‘ஸ்ட்ரெஸ்’
எதுவும் இல்லாததால் வருவதல்ல,
எல்லாமே இருப்பதால் வருவது.
உடன் பிறந்தோரிடம் கொஞ்சம் சண்டை,
அப்பா அம்மாவிடம் செல்ல கோப தாபங்கள்,
உறவினர்களுடன் வெட்டிப் பேச்சுகள்,
ஒருவர் செய்த உதவியை நீண்ட நாட்கள் (காலம் முழுவதும்கூட) நினைவில் வைத்து போற்றுதல்,
நேரம் கிடைக்கும்போது உதவி செய்தவரிடமே அதை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து நெகிழ்ச்சியாய் இருப்பது,
தேவை இருக்கிறதோ இல்லையோ சூழலுக்கு ஏற்றாற்போல் ’தேங்ஸ்’ சொல்வதும் ‘சாரி’ கேட்பதும்,
மனம் வெறுமையாய் இருக்கும்போது தனிமையில் அழுகை வந்தால் அழுது தீர்ப்பது,
நண்பர்களுடன் போட்டி, நேர்மறையான பொறாமைகள், அதனை ஒட்டிய நல்ல செயல்பாடுகள்,
பிறந்தநாள் போன்ற சிறப்பு தினங்களில் பெற்றோரையும் பெரியவர்களையும் நமஸ்கரித்தல்,
வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் ஏதேனும் ஒரு கோயிலுக்குச் செல்வது,
தினமுமே வெளியில் கிளம்பும்போது கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டு கிளம்புவது….
பணம் இருக்கிறதோ இல்லையோ, வசதிகள் இருக்கிறதோ இல்லையோ, இப்படியெல்லாம் கலந்து கட்டிய உணர்வுக் குவியல்களுக்குக் கட்டுண்டு வாழ்பவர்கள் சந்தோஷமாகவே வாழ்கிறார்கள்.
இப்போது பெரும்பாலும் அனைவரிடமும் வசதிகள் இருக்கிறது, வாய்ப்புகளும் இருக்கிறது. ஓரளவுக்கு படித்தாலே, நல்லபடியாக முயற்சி செய்தாலே நேர்மையாக உழைத்து வசதியான வாழ்க்கை வாழ முடியும். ஆனாலும், ஸ்ட்ரெஸ்… ஸ்ட்ரெஸ்… ஸ்ட்ரெஸ்.
‘ஸ்ட்ரெஸ்’ என்பது எதுவும் இல்லாததால் வருவதல்ல, எல்லாமே இருப்பதால் வருவது.
குறிப்பாக நம் உணர்வுகளை எப்படி பங்கீடு செய்து வெளிப்படுத்துவது என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்காததுதான் ஸ்ட்ரெஸுக்கான முதன்மையான காரணம்.
சந்தோஷம், வருத்தம், துக்கம், குதூகலம், கொண்டாட்டம், பெருமை, அவமானம் இப்படி எல்லாவற்றுக்குமே ஒரே ‘ரியாக்ஷன்’. ஒரே மனநிலை.
பிகாம் முடித்த ஒரு பெண் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போதே வங்கியில் காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வானார்.
அண்மையில் அவரை சந்தித்தேன். ‘எப்படி வேலை ஜாலியா இருக்கா…. ஹேப்பியா இருக்கியா?’ என்றேன்.
‘இதுவரை போர்தான் ஆண்ட்டி. ஸ்ட்ரெஸா இருக்கு… ’ என்றார்.
வேலையில் சேர்ந்த இரண்டே மாதங்களில் இப்படியான கமெண்ட். இத்தனைக்கும் அவருக்கு வேறெந்தத் துறை மீதும் ஆர்வமோ, ஈடுபாடோ கிடையாது. படித்து முடிப்பதற்குள் வங்கிப் பணி. கொண்டாடி வாழ வேண்டாமா? எல்லாமே சுலபமாகக் கிடைத்தால் இப்படித்தான் கிடைப்பதெல்லாம் துச்சமாகத் தெரியும்.
மற்றொரு இளைஞர். அவரது உறவினர் எனக்கு போன் செய்து அந்த இளைஞருக்கு அறிவுரை சொல்லச் சொன்னார்.
வங்கியில் வேலைக்கான ஆர்டர் கிடைத்தும் சென்று சேராமல் ‘வங்கி வேலை எல்லாம் பிடிக்கவில்லை. ஐடியில்தான் வேலைக்குச் செல்வேன்’ என்று ஒரே அடமாம்.
அவரிடம் பேசினேன். அவர் சொன்ன காரணம் விசித்திரமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.
‘அந்த வங்கியில் எனக்கு ஆர்டர் போட்டுள்ள கிளையில் எல்லோருமே 50 வயதைத் தாண்டியவர்கள்… ஐடித்துறை என்றால் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம்…’
இந்த இரண்டு காரணங்களில் முன்னதை அவர் சொன்னபோது எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவருக்கு சில ஆலோசனைகள் சொல்லி போனை வைத்த பிறகு நினைத்து நினைத்து சிரித்தேன்.
இப்போது சொல்லுங்கள் ஸ்ட்ரெஸ் என்பது எதுவும் இல்லாததால் வருவதா, எல்லாமே இருப்பதால் வருவதா?
குறிப்பு: இந்தப் பதிவை படித்தவுடன், ‘ஆமாம். அந்தக் காலத்தில் எல்லாம்…’ என யாரும் ஒப்பிட்டு பின்னூட்டமிட வேண்டாம். இன்றைய சூழலில், அந்தக் காலத்து மனிதர்கள், இந்தக் காலத்து மனிதர்கள் எல்லோருமே மெர்ஜ் ஆகி ஒன்றுபோல் ஆகிவிட்டனர். பொதுவாகவே, உணர்வுகளை சரியாக வெளிக்காட்டிக் கொள்வதை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் நான் சொல்ல வருவது.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 10, 2023 | சனிக்கிழமை