கறக்கும் வரை கறந்து கொள்வோமே!
பத்து ஆண்டுகளுக்கு முன்பே, பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் கிராமப்புறத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்துகொண்ட வாசகர் ஒருவர் ‘மொபைலில் நம்முடன் மற்றவர்கள் பேசுவதை நாம் எப்படி ரெகார்ட் செய்யலாம்?’ என கேட்டார்.
அப்போதெல்லாம் அதற்கு ஆப்கள் வெளிவரவில்லை. அதனால் அவர் அந்த சந்தேகத்தை கேட்டார். இதற்கு முன்பே இப்படி பல சந்தேகங்கள் கேட்டுள்ளார்.
அதில் ஒன்று : கூகுள் மீட்டில் பேசும்போது பேசுபவருக்கு தெரியாமல் எப்படி படம் எடுத்து வைத்துக்கொள்வது?
பொதுவான சந்தேகங்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் இதுபோல பிறருக்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக நான் சொல்லித் தருவதில்லை.
அவர் ஊறு செய்யப் போகிறாரோ இல்லையோ, நமக்குத் தெரியாது. அவர் நல்லவராகவும், வல்லவராகவும் கூட இருக்கலாம். ஆனால் நாம் ஏன் அதற்கு ஒரு காரணியாக இருக்க வேண்டும் என்ற சிறிய தார்மீக ஒழுக்கம் மட்டுமே அவருக்கு அந்த நுட்பத்தை கூறாமல் இருந்ததுக்கு மிக முக்கியக் காரணம்.
‘நான் அதற்கு பதில் சொல்ல இயலாது…’ என சொன்ன போது ‘என்ன மேடம் நீங்க, அந்த எழுத்தாளர் கிட்ட எதை கேட்டாலும் சொல்லுவார்…’ என ஒரு மொழிபெயர்ப்பாளர் பெயரைக் கூறினார்.
‘ஆமாம் சார். அவர் எழுத்தாளர். நான் எழுத்தாளர் அல்ல. அதே துறையில் ஆய்வுகள் செய்பவர். சாஃப்ட்வேர் தயாரிப்புகளை உருவாக்குபவர். எங்களுக்குத்தான் தெரியும் அதில் உள்ள சாதக பாதகங்கள்…’ என்றேன்.
மறுபடியும் பழைய பல்லவியை ஆரம்பித்தார். ‘அந்த எழுத்தாளர்…’
நான் அவரை முடிக்க விடவில்லை. ‘தாராளமாய் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்றேன்.
அதன் பிறகு இன்று வரை அந்த வாசகர் எந்த ஒரு சந்தேகத்துக்கும் தொடர்பு கொள்ளவில்லை.
ஒரு வாசகர் நம்மை விட்டு விலகி விடுவாரே என நினைத்து கேட்பதற்கெல்லாம் பதில் சொல்வோம் என நினைத்திருப்பார்.
அவர் தன் சந்தேகங்களை எந்த எழுத்தாளரிடமும் கேட்டிருக்கவே மாட்டார். என்னிடம் இருந்து பதிலைப் பெறுவதற்கான ஒரு யுக்தியாகவே தெரிந்தது அவரது அணுகுமுறை.
கறக்கும் வரை கறந்து பார்ப்போமே என்ற அடிமட்டமான மனநிலை. வேறென்ன சொல்ல?
சில நேரங்களில்…. சாரி பல நேரங்களில், நான் கொஞ்சம் கடினமாக பேர்வழியாகத் தோன்றுவதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 16, 2023 | வெள்ளிக்கிழமை