பாகுபாடு தொடங்கும் இடம்!
அந்த குடியிருப்பு செக்கியூரிட்டி ஒரு பெண். ஐம்பத்தைந்தை தாண்டி இருக்கும். நான் அவரை பார்க்க ஆரம்பித்தது பத்து பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர், பட்டறையில் பணிக்குச் செல்லும் கணவன் மற்றும் ஐந்து குழந்தைகளுடன் அந்தக் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். 8 வீடுகள் கொண்ட குடியிருப்புதான். ஒரு சமையல் அறை. ஒரு குளியல் அறை. இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில்தான் இரவு உறக்கம்.
குழந்தைகள் ஐந்தில் மூன்று மகள்கள். பள்ளி, கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது ஐவருமே படித்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பெண்களுக்கு திருமணமும் முடித்துவிட்டார்.
ஆளுக்குத் தகுந்தாற்போல் ’வளைவார்’. குடியிருப்பவர்களில் டாக்டர் இருந்தால் அவர் குடும்பத்துக்கு இலவச மருத்துவம், பரோபகாரர் இருந்தால் அவர் வீட்டுக்கு வாங்கும் ரேஷன் சாமான்கள் மொத்தமும் இவர் சமையல் அறையில், யாரேனும் நிறுவனம் வைத்து சுயமாக சம்பாதித்தால் அவர்கள் நிறுவனத்தில் பிள்ளைகளில் யாருக்கேனும் வேலை.
இவரை நல்லவரா, வல்லவரா என்பது குறித்து பேச வரவில்லை. நான் பேச வந்ததே வேறு. கடைசி வரை படியுங்கள்.
பெரும்பாலும் அனைவருமே மரியாதையாகவே அவர்களை நடத்துவார்கள்.
அந்தக் குடியிருப்பில் திடீரென செக்யூரிட்டி மாற்றுவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இல்லாமல் இல்லை.
அந்த குடியிருப்பில் வீட்டு உரிமையாளர்களே வசித்தால் அவருக்கு சகல விதமான ‘சலாமும்’ உண்டு. ஆனால் வாடகைக்கு யாரேனும் குடி வந்துவிட்டால் அவ்வளவுதான். அவர்களுக்கு இல்லாத தொந்திரவுகளை எல்லாம் கொடுப்பார்களாம். அவர்கள் வீட்டுக்கு வைக்கும் பணிப்பெண்களையும் ஏதேனும் ஒரு தொந்திரவு கொடுத்து வேலையில் இருந்து நிற்க வைத்துவிடுவது, கார் டிரைவர்களை அவர்களே சொல்லாமல் கொள்ளாமல் வேலையில் இருந்து நிற்கச் செய்யும் அளவுக்கு டார்ச்சர் கொடுப்பது என சின்னதும் பெரியதுமாய் மன உளைச்சல்கள் கொடுத்து வந்துள்ளார். இது பல வருடங்களாக நடந்து வந்தாலும் அண்மையில் ஒரு வீட்டுக்கு வாடகைக்குக் குடிவந்தவர் மன உளைச்சலுக்கு ஆளாகி பிரச்சனை பூதகரமாகியதால் பூனை வெளியில் வந்துவிட்டது. அவ்வளவுதான்.
குறிப்பாக குடியிருப்பவரின் கார் டிரைவர் காரை எடுத்தால் கேட் கதவை திறந்து விட மாட்டார்.
அந்த குடியிருப்பின் கேட் திறந்தால் நிற்காது. தானாகவே கொஞ்சம் மூடிக் கொள்ளும். கார் எடுக்கும் வரை பிடித்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் காரைப் பதம் பார்த்துவிடும்.
டிரைவர்களுக்கு கார் கதவைத் திறந்து விடாததுக்கு அவர் சொல்லும் காரணம், ‘வீட்டு ஓனர் காரை எடுத்தால்தான் நாங்கள் கதவைத் திறந்து விடுவோம். டிரைவருக்கெல்லாம் வேலை செய்ய முடியாது’.
இப்போது சொல்லுங்கள், பேதங்கள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன என்று?
பதிவை சரியாக புரிந்துகொள்ளாமல் பின்னூட்டமிடுபவர்களுக்காக சிறு விளக்கம்: எந்த பேதமும் இல்லாமல் இந்த சமூகம் தனக்குக் கொடுக்கும் மரியாதையை தன்னைப் போலவே உழைத்து வாழும் டிரைவர்களுக்கும், வீட்டுப் பணிப்பெண்களுக்கும் கொடுக்கும் பக்குவம் அந்த செக்யூரிட்டிக்கு இல்லை என்பதே நான் சொல்ல வந்தது. இதையே ஒரு வசதியானவர் அந்த செக்யூரிட்டியை இப்படி அணுகினால் பேதம் பார்ப்பது குறித்து எப்படி எல்லாம் பேசுவார்கள். கூடுதலாக தான் ஒரு பெண் அதனால்தான் இப்படி அணுகுகிறார்கள் என்று அந்த பேதத்தையும் துணைக்கு அழைத்துக்கொள்வார்கள் தானே?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 8, 2023 | வியாழன்