ஆளுமைகள்!

ஆளுமைகள்!

ஒரு சில ஆளுமைகள் நம்மிடம் நன்றாகவே பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களின் நட்பும் அன்பும்கூட அபரிமிதமாகவே இருக்கும். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அவர்கள் நடந்துகொள்வதில் வித்தியாசம் தென்படும். அது என்னவென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்போம். நாம் ஏதேனும் தவறாக, மரியாதைக் குறைவாக நடந்துகொண்டு விட்டோமோ என்றும் குழம்பிக் கொண்டிருப்போம்.

பெரும்பாலும் அதெல்லாம் ஒரு காரணியாகவே இருக்காது.

அப்போ வேறென்னவாக இருக்கும்?

ஏதேனும் ஒரு புள்ளியில் அவர்கள் நம்மை பற்றி உயர்வாக எண்ணும் சூழல் உண்டாகலாம். அந்த உயர்வு பணத்தின் அடிப்படையிலோ, புகழின் அடிப்படையிலோ, அந்தஸ்த்தின் அடிப்படையிலோ, திறமையின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் அடிப்படையிலோ இருக்கலாம். அப்படியான ஒரு புள்ளியில் அவர்கள் நம்மைவிட உயர்வாகக் காட்டிக்கொள்ள தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டிருக்கலாம்.

அது அவர்கள் பிரச்சனை. நாம் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். அவர்களை இனம் கண்டுகொள்ள ஒரு சந்தர்ப்பம் என ஒதுங்கிச் செல்ல அருமையான வாய்ப்பாக எடுத்துக்கொண்டு கடந்து செல்வதுதான் சிறப்பு.

பிரபலங்களில் ஒருசிலர் பாரபட்சமின்றி எல்லோரிடமும் தோள் மீது கைபோட்டு பேசும் அளவுக்கு நட்பாக இருப்பது ‘அவருக்கு மிகப் பரந்த மனப்பான்மை. யாரையும் நோகடிக்க மாட்டார் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார்’ என்ற நன்மதிப்பையும் பிம்பத்தையும் உருவாக்குவதற்காகவே. *விதிவிலக்குகள் உண்டு!*

எப்போதும் தானே உயர்வாகவும், மேலான இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஈகோவும், உயர்வுமனப்பான்மையும் கொண்டவர்களைத்தான் இந்த உலகம் ‘ஆஹா, எத்தனை அன்பானவர், பண்பானவர்’ என கொண்டாடி மகிழும். ஏனென்றால் வெளிப்பார்வையில் அவர்கள் அப்படித்தான் தங்கள் மீதான பிம்பத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.

நன்றாக கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அவர் தன் தகுதிக்கு கீழாக நினைத்துக் கொண்டிருப்பவர்களிடம்தான் தன் பேரன்பைக் காட்டுபவராக இருப்பார். எதிராளி அவரை விட ஏதேனும் ஒரு விதத்தில் உயர்வாக உருவெடுக்கும்போது அல்லது எதிராளியின் உயரத்தை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெறும்போது, அந்த பேரன்பு காணாமல் போய்விடும். அதுதான் அந்த மாயப்புள்ளி. அந்தப் புள்ளியில்தான் அவர் ’தான்’ மிக உயர்வானவர் என காண்பிக்க ஆரம்பிப்பார். வித்தியாசமாக நடந்துகொள்வார்.

எனவே எல்லாவற்றுக்கும் நம் மீதுதான் தவறு என நினைத்து மருக வேண்டாமே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEo
Compcare Software
டிசம்பர் 2, 2022 | வெள்ளிக்கிழமை

(Visited 225 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon