் கும்பல்களில் இருந்து மீட்க முடியும். ஆரோக்கியமான வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.
இவர்களுக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யாமல், எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதும் என்ற அடிப்படை தகுதியை ஏற்படுத்தி அதற்கேற்ற பணிப்பிரிவை உண்டாக்கலாம். அவர்களுக்கெல்லாம் மறுவாழ்வு கொடுத்ததைப் போலவும் இருக்கும், சீரான ஆரோக்கியமான ஏற்றத் தாழ்வில்லா சமுதாயம் மலரவும் வழு வகுக்கும்!’
ஆதரவற்றோருக்கான வாய்ப்பு என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆலோசனை என்றுகூட சொல்லலாம்.
இனி அரசு அறிவித்துள்ள அக்னிபத், அக்னி வீரர்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.
‘அக்னிபத்’ என்றால் என்ன?
இந்திய பாதுகாப்புத் துறையில் இராணுவ ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு புதிய திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை என மூன்று படைப் பிரிவுகளிலும் சேர்வதற்கான இந்த புதிய திட்டத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘அக்னிபத்’ (AgniPath) என்று பெயர்.
‘அக்னிவீர்’ என்றால் என்ன?
அக்னிபத் திட்டத்தின் மூலம் இராணுவத்துக்கு எடுக்கப்படும் வீரர்கள் ‘அக்னிவீர்’ (AgniVeer) என்று அழைக்கப்படுவார்கள். அதாவது அக்னிவீரர்கள் என்ற அடைமொழியுடன் கெளரவமாக அழைக்கப்படுவார்கள்.
‘அக்னிபத்’ திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
ஜூன் 14, 2022 அன்று முப்படை தளபதிகள் முன்னிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தில் பெண்களுக்கும் இடமுண்டா?
உண்டு. ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். முப்படைகளிலும் பெண்களும் பணிபுரியலாம் என்பது புதிய திட்டத்தின் சிறப்புகளுள் ஒன்று.
வயது வரம்பு என்ன?
17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி?
பத்தாம் வகுப்பு / பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகால பணி?
ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகாலம் பணி. 4 ஆண்டுகளில் முதல் ஆறு மாதகாலம் பயிற்சிப் பணி.
ஒப்பந்தப் பணி என்றால் என்ன?
4 ஆண்டு காலம் பணி என்பது ஒப்பந்தம். பணியில் சேர்பவர்களின் செயல்திறனின் அடிப்படையில் நான்கில் ஒரு பங்கினர், அதாவது 25 சதவிகிதம் பேர் நிரந்தரமாக பணியில் சேர்க்கப்படுவார்கள் என்கிறார்கள்.
இந்த ஆண்டு (2022) 46000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதில் 25 சதவிதம் பேர், அதாவது 11,500 பேர் நிரந்தரப் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தொடர்ந்து இராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் என்கிறார்கள்.
ஒப்பந்த காலத்தில் அவர்களுக்கான சம்பளம் மற்றும் இதர வசதிகள் என்ன?
முதல் வருடம் மாதந்தோறும் 30,000 ரூபாய், இரண்டாம் வருடம் மாதந்தோறும் 33,000 ரூபாய், மூன்றாவது வருடம் மாதந்தோறும் 37,000 ரூபாய், நான்காவது வருடம் மாதந்தோறும் 40,000/-.
இதில் 30 சதவிகிதம் பிடித்தமாக அந்தந்த வீரர்களின் கணக்கில் வைத்துக் கொள்வார்கள்.
முதல் வருடம் மாத சம்பளம்: 30,000 ரூபாய்
கையில் கொடுப்பது: 21,000 ரூபாய்
பிடித்தம்: 9,000/- ரூபாய்
ஒரு வருடத்துக்குப் பிறகு மொத்தப் பிடிப்புத் தொகை: 1,08,000 ரூபாய்
இரண்டாம் வருடம் மாத சம்பளம்: 33,000 ரூபாய் கையில் கொடுப்பது: 23,100 ரூபாய்
பிடித்தம்: 9,900 ரூபாய்
ஒரு வருடத்துக்குப் பிறகு மொத்தப் பிடிப்புத் தொகை: 1,18,800 ரூபாய்
மூன்றாம் வருடம் மாத சம்பளம்: 37,000 ரூபாய் கையில் கொடுப்பது: 25,900 ரூபாய்
பிடித்தம்: 11,100 ரூபாய்
ஒரு வருடத்துக்குப் பிறகு மொத்தப் பிடிப்புத் தொகை: 1,33,200 ரூபாய்
நான்காம் வருட மாத சம்பளம்: 40,000 ரூபாய்
கையில் கொடுப்பது: 28,000 ரூபாய்
பிடித்தம்: 12,000 ரூபாய்
ஒரு வருடத்துக்குப் பிறகு மொத்தப் பிடிப்புத் தொகை: 1,44,000 ரூபாய்
நான்காண்டு காலத்துக்குப் பிறகு மொத்தப் பிடித்தத்தொகை (108000 + 118800 + 133200 + 144000) = 5,04,000 ரூபாய் + இதற்கான வட்டித் தொகை.
நான்காண்டு காலம் முடிந்ததும் பிடித்தத்தொகை + வட்டித்தொகை இவை தோராயமாக 5.74 லட்சம் வரும். இவற்றுடன் அதற்கு இணையான தொகையை மத்திய அரசாங்கம் சேர்த்துப் போட்டு மொத்தம் 11.50 லட்சம் ரூபாய், அக்னி வீரர்கள் 4 வருட காலம் பணிபுரிந்து விடைபெறும்போது அவர்களுக்கு One Time Settlement ஆக கொடுக்கப்படும் என தெரிவிக்கிறார்கள். இதற்கு ‘சேவாநிதி’ என்று பெயரிட்டுள்ளார்கள்.
இத்துடன் ‘அக்னி வீரர்’ சான்றிதழும் அளிக்கப்படும் என்கிறார்கள்.
இத்துடன் 4 வருட காலமும் காப்பீடு, தங்குமிடம், உணவு என அனைத்து சலுகைகளும் உண்டு.
பணியில் இருக்கும்போது இறந்துவிட்டால் 48 லட்சமும், 50 சதவிகித ஊனம் ஏற்பட்டால் 24 லட்சமும், 20 சதவிகித ஊனம் ஏற்பட்டால் 12 லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக வழங்குகிறார்கள்.
இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னிபத் என்ற புதிய திட்டத்துக்கும் முன்பு செயல்பட்டு வந்ததுக்கும் என்ன வித்தியாசம்?
முன்புள்ள திட்டப்படி 20 வயதில் இராணுவத்தில் சேர்ந்தால், 15 வருட கால சர்வீஸ் இருக்கும். இப்படி இராணுவத்தில் சேர்பவர்கள் 15 வருட காலத்தில் அடுத்தடுத்த கட்ட பதவி உயர்வு பெற்று உயர்ந்திருந்தால் அவர்கள் பணிக்காலம் நீட்டிக்கப்படும். இப்படியாக 20 சதவிகிதத்தினர் பணி நீடிக்கப்பட்டு இராணுவப் பணியில் தொடர்ந்து செயல்படுவார்கள். மீதமுள்ள 80 சதவிகிதத்தினர் அவர்களின் 35 வயதில் 15 ஆண்டுகால சர்வீஸ் முடிந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம், கருணைத்தொகை மற்றும் அவர்கள் பணிக்கே உரிய மத்திய அரசின் எல்லா சலுகைகளுடன் வெளியில் வருவார்கள்.
இப்போதுள்ள ‘அக்னிபத்’ திட்டத்தின்படி தேர்வானவர்களில் 25 சதவிகிதத்தினரின் பணிக்காலம் மட்டுமே நீட்டிக்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு 4 ஆண்டுகாலம் மட்டுமே ஒப்பந்தப்பணி. One Time Settlement ஆக ஓய்வூதியத்தை கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
முன்புள்ள திட்டப்படி குறிப்பிட்ட பிராந்தியத்தில் தேர்வானவர்கள் அந்தந்த ரெஜிமெண்ட்டில்(regiment) தான் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றிருந்தது.
இப்போதுள்ள ‘அக்னிபத்’ திட்டத்தின்படி மையப்படுத்த (Centralized) ஓரிடத்தில் வைத்து தேர்வு செய்கிறார்கள்.
முன்புள்ள திட்டத்துக்கும் இப்போதுள்ள ‘அக்னிபத்’ திட்டத்துக்கும் உள்ள ஒரு அடிப்படை ஒற்றுமை என்னவென்றால் வீரர்களை தேர்வு செய்யும் முறையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை. முன்பிருந்த அதே தகுதி மற்றும் தேர்ச்சி முறைப்படித்தான் வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுத் தகுதியில் மாற்றம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
முன்புள்ள முறைப்படி இராணுவ ஆள் சேர்ப்பு இனி இருக்குமா?
இனி, அக்னிபாத் முறையில் மட்டுமே இராணுவத்தில் வீரர்கள் எடுக்கப்படுவார்கள் என்கிறார்கள். முந்தைய முறையின் கீழ் பணியில் இருப்பவர்கள் அவர்கள் பணிக்காலம் முழுவதும் அந்தத் திட்டத்தில் இருப்பார்கள். இனி அந்த வழக்கமான முறையிலான வேலை வாய்ப்பு கிடையாது என்கிறார்கள்.
4 வருடங்களுக்குப் பின்னர் பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் வீரர்களின் பணிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
15 ஆண்டுகள். இதில் இராணுவ பணி உயர்வுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் அவருக்கு இன்னும் 8 வருட காலம் பணிக்காலம் நீட்டிக்கப்படும். அதற்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் தன் 50 வயது வரை இராணுவத்தில் பணி புரியலாம் என்கிறார்கள்.
அக்னி வீரர்களின் பணிக்காலத்துக்குப் பிறகு அவர்களின் கல்வி கேள்விக்குறியாகுமா?
அக்னி வீரர்களின் பணிக்காலத்துக்குப் பிறகு அவர்களுக்கு +2 முடித்ததற்கு இணையான சான்றிதழ் கொடுத்துவிடுகிறார்கள். பணியில் இருக்கும்போது தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்காகவே IGNOU – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர், அதன் மூலம் தொலை தூரக்கல்வியில் சேர்ந்து படித்து பட்டம் பெறலாம் என்று சொல்கிறார்கள்.
கல்லூரி கல்வி கற்பதில் வயது வரம்பில் சலுகைகள் கொடுப்பதற்காக, UGC யில் புது விதிமுறை ஏற்படுத்தப்பட்டு அதில் அக்னி வீரர்களுக்கு நான்கு வருட வயது வரம்பு சலுகை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
அரசு மற்றும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனங்களிலும், வங்கிகளிலும் பணிக்கு விண்ணப்பிக்க அக்னி வீரர்களுக்கு வயது வரம்பில் சலுகையும் பணிக்கு முன்னுரிமையும் கொடுக்கப்பட உள்ளது என்கிறார்கள்.
4 வருட காலத்துக்குப் பிறகு அக்னி வீரர் என்ற பட்டத்துடன் வெளியில் வரும் வீரர்களுக்கு +2 படிப்புக்கு இணையான சான்றிதழ் கொடுப்பதுடன் கூடவே அவர்களின் அனுபவம் ‘இந்த டிப்ளமா படிப்புக்கு இணையானது’ அல்லது ‘இந்த டிகிரி படிப்புக்கு இணையானது’ என்ற உத்திரவாதம் கொடுக்கும் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். அப்போதுதான் அவர்கள் பொதுவெளியில் வழக்கமாக 10, +2 முடித்து கல்லூரி சென்று டிப்ளமாவோ, டிகிரியோ, இன்ஜினியரிங்கோ படித்தவர்களுடன் போட்டிப்போட முடியும் என்று வலுவான கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். இதுவும் பரிசீலிக்கப்படும் என்கிறார்கள்.
அக்னி வீரர்களின் பணிக்காலத்தில் என்னென்ன கற்றுக்கொள்கிறார்கள்?
அக்னி வீரர்கள் பயிற்சி முடிந்த பிறகு வெவ்வேறு பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவார்கள். தொலைத்தொடர்பு, விமானப் பரிவு, ரேடார் தொழில்நுட்பம், இராணுவ சாதனங்கள் பராமரிப்பு இப்படி பல்வேறு படைப்பிரிவுகளில் பணிபுரிய வேண்டும்.
உதாரணத்துக்கு தொலைத்தொடர்பில் பணிக்கு அமர்த்தப்படுபவர்களின் செயல்திறன் நாம் நினைத்தே பார்க்காத அளவுக்கு இருக்கும். அதாவது பொதுவெளியில் பெரிய பெரிய மொபைல் நிறுவனங்கள் தங்கள் மொபைல் டவர் மற்றும் தொலைத்தொடர்பு பராமரிப்புகளை எப்படி செயல்படுத்துகிறார்களோ அதைப்போலவே இராணுவத்தில் அக்னி வீரர்களும் செயலாற்றுவார்கள். பொறியியல் படித்து மொபைல் டவர்களை நிறுவி அதை பராமரிப்பவர்கள் செய்யும் பணியை இராணுவத்தில் 10-வகுப்பு பாஸ் செய்துவிட்டு இராணுவப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீரர்களும் செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இராணுவத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சியை.
இதுபோலவேதான் பொதுவெளியில் வர்த்தக விமான நிறுவனங்களில் பணிபுரியும் இளங்கலையும் முதுகலையும் படித்து ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் முடித்து முனைவர் பட்டம் பெற்ற நிபுணர்கள் செய்கின்ற பணியை இராணுவப் பயிற்சி பெற்று விமானப் படையில் பணிக்கு அமர்த்தப்படும் அக்னி வீரர்கள் திறம்பட செய்கிறார்கள்.
இப்படி பொதுவெளியில் தொழில்பயிற்சி ஏதும் இன்றி படித்து பட்டம் பெற்ற பொறியாளர்களும், முனைவர்களும், நிபுணர்களும் செய்கின்ற பணியை அக்னி வீரர்கள் அவர்களைப் போலவே, அவர்களைவிட இன்னும் மிக நேர்த்தியாக செய்கிறார்கள் என்பதுதான் சிறப்பு என்றும் சொல்கிறார்கள்.
குழந்தைத் தொழிலாளர் சட்டத்துக்கு எதிரானதா அக்னிபத்?
17-1/2 வயதில் இராணுவத்தில் அக்னிபத் திட்டத்தில் சேர்ந்த பிறகு முதல் 6 மாதம் பயிற்சி காலம் என்பதால் அது குழந்தைத் தொழிலாளர் என்ற பிரச்சனைக்கு பேச்சே கிடையாது.
அக்னிபத் ஏன் அவசியம்?
தற்போது ராணுவத்தில் உள்ள இராணுவ வீரர்களின் சராசரி வயது 32. அக்னி வீரர்களின் வருகைக்குப் பிறகு, சராசரி வயது 26-க்கும் குறைவாகவே இருக்கும். அதாவது 17-1/2 வயது முதல் 20 வயது வரை உள்ளோர் அக்னி வீரர்களாக சேரும் பட்சத்தில் இராணுவத்தில் செயல்படும் வீரர்களின் சாராசரி வயது 26-க்கும் குறைவாகவே இருக்கும். இது இராணுவத்தையும் அதில் இயங்குவோரையும் ஆரோக்கியமாக செயல்பட வைக்கும். இளைஞர்களால் நிரம்பும் இராணுவம் எத்தனை சுறுசுறுப்பாய் இயங்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
பாதுகாப்புப் படையின் பட்ஜெட்டின் பெரும்பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. ஓய்வூதிய செலவை குறைக்க இந்தத் திட்டம் நல்ல பலனளிக்கும். மேலும் அந்த பணத்தை இராணுவத்தை நவீனப்படுத்துதலுக்கு செலவிடலாம் என்கிறார்கள்.
பணியில் இளைஞர்கள் அமர்த்தப்படுவதால் அவர்களிடம் உத்வேகம், புத்துணர்ச்சி, ஈடுபாடு என அனைத்தும் செழிப்புடன் இருக்கும். மேலும் கட்டுப்பாடுகளையும், வழிநடத்தலையும், தலைமைகளின் கொள்கைகளை ஏற்பதிலும் எந்தவித மனச்சிக்கலும் இல்லாமல் தெளிவாக இருப்பார்கள். மனதும் உடலும் வளைந்துகொடுக்கும் இளம் ரத்தம்தான் இனிவரும் புதுயுகத்தில் இராணுவத்துக்கு அவசியம் தேவை.
இனி வரும் நாட்களில், நவீன யுகத்தில் போர் வீரர்கள் நேரடியாக துப்பாக்கி ஏந்தி சண்டையிடும் முறைகள் மாறி, ஆள் இல்லா போர் முறைகள் (Non Contact War) அறிமுகப்படுத்தப்படும். ஏவுகணை (Missile), ட்ரோன் (drone) போன்ற நவீனத்துவ போர் முறைகளை கற்கவும், செயல்படுத்தவும் இளைஞர்களே பொருத்தமானவர்கள். போர் யுக்திகள் மாறும் போது நவீனப்படுத்தப்படும் போது அதற்கேற்ப நவீனத்துவத்தை மேம்படுத்திக்கொள்வதும் அதற்கான வழிமுறைகளை வழிவகைகளை உருவாக்கிக் கொடுப்பதும்தானே இராணுவத்தின் தலையாயக் கடமை. அதற்கான அருமையான திட்டம்தான் ‘அக்னிபத்’.
மேலும், இராணுவத்தில் 4 வருட காலம் பணி புரிந்துவிட்டு வெளியில் வரும் வீரர்கள் நாட்டுப்பற்று, இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, தைரியம், குறிக்கோள், புத்துணர்ச்சி, உத்வேகம், நல்ல உடல் ஆரோக்கியம், சீரான மனநலம், நல்ல பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அனைத்தும் நிரம்பப் பெற்றவர்களாகவும் திறமைசாலியாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட இளைஞர்களை எத்தனை கோடிகள் செலவழித்து கருத்தரங்குகளும் விழிப்புணர்வு பிரசாரங்களும் வகுப்புகளும் நடத்தினாலும் உருவாக்குவது கடினம். மொத்தத்தில் ஆரோக்கியமான ஒழுக்கமான இளைஞர்கள் நடமாடும் சமுதாயம் உருவாக ‘அக்னிபத்’ திட்டம் வழிவகுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
அக்னிபத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விதிமுறையைக் கொண்டு வந்தால் அங்கெல்லாம் அக்னிவீரர்கள் பணி அமர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.
தேசம் முழுவதும் தேசப்பற்றுள்ள, கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் திறமையாகவும் பணியாற்றும் பணியாளர்கள் உருவாக வாய்ப்புண்டு.
தேசம் முழுக்க தேசப்பற்றுள்ள இளைஞர்கள் பரவி, இராணுவ எல்லைக்கு வெளியே உள்ள மீதமுள்ள சமுதாயத்தையும் சீராக்கவும் கட்டுக்கோப்பான பாதையில் பயணிக்க வைக்கவும் வழிவகுக்கும் அக்னிபத் திட்டம்!
அக்னிபத் திட்டம் குறித்து நான் எழுதிய இந்தக் கட்டுரையின் அடிப்படையில் என்னிடம் எழுப்பப்பட்ட சந்தேகங்களும் அதற்கான விளக்கங்களும் இந்த லிங்கில்: https://compcarebhuvaneswari.com/?p=11311
ஜெய்ஹிந்த்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 21, 2022 | செவ்வாய் | காலை 6 மணி