காக்காய்க்கு வடாம்!
முன்பெல்லாம் வீடுகளில் வடாம் தயார் செய்து காய வைக்கும்போது குடையை விரித்து அருகில் வைப்பார்கள் காக்காய் வந்து வடாம் தின்னாமல் இருக்க. அது எளிமையான லாஜிக். எந்த பாட புத்தகத்திலும் சொல்லிக் கொடுக்காத வாழ்க்கைப் பாடம்.
சமீபமாய் நான் காணும் காட்சி ஆச்சர்யமாக உள்ளது. 60+ வயதான அம்மாவும், 40+ வயதில் மகளுமாய் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டு மாடியில் வடாம் பிழிந்து காய வைக்கிறார்கள்.
ஒரு துணியின் மீது வடாம் பிழிகிறார்கள். மேலே எதையும் போட்டு மூடுவதில்லை. நான்கு பக்கமும் கல் வைக்கிறார்கள் பறக்காமல் இருக்க. காற்றில் மண், தூசி அத்தனையும் அதன் மீது நிச்சயம் பறந்து வந்து ஒட்டிக் கொள்ளும்.
இதுவாவது பரவாயில்லை, அதன் மிக அருகிலேயே காக்காய்க்கு அவர்கள் வழக்கமாய் போடும் சாதம், பிரட் துண்டு என போடுகிறார்கள்.
காக்காய் அவற்றை தின்ன வரும்போது வடாமையும் சாப்பிடவோ அல்லது அதன் மீது அமர்ந்து சாப்பிட முயற்சிக்கவோ செய்யாது என்பது என்ன நிச்சயம்?
காக்காய் இறந்த அணில், எலி போன்ற பிராணிகளின் மேல் ஏறி அமர்ந்து கொத்தித் தின்னும். அதே காலுடன் அதே அலகுடன் தானே வடாமையும் கொத்தித் தின்னும். நான் இங்கு சொல்ல வருவது சுத்தத்துக்காக மட்டும் அல்ல. சுகாதாரத்துக்காகவும்தான்!
மாலையில் அம்மா வாக்கிங் செல்லும்போதும் பார்த்திருக்கிறார். காலையில் பார்த்தபோது எப்படி இருந்ததோ அப்படியே மூடப்படாத நிலையில் வடாம். வெயில் தாழ்ந்து வந்து அந்த புடவையை அப்படியே அள்ளி முடிந்து எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
60+ வயது அம்மாவுக்கும் தெரியவில்லை. 45+ வயது மகளுக்கும் தெரியவில்லை. ஜெனரேஷன் கேப்பே இல்லை இப்போதெல்லாம். எல்லா ஜெனரேஷனும் ஒரே ஜெனரேஷனாக கலந்து விட்டது.
வேறென்ன சொல்ல?
குடையை வைத்து காக்காயை மிரட்ட வேண்டாம், குறைந்தபட்சம் வடாமிற்கு அருகிலேயே காகத்துக்கு அன்னமிட்டு வடாமை ருசி பார்க்கத் தூண்டாமல் இருக்கலாமே?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 1, 2023 | வியாழன்