பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்!

பெற்றோரை இழக்கும் குழந்தைகள் பாடும், மனநலம் பாதிக்கப்படுவர் பாடும்!

ஒடிசா ரயில் விபத்தை கேள்விப்பட்ட போது நான் தயாரித்துக் கொண்டிருந்த மெட்டாவெர்ஸ் பிரசன்டேஷனை தொடர்ந்து தயாரிக்க முடியாமல் அப்படியே சில மணி நேரங்கள் நிறுத்தி வைத்தேன்.

என்ன தொழில்நுட்பம் வந்தால் என்ன? என்ற ஒரு வறட்சியான மனநிலைக்குள் தள்ளப்பட்டேன்.

விபத்துக்கான காரணம் தொழில்நுட்பத்தை மீறிய மனிதத் தவறுகளோ அல்லது சதித்திட்டமோ அல்லது நம் கவனத்துக்கு வராத வேறு ஏதோ காரணமோ… அது இங்கு முக்கிய பேசுபொருள்தான் சந்தேகமே இல்லை. ஆனால், விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கையையும், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையையும் காணும்போது, விபத்துக்கான காரணங்களை அலசும் மனோநிலையை மீறிய வெறுமைதான் ஆட்கொள்கிறது.

உயிர் போனவர்களைக் கூட ஒருவகையில் சேர்த்துக்கொள்ளலாம், காயம் அடைந்து கைகால் என உடல் உறுப்புகள் சிதைந்து வாழ்நாள் கொடுமையை அனுபவிக்க இருப்பவர்களை நினைத்துத்தான் பெருவருத்தமாக இருக்கிறது.

சாதாரண சின்ன சின்ன விஷயங்களுக்கே மன உளைச்சல் உண்டாகி தலைவலி உட்பட தொடர்ச்சியாக சில உடல் உபாதைகள் உண்டாகிறது. கொடூரமான விபத்தில் சிக்கி மீண்டு வந்தாலும் அவர்கள் மனநலம் எந்த அளவுக்கு இந்தப் பிரபஞ்சத்துடன் ஒட்டி வாழும் பக்குவத்துடன் மீண்டு வரும்?

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உடல் உறுப்புகள் சிதைந்து வாழ்பவர்களைவிட மனநலம் பாதிக்கப்பட்டு மீளாத் துயரில் வாழ்பவர்களே அதிகம் இருப்பர். விபத்தில் சிக்கி மீண்டவர்களை எல்லாம் ஒருசில வருடங்களுக்குப் பின்னர் பேட்டி எடுத்தால்தான் தெரியும், அவர்களின் மனநிலை.

மேலும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கதி. முன்பெல்லாம், பெரியப்பா, சித்தி, அத்தை என வீட்டில் உறவினர்கள் எடுத்து வளர்ப்பார்கள். இப்போது நம் குடும்ப பிணைப்புகளும் அத்தனை உயிர்ப்புடன் இருப்பதில்லை என்பதால் யார் அவர்களை வளர்ப்பார்கள்? கண் இமைக்கும் நேரத்தில் அனாதைகளாகி ஆதரவற்ற குழந்தைகள் என்ற பட்டத்தை சுமக்க ஆரம்பித்த குழந்தைகளை நினைத்தால்தான் மனம் ஆற மறுக்கிறது.

விபத்தில் சிக்கி உயிர் துறந்தவர்கள் குடுப்பத்தினருக்கும், உடல் உறுப்புகள் சிதைந்து காயமடைந்தவர்களுக்கும், மனநலம் பாதிப்படைந்தவர்களுக்கும் எப்படி ஆறுதல் சொன்னாலும் அது செயற்கையாகவே இருக்கும்.

அவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பைத் தாங்கும் சக்தியை அளிக்க இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 3, 2023 | சனிக்கிழமை

(Visited 180 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon