இயந்திரத் தமிழ்!

இயந்திரத் தமிழ்!

சமீபகாலமாய் தமிழில் எழுதப்பட்ட சில தொழில்நுட்பக் கட்டுரைகளை வாசிக்கிறேன். தமிழில் தொழில்நுட்பத்தை எப்படி எழுதி இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளவதற்காகவே.

மிகைப்படுத்தல் இல்லாமல் சொல்ல வேண்டுமானால், அவற்றுக்கு ‘இயந்திரத் தமிழ்’ என பெயர் வைத்துவிடலாம் என்பதுபோல் வெகு கடினமான மொழி நடை.

நிச்சயம் அவை எழுத்தாளர்களின் சிந்தனை நடை அல்ல. தங்கள் அனுபவத்திலும் எழுதவில்லை. ஏனெனில் எழுதுபவர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவர்கள் அல்ல. அந்தத் துறையில் அனுபவம் பெற்றவர்களும் அல்ல.

முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு நடை. அதுவும் கூகுள் டிரான்சிலேஷன் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட தட்டையான மொழிபெயர்ப்பு.

படிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு தமிழ் வரிக்கும் தமிழ் மொழியிலேயே பொருள் தேட வேண்டிய துர்பாக்கியம்.

ஒருவர் தமிழில் எழுதி இருந்த தொழில்நுட்பக் கட்டுரைக்கான ஆங்கில ஆதாரத்தைத் தேடி எடுத்து ஆங்கிலத்தில் படித்தபோது எத்தனை அழகாக எழுதப்பட்டிருந்தது என்பதை உணர்ந்தேன்.

அப்போதுதான் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். தமிழில் மொழிபெயர்த்திருந்த அந்தக் கட்டுரையில், சில முக்கியமான பகுதிகளைக் காணவில்லை. ஆனால் அவைதான் அந்தக் கட்டுரையின் ஆதாரமே.

அவர்களுக்கு புரியவே புரியாத பகுதிகளை அப்படியே ஒதுக்கி விட்டு ஓரளவுக்கு அவர்களுக்குப் புரிவதை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன்.

எழுதுவதைத்தான் இப்படி இயந்திர தமிழில் கொடுக்கிறார்கள் என்றால், எடிட்டிங்கிலும் அப்படியே. எல்லாவற்றையும் படித்துவிட்டு அதில் முக்கியமானதைத் தொகுக்கும் அளவுக்குக் கூட பொறுமை இல்லை யாருக்கும்.

தொழில்நுட்பத்தை தமிழில் எழுதுவது என்பதை இப்போதெல்லாம் கூகுள் டிரான்சிலேஷன் மூலம் மொழி பெயர்த்து எழுதுவது என வைத்துக்கொண்டு விட்டார்கள் என நினைக்கிறேன்.

அவ்வளவு ஏன். சென்ற வருட இறுதியில் என்னை ஒரு வெகுஜனப் பத்திரிகைக்காக பேட்டி எடுத்த நிருபர் தொழில்நுட்பம் சார்ந்தவர்தான். ஆனால் அத்துறையில் பணி அனுபவம் ஏதும் இல்லை. அந்தத் துறை சார்ந்து சுயமாகவும் பிசினஸ் ஏதும் செய்யவில்லை.

என்னை பேட்டி எடுக்க நான் ‘ஒத்துக் கொண்டதன்’ நோக்கமே தொழில்நுட்பத் துறையில் நான் கால்பதித்த பிரிவுகளில் பல இன்றைய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான பல கண்டுபிடிப்புகளுக்கு அச்சாரம் போட்டவை என்ற கோணத்தில்.

ஆனால், அடிப்படையாக எங்கள் நிறுவனத்தின் சாஃட்வேர் தயாரிப்பு பிரிவை அவருக்கு விளக்குவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

கடைசி வரை சாஃட்வேர் தயாரிப்பு என்றால் என்ன என்று அவருக்கு புரியவே இல்லை. அவருக்குப் புரிய வைக்காவிட்டால் நேர்காணலில் சொதப்பி விடுவாரே என பிரம்மப் பிரயத்தனப்பட்டு விளக்கினேன். எங்கள் சாஃட்வேர்களை இயக்கியும் காண்பித்தேன்.

பேட்டி வெளியாகும் நாளுக்காகக் காத்திருந்தேன். அதிர்ச்சி எல்லாம் இல்லை. மிகவும் அயர்ச்சியாக இருந்தது.

காரணம். பேட்டி எடுத்தவருக்கு புரியாத சாஃப்ட்வேர் என்ற கோணத்தை அப்படியே எடுத்து விட்டு, அவருக்கு நன்கு புரியும் எழுத்தாளர் என்ற கோணத்தில் என்னை உருவகப்படுத்தி பேட்டியை எழுதி இருந்தார். இப்படித் தான் தொழில்நுட்பம் படாதபாடு படுகிறது.

எந்தத் துறையானாலும் சரி, அந்தத் துறை சார்ந்தவர்களின் நேரடி அனுபவங்களுடன் அந்தத்துறை சார்ந்த படைப்புகள் வெளியானால் மட்டுமே மொழியுடன் சேர்ந்து அந்தத் துறையின் பலாபலன்களும் முழுமையாக சென்று சேரும் என்பது என் கருத்து.

என் சமகாலத்தில் தொழில்நுட்பம் எழுதி வந்தவர்கள் பலரும் வேறு துறை சார்ந்தவர்கள். மொழிபெயர்ப்பில் வல்லவர்களாக இருந்ததால் அவர்களின் தொழில்நுட்பப் புத்தகங்களும் வெளி வந்தன.

ஒரு எழுத்தாளரிடம் ஒரு வாசகர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு ‘அவங்க எழுதுவது எளிமையா இருக்கு, புரியும்படி சொல்றாங்க’ என்றிருக்கிறார். (அந்த அவங்க, அடியேன் தான்.)

அதற்கு அந்த எழுத்தாளர் மிக நேர்மையாக ‘ஆமாம், அவங்க அதே துறையில் இருக்காங்க, பிசினஸும் செய்யறாங்க, நிறைய கண்டுபிடிப்புகளையும் கொண்டு வராங்க. அதனால் அவங்களோட தொழில்நுட்ப அறிவு வேறு, எங்களுடையது வேறு. நாங்கள் படித்ததை எழுதுகிறோம். அவங்க உழைப்பதை எழுதறாங்க..’ என்றிருக்கிறார்.

அதை அப்படியே அந்த வாசகரும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்த நாளை விட சிறந்த நாள் வேறெதுவாக இருக்க முடியும் சொல்லுங்கள்.

நாம் என்ன செய்கிறோம்? என்பதை இதைவிடத் தெளிவாக வேறு எப்படி சொல்லிவிட முடியும்.

ஒரே சமயத்தில் அந்த எழுத்தாளரும், அந்த வாசகரும் என் மனதில் அழியாத ஒரு இடத்தைப் பெற்றனர்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 14, 2023 | புதன்

(Visited 1,887 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon