நாம் என்ன AI ரோபோக்களா?

நாம் என்ன AI ரோபோக்களா?

வயதில் மூத்த பெண்மணி. இலக்கியத் துறையில் சாதித்தவர். சில வருடங்களுக்கு முன்னர், இலக்கிய உலகில் அவரது 70-ஐக் கொண்டாடினார்கள். எனக்கும் அழைப்பு வாட்ஸ் அப்பில் வந்தது, நிகழ்ச்சிக்கு முதல்நாள்.

என்னுடன் நட்பாகப் பேசுவார் என்பதால் வாட்ஸ் அப் அழைப்பிற்கே அகமகிழ்ந்து அவரை நானே போனில் அழைத்துப் பேசினேன். மனமார வாழ்த்தினேன்.

‘கட்டாயம் வந்துடுங்க… என்னுடன் எனக்காக நில்லுங்கள்…’ என்று வலியிறுத்தினார்.

நிகழ்ச்சி இரவு 9 மணிக்குதான் முடியும் என நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தார்கள். அத்துடன் அன்று நான் செல்ல வேண்டுமானால் அலுவலகத்தில் சில முக்கியமான ப்ராஜெக்ட் மீட்டிங்குகளை தவிர்த்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு வந்து சேர்வதற்கு 11 மணி ஆகிவிடும். பொதுவாகவே வீட்டுக்கு 9 மணிக்குள் வந்து சேரும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்கிறேன். இதையெல்லாம் மனதில் கொண்டு ‘வர முயற்சிக்கிறேன் மேடம்’ என்றேன்.

‘எப்படியாவது வந்துடுங்க…’ மீண்டும் மீண்டும் அதே வலியுறுத்தல்.

வழக்கமான நிறுவன வேலைகளுடன் வேறொரு பர்சனல் வேலையும் வந்துவிட்டதால் நிகழ்ச்சிக்குச் செல்ல முடியவில்லை. வாட்ச் அப்பில் வாழ்த்து அனுப்பினேன். ஆனால் அதை பார்த்தும் எந்த பதிலும் அனுப்பவில்லை. இரண்டு ப்ளூ டிக்குகள் மட்டுமே என்னைப் பார்த்து சிரித்தன.

அவர் குணம் எனக்குத் தெரிந்ததுதான். வயதுக்கேற்ற முதிர்ச்சி இருக்காது. எதையும் புரிந்துகொள்ளவும் முயற்சிக்க மாட்டார் என்பதால் நான் முதலில் வருந்தினாலும் பின்னர் அதை ஒதுக்கி வைத்தேன்.

அடுத்த நாள் போனில் அழைத்தேன். எடுக்கவில்லை. அடுத்த முறை கட் செய்தார். வாட்ஸ் அப் தகவலில் ‘பேச வேண்டும்’ என தகவல் அனுப்பினேன்.

சில மணி நேரங்கள் கழித்து போனில் அழைத்தார்.

‘ம்… சொல்லுங்க…’ என்றார் குரலை உயர்த்தி. அதில் நான் நிகழ்ச்சிக்கு வராத வெறுப்பு கொப்பளித்தது.

‘நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. நிகழ்ச்சி எப்படி நடந்தது, நன்றாக நடந்திருக்கும் என நினைக்கிறேன்…’ என பொதுவாக என் இயல்புபடி விசாரித்தேன்.

‘ம்…ம்… நடந்தது…. நன்றாகவே நடந்தது….’ என்றார் விட்டேத்தியாக.

நானும் அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை. ‘வாழ்த்துகள் மேடம்…’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

இத்தனைக்கும் அவர் மாதத்தில் ஒரு நாள் மொபைல் போனில் ஏற்படும் சந்தேகங்கள், அவர் எழுதும் புத்தகங்களை டைப் செய்யும்போது எம்.எஸ்.வேர்டில் உண்டாகும் பிரச்சனைகள் என ஏதேனும் ஒரு விஷயத்துக்காக எனக்கு போன் செய்துவிடுவார்.

வாட்ஸ் அப்பில் அழைப்பிதழ் அனுப்பியதற்கே நான் முதல் நாளே தொடர்பு கொண்டு பேசி வாழ்த்தி, அடுத்த நாள் நிகழ்ச்சி முடிந்தும் வராதததுக்கு காரணம் சொல்லி திரும்பவும் வாழ்த்தியும் எதிலுமே திருப்தி இல்லாமல் விரோதத் தன்மையுடன் பேசியவரை நினைத்து இன்றும் எனக்கு ஆச்சர்யம்தான்.

பிறரது சூழலை, பிறரது குணத்தை, பிறரது சுபாவத்தை புரிந்துகொள்ளாதவர்கள் என்ன படித்து, என்ன எழுதி, என்ன சாதித்து என்ன பயன்? அப்படியும் நாம் சொல்லிவிட முடியாது. அவர்களின் குணத்தினால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயன் இருக்கலாம். ஆனால் அவர்களைச் சுற்றி இயங்கும் இந்த சமுதாயத்துக்கு என்ன சொல்ல வருகிறார்கள் அவர்களின் முதிர்ச்சி அற்ற குணத்தினால்?

நான் என்ன செய்திருக்க வேண்டும், வாட்ஸ் அப்பில் நிகழ்ச்சி குறித்த தகவலைப் பார்த்தும் பார்க்காதது போல் விட்டிருக்க வேண்டும். அதற்கு மதிப்பு கொடுத்து நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும் வாழ்த்த நினைத்ததுதான் இந்த பிரபஞ்ச நியதிக்கு ஒத்துவராத விஷயமாகி விட்டது என நினைத்தேன்.

நிகழ்ச்சிக்குச் செல்ல முடியாததால், நிகழ்ச்சி குறித்து விசாரித்து வாழ்த்துவதைப் போலவே, நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தாலும் அந்த நிகழ்ச்சி குறித்தும் இதே மகிழ்ச்சியுடன்தான் அவருக்கு தகவல் அனுப்பி இருப்பேன். அடுத்த நாள் போனிலும் பேசி இருப்பேன். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களினால்தானே வாழ்க்கை இனிமையாகிறது.

இல்லை எனில் இனி வர இருக்கும் AI ரோபோக்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 2, 2023 | வெள்ளி

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon