தார்மீகத் தயக்கம்!
என் 32 ஆண்டு கால தொழில்நுட்ப அனுபவத்தில் எங்கள் காம்கேரில் நாங்கள் மேற்கொண்ட அத்தனை ஆராய்ச்சிகள் மற்றும் அவை சார்ந்த ப்ராஜெக்ட்டுகளினாலும் கிடைத்த அனுபவங்களை எழுத்து, பேச்சு, ஓவியம், ஆடியோ, வீடியோ என எந்த வகையில் எல்லாம் இந்த சமுதாயத்துக்குத் திருப்பி அளிக்க வேண்டுமோ அதையெல்லாம் அவ்வப்பொழுது அந்தந்த காலகட்டத்திலேயே கொடுத்து வந்துள்ளேன். இப்போதும். இந்த க்ஷணம் வரை அப்படியே.
ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் இதைப் பகிர்ந்தால் ஆபத்தாயிற்றே என எந்த ஒரு தொழில்நுட்பமும் என்னை பயமுறுத்தியதில்லை.
ஆனால், AI எனும் செயற்கை தொழில்நுட்பத்தில் இப்போது நாங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வில் ஒரு ப்ராஜெக்ட்டாக இருக்கும் வாய்ஸ் சிமுலேஷன் ப்ராஜெக்ட் அனுபவங்களைப் பகிர மட்டும் கொஞ்சம் தயக்கம்.
இது குறித்த ஆய்வை நாங்கள் பத்து வருடங்களுக்கு முன்பே மைசூர் பல்கலைக்கழக ப்ராஜெக்ட்டுகாக ஆரம்பித்து 80 சதவிகித வெற்றி கண்டோம். இப்போது அது முழுமை அடைந்துள்ள நிலையில் இப்படியான சிந்தனை.
காரணம் என்னவென்றால்…
சும்மாவே, நம் மக்கள் கோடு போட்டுக் கொடுத்தால் ரோடு போட்டு விடும் புத்திசாலிகள். (கிண்டல் இல்லை. உண்மையில்). இந்த அழகில் நாம் ரோடே போட்டு கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைக்கவே கொஞ்சம் தார்மீக பயம் / தயக்கம் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.
அதனால் அந்த அனுபவத்தை ஆழமாக விவரிக்காமல் அப்படி ஒன்று இருக்கிறது என்று பட்டும் படாமலும் சொல்லி நகர வேண்டிய சூழ்நிலை வந்தபோது தான் ‘ஏன் AI தொழில்நுட்பத்தில் பணிபுரிந்த மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் அந்தப் பணியை விட்டு விலகினார்கள்’ என்று புரிகிறது.
பின்னர் விரிவாகப் பகிர்கிறேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 16, 2023 | வெள்ளிக்கிழமை