திறன் தமிழகம்: முதல் தலைமுறை தொழில் முனைவோர் – வெற்றி நாயகி! (April 2017)

பத்திரிகை வடிவிலேயே வாசிக்க: Thiran Thamizhagam Magazine

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில்
வேலைநிலவரத் தகவல் பிரிவில் இருந்து நேர்காணல்
நேர்காணல் செய்தவர்: கவிதா!

காம்கேர் கே.புவனேஸ்வரி.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர் என பல்முகத் திறன் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 25 ஆண்டுகளாக  செயல்பட்டுவருகிறார்.முதல் தலைமுறை தொழில் முனைவரான அவரிடம் ஒரு நேர்காணல்:

உங்களைப் பற்றி ஒரு முன்னுரை!

நான்பிறந்ததுகும்பகோணத்தில். அப்பா,அம்மா இருவரும் தொலைபேசித்துறையில் 40 ஆண்டு காலம் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்களின் பணிநிமித்த மாற்றல் காரணமாக, நான் வளர்ந்தது திருச்சி, தஞ்சாவூர், மாயவரம், சீர்காழி, திருவாரூர், கும்பகோணம் என பல்வேறு ஊர்களில். பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் படித்தேன். எம்.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில்.கல்லூரி கடைசி வருட பிராஜெக்ட்டை நுங்கம்பாக்கம் ஹைரோடில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் செய்தேன். பிராஜெக்ட் முடிந்து பட்டம் (1992) பெற்றவுடன் சென்னையே நிரந்தரமானது. அப்போதெல்லாம் படித்து முடித்தவுடன் பெண்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகள் தான். ஒன்று டீச்சர் வேலை. அதிகபட்சமாக பள்ளி/கல்லூரி முதல்வராக இருப்பார்கள். இரண்டாவது வாய்ப்பு திருமணம்.நான் என் பெற்றோருடன் ஆலோசனை செய்து சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன். 1992-ல் காம்கேர் உதயமானது.

உங்கள் நிறுவனம் உருவான விதம் பற்றி!

கம்ப்யூட்டர் பெரும்பாலானோரின் கனவுப் பொருளாக இருந்துவந்த 1992-களில் வங்கிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பத்திரிகைகள் என அனைத்தும் தங்களுக்கென சாஃப்ட்வேர் துறையை வைத்திருக்கவில்லை. காம்கேர் மூலம் அனைத்தையும் எங்கள் வசமாக்கினோம். வங்கிகளின் கிரெடிட் கார்ட் அப்ளிகேஷன் பிராசஸிங் சாஃப்ட்வேர், பள்ளிகளின் அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டர்சாஃப்ட்வேர், மருத்துவமனை மருத்துவர்-நோயாளிகள் விவரங்கள், பத்திரிகைகளுக்கான சந்தாதாதர் பட்டியல் பராமரிப்பு என பல்வேறுவிதமான சாஃப்ட்வேர்கள் தயாரித்து காம்கேர் பேனரிலேயே விற்பனை செய்யத் தொடங்கினோம். காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் தன் தயாரிப்புகளால் பிரபலமடையத்தொடங்கியது. இப்படியாக சாஃப்ட்வேர் தயாரிப்பில் புது யுக்திகளைப் புகுத்தினேன்.

அடுத்ததாக தமிழில் தொழில்நுட்பத்தைப் புகுத்தத் தொடங்கினேன். அதற்கு ஒரு நிகழ்வு காரணமானது.

25 வயதுமிக்க இளைஞர் ஒருவர் எங்கள் நிறுவனத்துக்கு வந்தார். ‘தமிழில் கம்ப்யூட்டர் சொல்லித்தர முடியுமா…’ என்று கேட்டார்.

நான் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு  ‘ஏன்… தமிழில்?’ என்றேன்.

அதற்கு அவர் ‘நான் நிறைய கம்ப்யூட்டர் சென்டர்களை அணுகினேன் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள… ஆனால் அவர்கள் எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராததால் முதலில் ஆங்கிலம் பயிலுங்கள்… ஆங்கிலம் தெரிந்தால்தான் கம்ப்யூட்டர் வரும்’ என்று சொல்லி விட்டார்கள்… எனக்கு கம்ப்யூட்டர் கற்க வேண்டும். அதனால்தான்…’ என்று எந்த கூச்சமும் இல்லாமல் தெளிவாகப் பேசினார்.

‘என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மட்டுமே… கம்ப்யூட்டர் பயிற்சி கிடையாது’ என்று சொல்லி அவரை அனுப்பினேன்.

அவருடைய பேச்சு எனக்கு ஒரு புது யுக்தியைக் கொடுத்தது.

‘நாம் ஏன் ஒரு நபருக்கு தமிழில் சொல்லிக்கொடுக்க்க் கூடாது? பலருக்குப் பயனடையும் விதத்தில் அதை ஏன் கொண்டுவரக்கூடாது?’ என்ற எண்ணத்தில் என் அடிப்படைத் திறமையான எழுத்து மற்றும் படைப்பாற்றலுடன் என் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் தயாரிப்பு மூலம் நான் பெறுகின்ற அனுபவங்களை புத்தகமாக தமிழில் கொண்டுவரத் தொடங்கினேன். இன்று அந்தப் புத்தகங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது.

புத்தகங்கள் மட்டுமில்லாமல் தமிழையும், கம்ப்யூட்டரையும் இணைத்து சாஃப்ட்வேர்கள் தயாரிக்க ஆரம்பித்தேன். முதன்முதலில் தமிழில் சாஃப்ட்வேர் வெளியிட்டதால் அதற்கான விருதும் அங்கீகாரமும் கிடைத்தது.

என் நிறுவனம் வழியே காலையிலும் மாலையிலும் சாரை சாரையாக மாணவ மாணவிகள் பள்ளி சீருடையில் செல்லும் கண்கொள்ளாக் காட்சி என் கண்களுக்கு விருந்து. அதை ஒட்டிய ஒரு பிசினஸ் ஐடியா எனக்குள் உதித்தது.

அப்போதெல்லாம் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் என்று தனியாகக் கிடையாது. ‘நாம் ஏன் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் ஏற்படுத்தி,  அவர்களுக்கு சிலபஸ் தயாரித்துக்கொடுத்து, புத்தகங்கள் எழுதி தேவையான கம்ப்யூட்டர்களை வாங்கி ஒவ்வொரு பள்ளியையும் தொழில்நுட்பத்துடன் இணைக்கக் கூடாது?’ –  என் அடுத்த திட்டம் உதயமானது.

சென்னை ஆதம்பாக்கத்தில் காம்கேர் நிறுவனம் இருந்த அடுத்தத் தெருவில் இயங்கிவந்த ‘ரோசரி மெட்ரிகுலேஷன் பள்ளி’-யை அணுகினேன்.

முதன்முறை என்னிடம் இருந்த ‘டாட் மேட்ரிக்ஸ்’ பிரிண்டரில் நான் தயாரித்த பிராஜெக்ட் ப்ளானின் வித்தியாசமாக கலர் பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தேன்.

பிராஜெக்ட்டைப் பற்றிப் பேசியதைவிட கலர் பேப்பர் மற்றும் பிரிண்ட் அவுட் எடுத்த முறைபற்றி நிறைய பேசினார்கள் அந்த பள்ளி முதல்வரும் அவரது உதவியாளர்களும்.

இரண்டு நாட்கள் டைம் கேட்டிருந்தார்கள். மூன்றாம்நாள் ‘என்ன செய்யலாம் எப்படி செய்யலாம்’ என அடுத்தகட்ட விவாதம்.

இப்படியாக அந்த பிராஜெக்ட் ஒரு வடிவத்துக்கு வந்தது. 1996-ம் ஆண்டு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் காம்கேர் நிறுவனமும் ரோசரி மெட்ரிகுலேஷன் உயர் நிலைப் பள்ளியும் முறையாக ஒப்பந்தம் (MOU) போட்டுக்கொண்டு மூன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தினோம்.

ஒரு நல்ல நாளில் எங்கள் காம்கேர் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் அந்தப் பள்ளியில் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை உருவாக்கி அமைத்தேன். அப்போது எனக்கு வயது 26.

அடுத்தடுத்து பல பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை பல முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் ஏற்படுத்திக்கொடுத்திருந்தாலும், எங்கள் காம்கேர் நிறுவனமே முதன்முதலில் அதற்கு அடிகோலியது.

உங்களது வெற்றியின் இரகசியம் என்ன?

படித்து முடித்ததும் என் படைப்பாற்றல் கொடுத்த தன்னம்பிக்கையில் பெற்றோர் கொடுத்த சப்போர்ட்டில் காம்கேர் உருவானது. தினம் தினம் புதுப்புது சிந்தனைகள். வித்தியாசமான கற்பனைகள். கற்பனைகளை சிந்தனைகளோடு இணைத்து நிஜத்தில் என் தொழில்நுட்ப அறிவை நிரூபிக்க உழைப்பு… உழைப்பு… உழைப்பு. இதை மட்டுமே நம்பினேன்.

கிரியேட்டிவிடியுடன் கூடிய எழுத்து என் அடிப்படைத் திறமை. அதை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் இணைத்து கார்ட்டூன் அனிமேஷன், ஆவணப்படங்கள் என என் கிரியேட்டிவிடியை வளர்த்தெடுத்தேன்.

உழைப்பினால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தலைகனமாக மாறாமல் என்னை வளர்த்தெடுக்கும் அளவுக்கு என் தன்னம்பிக்கை உச்சத்தைத் தொட்டது ஆகியவைதான் எனது வெற்றிக்கு காரணங்கள்.

சாஃப்ட்வேர் தவிர வேறென்ன பணிகள் செய்கிறீர்கள்?

சாஃப்ட்வேர் தயாரிப்பை முதன்மைப் பணியாகக்கொண்டு ஆரம்பித்த காம்கேர் நிறுவனத்தில் அனிமேஷன், பப்ளிகேஷன், ஆவணப்படங்கள் என பல்வேறு பணிகளை அறிமுகப்படுத்தினேன்.

கந்தர்சஷ்டிக் கவசம், இராமாயணம், திருக்குறள், திருவாசகம், முல்லா கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், தெனாலிராமன் நீதிக்கதைகள் என பல்வேறு அனிமேஷன் படைப்புகள் மூலம் குழந்தைகள் முதல் ஆன்மிகவாதிகள் வரை அனைவரையும் கவர்ந்திழுத்தோம்.

‘தாத்தா பாட்டிக் கதைகள்’ – காம்கேரின் முதல் அனிமேஷன் படைப்பு; ‘பேரன் பேத்திப் பாடல்கள்’ – முதல் அனிமேஷன் பாடல் தொகுப்பு. வாழ்வியலோடும் நம் இந்திய கலாச்சாரப் பண்பாட்டு கொள்கைகளோடும் இணைந்த தயாரிப்புகளை உருவாக்கியதால் விரைவிலேயே நம் மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார முடிந்தது.

அடுத்து என் அப்பா அம்மாவுக்கும் எங்களுக்குமான தலைமுறை இடைவெளி இல்லாத ரிலேஷன்ஷிப்பையும் எங்களின் இளமை காலம் மற்றும் எங்கள் பெற்றோரின் வளர்ப்பு முறையையும் வெளிப்படுத்தும் விதத்தில் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற ஆவணப்படத்தை தயாரித்தேன். இதுவே என் முதல் ஆவணப்படம்.

என் படிப்பை மட்டுமே அஸ்திவாரமாகப் போட்டு உண்மை, உழைப்பு, நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை இவற்றுடன் பயணம் செய்து வந்தேன்.

24 வருடங்கள் ஓடிவிட்டன. இதோ 2017-ல் 25-வது வருடத்தில் எங்கள் காம்கேர் நிறுவனம். ஏராளமான புத்தகங்கள், சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகள் என வளர்ந்திருந்தாலும் எங்கு சென்றாலும் என்னை அடையாளம் காட்டுவது என் எழுத்துக்கள்தான்.

பன்முகத்தன்மை கொண்ட  இடர்பாடு ஆதிகமுள்ள தொழில்முனைவில் ஈடுபட்டுள்ளவரான நீங்கள் பிறப்பிலேயே தைரியசாலியா?

தைரியசாலியாகவே வளர்த்தார்கள் என் பெற்றோர். சிறிய வயதில் அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் நாங்கள் தனியாக இருக்கும்போது எப்படி பாதுகாப்பாக இருப்பது, எப்படி சூழ்நிலைகளை எதிர்கொள்வது என  சொல்லிக்கொடுத்தார்கள். எங்களுடன் நிறைய பேசுவார்கள். அன்றாட நிகழ்வுகளை கதைபோல சொல்லுவார்கள்.

தொலைபேசித்துறையில் பணிபுரிந்த என் அப்பா, அம்மா இருவருக்கும் 24 மணி நேர பணி சுழற்சி. அப்பாவுக்கு இரவுநேர ஷிஃப்ட் வரும்போது, இரவில் அம்மாவைச் சுற்றி  நாங்கள் மூவரும் படுத்திருப்போம். அருகில் மிளகாய்பொடி டப்பா, சின்ன கத்தறிக்கோல், கைக்கு எட்டும் தூரத்தில் விளக்குமாறு போன்றவற்றை வைத்திருப்பார். காரணம் அந்த நாட்களில் வீடு பெரியதாக இருக்கும். திருட்டு பயமும் உண்டு. ஓட்டு வீடு என்பதால் பூராண், தேள் என விஷ ஜந்துக்களும் எட்டிப் பார்ப்பதற்கும் வாய்ப்புண்டு.

அதுபோல அம்மாவுக்கு இரவுநேர ஷிஃப்ட் டியூட்டி வரும்போதும் அப்பாவைச் சுற்றிப் படுத்திருப்போம். எங்கள் படுக்கைக்கு அருகில் மேலே குறிப்பிட்ட அத்தனை பாதுகாப்பு சாதனங்களும் அப்படியேத்தான் இருக்கும்.

இதுபோல சின்னச் சின்ன விஷயங்களிலும் நாங்களே எங்களைப் பாதுகாத்துக்கொள்ள நுட்பங்களை அவர்களே பின்பற்றி முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.

என் சிறுவயது காலத்தில் வாசலில் பிச்சை கேட்டு வருவார்கள். நாங்கள் வீட்டுக்குள் சென்று அப்பா அம்மாவிடம் கேட்டு வந்து பதில் சொல்வதைப்போல  ‘பிறகு வாருங்கள்’  என்று பதில் சொல்லுவோம். ஆனால் இருவருமே உள்ளே இருக்க மாட்டார்கள்.

எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. இருவருமே அமெரிக்காவில் சாஃப்ட்வேர் துறை வல்லுநராக உள்ளனர். எங்கள் சிறுவயதில் எங்கள் மூவருக்கும் ஒரு நோட்டு கொடுத்திருப்பார்கள் எங்கள் பெற்றோர்.

நாங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது எங்களுக்குள் ஏதேனும் சண்டை வந்தால் அவற்றை அந்த நோட்டில் எழுதி வைப்போம். அப்பா அம்மா வந்ததும் பஞ்சாயத்து நடக்கும். சண்டை தீர்ந்துபோகும்.

அதுபோல யாரேனும் வீட்டுக்கு வந்தால் அந்த செய்தியையும் அந்த நோட்டில் எழுதி வைப்போம், அப்பா அம்மாவிடம் மறக்காமல் சொல்வதற்காக.

இப்படி சின்னச் சின்ன மேனேஜ்மெண்ட் நுணுக்கங்களை எங்களுக்குள் சிறுவயதிலேயே புகுத்தினார்கள்.

என் 10 வயதில் சைக்கிள் கற்றுக்கொடுத்தார் என் அப்பா. 18 வயதில் கியர் வைத்த பைக், 21 வயதில் கார் ஓட்டும் பயிற்சி. இப்படி படிப்பு, பாதுகாப்பு, பயணம் என எங்களை நாங்களே ஆளுமை செய்யும்படி தன்னம்பிக்கையுடன் வளர்ந்தார்கள்.

அதே நேரத்தில் அமைதி, பெரியோர்களை மதித்தல், ஆசிரியர்களுக்கு தலைவணங்கல் என வாழ்வியலிலும் நாங்கள் சிறந்துவிளங்கும் அளவுக்கு வளர்த்தப் பெருமை என் பொற்றோரையே சாரும்.

ஆனாலும் சென்னை வந்த புதிதில் எல்லோரையும் போல் நானும் ஒரு சாதாரண பெண் தான். பஸ், ரயில், மனிதர்கள் எல்லாமே அதிசயங்கள். அன்று மிக அபூர்வமாக பைக்கில் செல்லும் பெண்களை ஆச்சர்யமாகப் பார்த்தபடி பயணித்திருக்கிறேன். இத்தனைக்கும் கியர் வைத்த வண்டி கூட ஓட்டக் கற்றுக் கொடுத்திருந்தார் அப்பா. ஆனாலும் சென்னை சாலையில் ஓட்டுவது பிரமிப்புத்தானே. ரயில் தூரத்தில் வரும் போதே உள்ளுக்குள் ஒரு பதட்டம் ஒட்டிக் கொள்ளும். நாம் ஏறுவதற்குள் ரயில் கிளம்பி விடுமோ என்ற பயமே காரணம். இறங்கும் இடம் வரும் வரை நின்று கொண்டே வருவேன். காரணம் இறங்க வேண்டிய ஸ்டேஷன் சென்று விடுமோ என்ற பயத்தால். பஸ்ஸானால் ஏறும் போதே கண்டக்டரிடம் இறங்கும் இடத்தைச் சொல்லச் சொல்லி கேட்டுக் கொள்வேன். ஆனாலும் பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை கண்டக்டர் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன்..

பணிநிமித்தம் பயணம் செய்ய முதன்முதலில் பைக் வாங்கினேன்.  சென்னையின் பெரும்பான்மையான இடங்களுக்கு பைக்கிலேயே பயணித்திருக்கிறேன். அடுத்து கார் ஓட்டக் கற்றுக்கொண்டு காரும் வாங்கினேன்.

உழைப்பினால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையே எனது தொழில்முனைவு முடிவுக்கு அடைப்படை.

உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிராஜெக்ட் ஏதேனும் செய்திருக்கிறீர்களா?

பல முறை அமெரிக்கா சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த பிராஜெக்ட்டுகளில் ஈடுபடுத்திக்கொண்டதோடு, அங்கு தயாரித்த ‘உயர்கல்வியில் இந்திய கல்விமுறைக்கும் அமெரிக்க கல்விமுறைக்குமான ஒப்பீடு’ என்ற ஆவணப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பல பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும்  நடைபெறும் கருத்தரங்களில் உரையாடி மாணவர்களுக்கான ஊக்கசக்தியாகவும் இருந்துவருகிறேன்.

காம்கேரின் சமூகப் பார்வை பற்றி சொல்லுங்கள்!

இந்தச் சமுதாயம் எனக்களித்த சுதந்திரத்துக்கும் மரியாதைக்கும் நன்றி செலுத்தும் விதமாக ‘ஸ்ரீபத்ம கிருஷ்’ அறக்கட்டளையைத் தொடங்கி அதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதத்தில் பல்வேறு பணிகளை செய்துவருகிறேன். என் தாய் ‘பத்மாவதி’, தந்தை ‘கிருஷ்ணமூர்த்தி’ இருவரின் பெயர்களில் இருந்து உருவானதே ‘ஸ்ரீபத்மகிருஷ்’.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக உதவிவரும் இந்த அமைப்பின் வாயிலாக சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினரில் (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள் Etc.,) திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’விருதளித்தும் கெளரவிக்கிறோம்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்க்ரைப் உதவியுடன் தேர்வு  எழுதாமல் கம்ப்யூட்டர்/லேப்டாப்பில் யாருடைய உதவியின்றி பரிட்சை எழுதும்விதத்தில் ஸ்க்ரைப் சாஃப்ட்வேர் உருவாக்கி பீட்டா வெர்ஷன் ரிலீஸ் செய்துள்ளோம். பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் கிடைத்தபின்னர் அது நடைமுறைப்படுத்தப்படும்.

முதன் முதலாக தொழில் முனைவு எண்ணம் தங்களுக்கு எப்படி ஏற்பட்டது? அப்படி ஏற்பட்டபோது உங்களது உறவினர்கள், நண்பர்கள் உங்களை ஊக்குவித்தார்களா?

என் அம்மா நிறைய படிப்பார். படித்ததில் பிடித்ததை கட் செய்து வைப்பார். என் அப்பாவுடன் சேர்ந்து கோடை விடுமுறையில் அவற்றை பைண்டிங் செய்வதே அந்த காலத்தில் எங்கள் சம்மர் கோர்ஸ். இன்றும் எங்கள் வீட்டு லைப்ரரியில் நாங்கள் எங்கள் கைகளால் பைண்டிங் செய்த சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை அலங்கரித்துள்ளது.

எங்கள் கைகளால் நாங்களே பைண்டிங் செய்த புத்தகங்களைப் பார்க்கும்போது படிக்கும் பழக்கம் தானாகவே ஏற்பட்டது. நாங்கள் மூவருமே நிறைய படிப்போம். படிப்பு நிறைய கற்பனையைக் கற்றுக்கொடுத்தது. கற்பனை எங்களுக்குள் இருந்த திறமையை வளர்தெடுத்தது. நான் எழுதத் தொடங்கினேன். என் தங்கை படங்கள் வரைய ஆரம்பித்தாள். என் தம்பி கார்ட்டூன் வரைய ஆரம்பித்தான்.

எங்கள் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள் 100-க்கும் மேற்பட்ட எங்கள் படைப்புகள் கோகுலம், குமுதம், சாவி, விகடன் என பல பத்திரிகைகளில் வெளிவந்ததோடு பாராட்டுகளையும் பெற்றுத்தந்தன.

இப்படி நான் பள்ளி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே என் திறமையை வளர்த்து வந்தேன். அதோடு மட்டுமில்லாமல் சிறுவயதில் பாடப் புத்தகத்தில் சர்.ஐசக்.நியூட்டன், சர்.சி.வி.ராமன், கணித மேதை இராமானுஜம் போன்றோர்களின் புகைப்படங்களையும் அவர்களின் சாதனைகளையும் பார்க்கும்போது அவர்களைப் போலவே நாமும் ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படும். அதுவே என் கனவாகவும் ஆனது.

என் கனவும் அடிப்படையான கற்பனையும் இணைந்து எங்கள் காம்கேர் நிறுவனத்தின் பேனரில் ஏராளமான சாஃப்ட்வேர்கள், புத்தகங்கள், அனிமேஷன் மற்றும் ஆவணப்படத் தயாரிப்புகள் என வெளியாகியுள்ளன.

என் பெயரே காம்கேர் கே.புவனேஸ்வரி என்று ஐகானானது. என் நிறுவனத்துக்கு என் பெயரே முதல் விளம்பரம்.

எம்.எஸ்.ஸி படித்து விட்டு ஏன் சுயதொழில் செய்ய வேண்டும். அமெரிக்கா சென்றால் டாலரில் சம்பாதிக்கலாமே என்று ஏராளமானோர் கருத்து தெரிவித்தாலும் நான் என் கொள்கையில் உறுதியாக இருந்ததால் என் நிறுவனத்தில் சில்வர் ஜூப்லி வருடத்தில் இருக்கிறேன்.

தொழில் தொடங்க முதலீட்டினை எவ்வாறு பெற்றீர்கள் குடும்ப சேமிப்பு, வங்கிக் கடன்?

என் பெற்றோரிடம் ரூபாய் 2 லட்சம் பெற்று இரண்டு கம்ப்யூட்டர்களையும், வாடகைக்கு ஓர் இடத்தையும் பெற்று ஆரம்பித்த எங்கள் காம்கேர் நிறுவனம் இன்று 1000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை (சாஃப்ட்வேர்-அனிமேஷன்-ஆவணப்படங்கள்-புத்தகங்கள்) வெளியிட்டு சாதனை படைத்து சில்வர் ஜூப்லி கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.

இன்று ஆன்லைனில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இன்றைய இளைஞர்களின்  திறமைகளை நேர்மையான முறையில் சம்பாத்யமாக்க சமூகவலைதளங்கள் உள்ளன.

அவர்கள் தங்கள் திறமையை இளம் வயதிலேயே கண்டறிந்து வளர்தெடுத்துவந்தால் தாங்கள் படித்த படிப்பை திறமையோடு இணைத்து வேலைவாய்ப்பை மட்டுமில்லாது தொழில்வாய்ப்பையும் பெற முடியும்.

தொழில் தொடங்குவதில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்னென்ன-  அதனை எப்படி கையாண்டீர்கள்?

வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்களை சம்பவங்களாகவே எடுத்துக்கொண்டு செல்வதால் எதுவுமே பிரச்சனைகளாகத் தெரிவதில்லை. எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை இன்றளவும் குறையாமல் உள்ளது. எனவே பிரச்சனைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

தொழில் முனைவில் ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கு தங்களது அறிவுரை என்ன ?

உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டறியுங்கள். படிப்பையும் தொடருங்கள். இப்போதெல்லாம் திறமைக்கு ஏற்ற படிப்புகள் ஏராளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. படிப்பும், திறமையும் இணையும்போது புதிதாக பிசினஸ் ஐடியா உருவாகும்.  நேர்மையும், விடாமுயற்சியும், புதுப்புது யுக்திகளும் உங்கள் பிசினஸை தொய்வடையாமல் வளர்த்தெடுக்கும்.

(Visited 331 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon