நான் மதிக்கும் ஒரு சிலருள் நீங்களும் ஒருவர்!
ஒரு சிலர் சொல்வார்கள் ‘நான் மதிக்கும் ஒரு சிலருக்குள் நீங்களும் ஒருவர்’.
இப்படி சொல்பவர்கள்தான் வெகு சீக்கிரம் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள்.
காரணம், அவர்கள் நம் மீது மனதுக்குள் வைத்திருக்கும் மதிப்பை நமக்கு தெரியப்படுத்துவதன் மூலம் நாமும் அவர்களைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பை வைத்துக்கொள்வார்கள்.
அவர்களாக வேண்டுமென்றே வைத்துக்கொள்ள மாட்டார்கள். மனித மனம் அப்படித்தான். எதையாவது பற்றிக்கொள்ளத் துடிக்கும். அன்பினால், பண்பினால், திறமையினால், அழகினால் இப்படி ஏதேனும் ஒன்றினால் ஈர்க்கப்பட்டு பற்றிக்கொள்ள துடிக்கும் வெகு மென்மையானது நம் மனமும் இதயமும். எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதற்கு மிக உயரிய மனத்திண்மை வேண்டும்.
‘நாம் எவ்வளவு மதிக்கிறோம். கொண்டாடுகிறோம். ஆனால் அவர் அப்படி இல்லையே. கண்டுகொள்ளக் கூட மாட்டேன் என்கிறாரே?’ நம் மனம் இப்படித்தான் நினைக்கும். அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குள் பரவி ஊடுருவி, நம்மிடம் எதையாவது குறை கண்டு பிடித்து அதையே சாக்காக வைத்துக்கொண்டு நம்மை வெறுக்கவும், ஒதுங்கிச் செல்லவும் செய்ய வழிவகுக்கும்.
பற்றற்று இருப்பது கடினம்தான். பற்றை முழுமையாக விடுவதும் வெகுகடினமான செயல்தான். ஆனால் தேவையில்லாமல் யாரையும் கொண்டாட வேண்டாமே. அதைக் குறைத்துக்கொண்டாலே மன நிம்மதி தானாகக் கிடைக்கும்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
November 29, 2022 | செவ்வாய்