மலர்வனம் மின்னிதழ் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சி (February 19, 2023)

மலர்வனம் எடிட்டர் திரு. ராம்கி, திருமதி சீதா லஷ்மி, சிறப்பு விருந்தினர் டாக்டர் கல்பனா சுரேஷ் மற்றும் காம்கேர் கே. புவனேஸ்வரி 

மலர்வனம் மின்னிதழ் பல்துறை சார்ந்த 15 சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தது. அந்த நிகழ்ச்சிக்கு கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களுடன் காம்கேர் கே. புவனேஸ்வரியும் சிறப்பு அழைப்பாளர்கள். அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருது வழங்கிய பிறகு காம்கேர் கே. புவனேஸ்வரி ஆற்றிய உரையின் சாராம்சம் இதோ உங்கள் வாசிப்பிற்கும்! 

நிகழ்ச்சியில் காம்கேர் கே. புவனேஸ்வரியின் உரை!

மலர்வனம் வழங்கும் சாதனைப் பெண்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

விருது வாங்கிய 18 வயது முதல் 80 வயது வரையிலான 15 தேவதைகளுக்கும் என் வாழ்த்துகள்.

நான் ஏன் பெண்கள் என சொல்லாமல் தேவதை என சொல்கிறேன் தெரியுமா?

ஒரு கதை சொல்கிறேன். அதிலேயே அதற்கான பதில் இருக்கிறது.

இரண்டு அரசர்கள்  சண்டை போட்டார்கள்.  தோற்றுப்போன அரசனிடம் ஜெயித்த அரசன் சொல்கிறான்.

“உன்னை கொல்லாமல் விடுகிறேன்… அதற்கு நீ ஒரு விஷயம் செய்ய வேண்டும்… நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். அதற்கு அவள்  ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்று  சொன்னால் திருமணம் செய்துகொள்கிறேன்…’ என நிபந்தனை போட்டிருக்கிறாள். எனவே அந்த உண்மையை நீ கண்டுபிடித்து சொல்லிவிட்டால் நான் உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன்…”

உடனே, தோற்ற அரசன் பலரிடமும் சென்று  கேட்கிறான்.  அவனுக்கு சரியான விடை கிடைக்கவில்லை. கடைசியாக,  சூனியக்காரக் கிழவி ஒருவள் இருக்கிறாள். அவளுக்கு  எல்லா விஷயங்களும் தெரியும் என்ற தகவல் அவனுக்குக் கிடைக்கிறது.

அவளைத் தேடிச் சென்று  அவளிடம், ‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?’ என்ற கேள்வியை கேட்கிறான்.

அதற்கு அந்த சூனியக்கார கிழவி சொல்கிறாள்.

‘நான் பதில் சொல்லி விடுவேன். பதில் கிடைத்தால் உன்னை ஜெயித்த அரசனுக்கு திருமணம் ஆகும்; நீ விடுதலை ஆகிவிடுவாய்;  ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்’

அதற்கு அவன்  ஒரு ஆர்வத்தில் சொல்லிவிடுகிறான், ‘நீ என்ன கேட்டாலும் தருகிறேன்’.

சூனியக்கார கிழவி சொல்கிறாள்…

‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள் என்றால்… தன் சம்மந்தப்பட்ட எல்லா முடிவுகளையும் தானே எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள்… தன் முடிவுகளை பிறர் எடுக்க அவள் விரும்புவதில்லை…’

உடனே அந்த அரசன் தன்னை ஜெயித்த அரசனிடம் சென்று சொல்ல அந்த அரசன் தன் காதலியிடம் அந்த பதிலைச் சொல்ல அவர்களுக்குத் திருமணமும் நடந்துமுடிகிறது. தோற்ற அரசனும் தண்டனையில் இருந்து விடுதலை ஆகிறான்.

அடுத்து தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நேராக அந்த சூனியக்கார கிழவியிடம் சென்று நடந்ததைச் சொல்லி மகிழ்ந்து, ‘நீ என்ன வேண்டும் என கேள்… தருகிறேன்…’ என சொன்னான்.

உடனே அந்த கிழவி ‘என்னை திருமணம் செய்துகொள்…’ என்கிறாள்.

அந்த அரசன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தாலும் மறுநொடி சுதாகரித்துக்கொண்டு ‘சரி நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்… உன்னை நான் திருமணம் செய்துகொள்கிறேன்… எப்போது திருமணம்…’ என கேட்கிறான்.

‘நாளை காலை 10 மணிக்கு மாலையோடு வா…’ என்கிறாள் கிழவி.

மறுநாள் சரியாக 10 மணிக்கு மாலையோடு அந்த அரசன் அந்த இடத்துக்கு வர அங்கு அழகான தேவதைபோன்ற ஒரு இளம்பெண் அமர்ந்திருக்கிறாள்.

அவளிடம் அவன் கேட்கிறான்… ‘இங்கே இருக்கும் சூனியக்கார கிழவி எங்கே?’

அதற்கு அவள், ‘நான் தான் அவள்..’ என்று சொன்னாள்.

அவன் அதிர்ச்சியாகி ‘நேற்று சூனியக்கார கிழவியாக இருந்தாயே…’ என கேட்க, அதற்கு அவள், ‘என்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்க முடியும்…’ என்கிறாள். மேலும் ஒரு போட்டி வைக்கிறாள்.

‘உன்னோடு நான் வெளியே வரும்போதெல்லாம் இப்படி அழகு தேவதையாக வர வேண்டும் என்றால், உன்னோடு தனியாக இருக்கும் நேரங்களில் சூனியக்காரக் கிழவியாக இருப்பேன்… வெளியே உன்னோடு வரும்போது சூனியக்கார கிழவியாக வர அனுமதித்தால் உன்னோடு அந்தரங்கமாக இருக்கும் நேரங்களில் அழகு தேவதையாக இருப்பேன்… நீதான் முடிவெடுத்து பதில் சொல்ல வேண்டும்… நான் எப்படி இருக்க வேண்டும்’ என்கிறாள்.

ஒரு விநாடிகூட யோசிக்காமல் அந்த அரசன் சொல்கிறான்.

‘இது உன் பிரச்சனை. முடிவெடுக்க வேண்டியது உன் வேலை. நீ என்ன முடிவெடுக்கிறாயோ அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்…’

அதற்கு அந்த தேவதை சொல்கிறாள்… ‘எப்போது முடிவெடுக்கும் உரிமையை என்னிடத்தில் விட்டு விட்டாயோ… இனி எல்லா நேரங்களிலும் நான் அழகு தேவதையாகவே உன்னோடு இருப்பேன்…’ என்கிறாள்.

ஒரு பெண் தானே முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெரும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

விருது வாங்கிய அத்தனை சாதனைப் பெண்களுக்கும் தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்கும் சூழலும், கல்வியும், ஞானமும் இருப்பதால்தான் இன்று இந்த விழாவில் தேவதைகளாக அமர்ந்திருக்கிறார்கள்.

அவர்களுடன் சேர்த்து நானும் டாக்டர் கல்பனா சுரேஷும் தேவதைகளாகவே இந்த மேடையில் அமர்ந்திருக்கிறோம். காரணம், எங்களுக்கும் எங்கள் முடிவுகளை நாங்களே எடுக்கும் சூழல் இருப்பதே அதற்குக் காரணம்.

ஆண்களுக்கு மட்டும் வேண்டாமா முடிவெடுக்கும் சூழல்?

யாருக்குத்தான் ஆசை இருக்காது சுதந்திரமாக முடிவு எடுக்கவும், தனித்துவமாக செயல்படவும்?

காலம் காலமாக ஆண்களுக்கு அந்த சூழல் இயற்கையிலேயே அமைந்துவிட்டது. தங்கள் முடிவுகளை மட்டும் இல்லாமல் பெண்களுக்குமான முடிவுகளையும் அவர்களே சேர்த்து எடுக்கும் சுதந்திரமும் உள்ளது. ஆனால், பெண்களுக்குத் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழல் வந்து கொண்டிருக்கிறது என்பதால் பெண்களுக்காக கொஞ்சம் கூடுதலாக நாம் பேச வேண்டி உள்ளது.

மற்றபடி இந்த மேடையில் நான் பெண்ணியம் குறித்தெல்லாம் பேச வரவில்லை.

நிகழ்ச்சிக்குக் காரணகர்த்தாவான ராமனும், சீதாவும்!

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மலர்வனம் மின்னிதழ் நிறுவனர், ஆசிரியர் திரு. கே.ஆர். ராமகிருஷ்ணன் அவர்களும், அவர் மனைவி திருமதி. சீதாலஷ்மி அவர்களும் ராமனும் சீதையும் போல அவ்வளவு ஒற்றுமை. மேடையில் அமர்ந்திருந்தபோது நான் ராம்கி அவர்களின் மனைவிடம் அவரது முழு பெயர் என்ன என்று கேட்டபோது அவர் சீதா என்று சொன்னார், என் காதில் அது சரியாக விழாததால்  ‘சீதாவா, கீதாவா’ என கேட்டேன். அவர் மிக மகிழ்ச்சியாக அவர் ராமன், நான் சீதா என்று முகமெல்லாம் சிரிப்பாக பதில் சொன்னார். அதில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள் அவர் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறார் என. அவர் ஒரு தேவதையாக இருப்பதால்தான் அவராலும் அத்தனை மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த நாளில் இருந்து இந்த நிகழ்ச்சி நடைபெறும் இந்த நாள் வரை ராம்கி அவர்களின் திட்டமிடல் அத்தனையும் அருமை. அதன் விளைவுதான் இன்று இந்த அரங்கத்தில் 100-க்கும் அதிகமானோர்.

நான் மிகச்சரியாக 3.55 க்கு மணிக்கு அரங்கத்தில் நுழைந்தபோது வியந்துவிட்டேன். அரங்கம் முழுவதும் நிறைந்திருந்தது. குறித்த நேரத்தில் 4 மணிக்கு மேடைக்குச் சென்றாயிற்று. நிகழ்ச்சி கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது.

ராம்கி அவர்களின் செயல் நேர்த்தி வியக்க வைக்கிறது. அதனால்தான் அவரால் இன்று மலர்வனம், பாட்டும் பரதமும் என இரண்டு மின்னிதழ்கள் நடத்த முடிகிறது.

நம் வாழ்க்கையில் நாம் ஏதேனும் ஒரு விஷயத்தில் ஒழுக்கத்தையும் நேர்த்தியையும் பின்பற்ற ஆரம்பித்தால் அதுவே நம் இயல்பாகிவிடும். நம் எல்லா செய்கைகளிலும் அது பிரதிபலிக்கும். அது நாம் செய்யும் சமையலாக இருந்தாலும் சரி, கம்ப்யூட்டரில் எழுதும் புரோகிராமாக இருந்தாலும் சரி, நிறுவனத்தை நடத்திச் செல்வதாக இருந்தாலும் சரி, பத்திரிகை நடத்துவதாக இருந்தாலும் சரி.

நம் அடுத்தத் தலைமிறையினருக்கு இந்த ரகசியத்தைக் கடத்துவோம். நல்லதொரு இளைய சமுதாயத்தை வளர்த்தெடுப்போம்.

அனைவருக்கும் நன்றி

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software

பிப்ரவரி 19, 2023 | ஞாயிறு

நிகழ்ச்சி குறித்து வந்துள்ள மீடியா செய்திகளுக்கு இங்கே செல்க: Media News (ALL)

(Visited 223 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon