மொழிபெயர்ப்பா? முழிபெயர்ப்பா?
ஆன்லைன் பத்திரிகை ஒன்று. கொஞ்சம் பிரபலமானதும் கூட.
அதில் சமீபத்தில் தமிழில் எழுதப்பட்டிருந்த ஒரு தொழில்நுட்பக் கட்டுரையை படித்தேன். எழுதியவர் சிறு வயது பெண்தான். இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ் இப்போதுதான் முடித்துள்ளார் என கட்டுரையாளர் குறிப்பில் போடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் வயது 20, 21 க்குள்தான் இருக்க வேண்டும்.
அவர் பயன்படுத்தி இருந்த தமிழ் வார்த்தைகளுக்கு பொருளை கூகுள் செய்துதான் பார்க்க வேண்டி இருந்தது. நிச்சயமாக அவருக்குமே அந்த வார்த்தைகள் புதிதாகத்தான் இருந்திருக்கும். தமிழில் தொழில்நுட்பத்தை எழுத வேண்டும் என கேட்டிருப்பார்கள். எனவே மிகுந்த சிரமப்பட்டே அதை எழுதி இருப்பார் என தோன்றியது.
அந்த வெப்சைட்டில் ஒரு ஸ்குரோல் செய்துகூட படிக்க முடியாத அளவுக்கு அயர்ச்சியாக இருந்தது. அதை படித்தவுடன் ‘எனக்கு தமிழே தெரியவில்லையோ’ என்ற எண்ணமே மேலோங்கியது. இதுப்பொன்ற காரணங்களினால் தான் தமிழில் எழுதப்படும் தொழில்நுட்பங்கள் சரியானபடி சென்றடைவதில்லை.
நான் தொழில்நுட்பத்தை தமிழில் முதன் முதலில் 1992-ல் கொண்டு வந்த போது அது மக்களிடையே பரவலாக சென்றடைந்ததுக்கும், இன்று வரை என் எழுத்துக்கு (குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்தது) நல்ல வரவேற்பு இருப்பதற்கும் முக்கியக் காரணம் அந்தந்த தொழில்நுட்ப வார்த்தைகளை, எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே பயன்படுத்துவது என்ற கொள்கையில் உறுதியாய் இருப்பதுதான்.
நான் Mouse என்பதை தமிழில் மவுஸ் என்றுதான் எழுதுவேன். ஆனால் அதை மொழி பெயர்க்கிறேன் என்று சொல்லி எலி, சுண்டெலி என்றெல்லாம் பயன்படுத்திய எழுத்தாளர்களை எல்லாம் எனக்குத் தெரியும்.
நான் மாதம் ஒரு புத்தகம் வெளியிட்டுக்கொண்டிருந்த காலத்தில் இரண்டு காதுகளில் இருந்தும் புகை வரும் அளவுக்கு பொறாமையினால் பேசிய ஒரு எழுத்தாளர் ’உங்கள் எழுத்தில் ஆங்கில வார்த்தைகள் அதிகம் வருகின்றது. Hard Disk என்பதை வன் தட்டு என குறிப்பிடாமல் ஹார்ட் டிஸ்க் என்கிறீர்கள், CD என்பது மென் தட்டு என்றில்லாமல் சிடி என்கிறீர்கள்…’ என்று கூறினார்.
’ஆமாம் சார், என் எழுத்து நடையின் சிறப்பே அதுதான். நான் தொழில் நுட்பத்தைத்தான் உலகறியச் செய்கிறேனே தவிர தமிழை அல்ல. தமிழ் என்ற மொழி நம் நாட்டு மக்களுக்கு புரிகின்ற மொழி என்பதால் தமிழில் இங்கு வெளியிடுகிறேன். இதே புத்தகங்கள் மைசூர் பல்கலைக்கழக மாணவர்களுக்காக கன்னட மொழியில் வெளியாகிறது. இன்னும் சில இடங்களில் ஆங்கிலத்திலும் வெளியாகிறது. எந்த மொழியாக இருந்தாலும் தொழில்நுட்ப வார்த்தைகளுக்கு அதே பெயர்தான் வர வேண்டும். மாற்றுவதற்கு நம் யாருக்குமே உரிமை கிடையாது. அதனால்தான் Facebook என்பதை ஃபேஸ்புக் என்றே பயன்படுத்துகிறேன்…’
ஆனால் அவர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.
அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. தொழில்நுட்பத்தில் நீண்ட தூரம் வந்துவிட்டேன். என்னைச் சுற்றி உள்ள சமுதாயத்தையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
‘நீங்கள் என்ன இழுத்துக்கொண்டு வருவது’ என உங்களில் ஒருசிலர் மனதுக்குள் நினைக்கலாம். ‘இப்படிச் சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை?’ என பின்னூட்டம் இடவும் விரல்கள் துடிக்கலாம்.
அவர்களுக்காக ஒருசில வார்த்தைகள்…
எல்லோருமே தொழில்நுட்ப உலகில் பயணிப்பவர்கள்தான் என்றாலும், நான்(நாங்கள்) கொஞ்சம் கூடுதலாக அந்தத் துறையின் முன்னேற்றத்துக்காகவும் உழைப்பதால் என்னைச் சார்ந்துள்ளோரையும் சேர்த்து உயர்த்தியுள்ளேன் என கூறுகிறேன். இது கர்வத்தினால் அல்ல, அந்தத்துறையில் இன்று வரை ஆரம்பத்தில் இருந்த அதே ஊக்கம் சற்றும் குறையாமல் உழைப்பதினால் பெற்ற தன்னம்பிக்கையால்.
ஒருமுறை +1, +2 மாணவர்களுக்கான பாடபுத்தகத்தை இ-புத்தகமாக கொண்டு வரும் ப்ராஜெக்ட்டுக்கு அரசுத் துறையில் இருந்து என்னை அழைத்திருந்தார்கள். மீட்டிங் முடிந்து அலுலவகம் வந்து அவர்கள் பாடப் புத்தகத்தை எடுத்து வாசித்தேன். தலையை சுற்றியது. Class, Object, Pointers என ஒவ்வொன்றையும் சுத்த தமிழில் மாற்றி இருந்தார்கள். எனக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.
நான் தமிழ் மீடியத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தால் நிச்சயமாகச் சொல்கிறேன், நான் பாஸ் கூட ஆகி இருக்க மாட்டேன்.
Class என்பதை கிளாஸ் என்றும், Object என்பதை ஆப்ஜெக்ட் என்றும், Pointers என்பதை பாயிண்டர்கள் என்றும் உள்ளதை உள்ளபடி பயன்படுத்தினால் மட்டுமே அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தொழில்நுட்ப உலகில் பயணிக்கும்போது உதவியாக இருக்கும். இல்லை என்றால் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது!’ என்ற கதைதான்.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். எங்கள் comPcare நிறுவனத்தின் பெயரை
‘கணினி பராமரிப்பு’ என்றெல்லாம் தமிழில் மொழிபெயர்த்து கடிதம் எழுதியவர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.
To
முதன்மை செயல் இயக்குநர்
‘கணினி பராமரிப்பு’
சென்னை
எப்படி இருக்கிறது என நீங்களே படியுங்கள். ஒரு நிறுவனத்தின் பெயரை மொழி பெயர்ப்பதெல்லாம் வேறு லெவல் குழப்படி சமாச்சாரம் தானே. தவறும் கூட.
தொழில்நுட்பமோ, பொருளாதாரமோ, இலக்கியமோ எதுவாகத்தான் இருக்கட்டுமே, மக்களுக்குப் புரிகின்ற மொழியில் இருந்தால் தான் அதன் பயனும் பலனும் முழுமையாகச் சென்றடையும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிப்ரவரி 14, 2023 | செவ்வாய்