விருட்சங்கள்!
விதைகளின்
மேம்படுத்தப்பட்ட
வெர்ஷன்!
ஒரு முறை எங்கள் நெடுந்தூரப் பயணத்தில் எங்கள் கார் டிரைவாக வந்தவர் பெயர் நரேஷ் குமார். நான் வழக்கமாக எல்லா டிரைவர்களிடமும் பேச்சுக் கொடுப்பதைப் போல்தான் அவரிடமும் பெயர் கேட்டேன்.
அவர் தன் பெயரை சொல்லிவிட்டு, எங்கப்பாவுக்கு விவேகானந்தர் மேல் நல்ல மரியாதை மேடம், அதனால் எனக்கு நரேஷ்குமார் என்று பெயர் வைத்துள்ளார் என்று கூடுதல் தகவலுடன் பதில் சொன்னார்.
நான் ஆச்சர்யத்துடன் ’விவேகானந்தரின் பெயர் நரேந்திரன் தானே…’ என்று சொன்னேன்.
‘என் அண்ணன் பெயர் மகேஷ் குமார், அதனால் என் பெயரும் ஷ்-ல் முடிய வேண்டும் என்பதால் ‘ன்’ க்கு பதிலாக ’ஷ்’ போட்டு எனக்கு நரேஷ் குமார் அப்படின்னு பெயர் வைத்துவிட்டார். …’ என்று வெகு சீரியஸாக பதில் சொன்னார்.
அப்போது எங்களுடன் வந்திருந்த உறவினர் ஒருவர் அப்படி எல்லாம் நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது என அறிவுரை சொல்ல ஆரம்பித்து விட்டார். தன் வீட்டில் ஆயிரம் ஓட்டைகள் இருக்கும். அதில் ஒன்றைக் கூட தன்னால் அடைக்க முடியாது. ஆனால், ஊரில் ஒருவர் தன் குழந்தைக்கு தான் விரும்பியப் பெயரை வைத்துவிடக் கூடாது. நாட்டாமை மனப்பான்மையை தூக்கிக் கொண்டு வந்துவிட வேண்டியது. பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
நான்தான் பிரம்மப் பிரயத்தனப்பட்டு வேறு டாப்பிக் மாற்றினேன்.
நரேனாக இருந்தால் என்ன, நரேஷாக இருந்தால் என்ன நோக்கம் சிறப்பாக இருந்தால் அதுபோதுமே. அதுவே பல நல்ல விஷயங்களை செய்ய வைக்குமே.
அதைவிட்டு, ‘அப்படி எல்லாம் மாற்றக் கூடாது. இப்படித்தான் செய்ய வேண்டும்…’ என்று வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தால் நடக்க வேண்டிய சிறிய நல்லவை கூட நடக்காமல் முடங்கிப் போகும்.
அவர் ஒன்றும் விவேகானந்தர் பெயரை நரேஷ் என்று சொல்லவில்லையே. தன் அப்பாவுக்கு விவேகானந்தர் மீது பிரியம். மரியாதை. அதனால் அவர் பெயரை ஒத்த ஒரு பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் தன் ஆசையையும் விட்டுக் கொடுக்கவில்லை. முதல் மகனின் பெயரும் இரண்டாம் மகனின் பெயரும் ஒத்த ஒலி அமைப்பில் இருக்க விரும்பி இருக்கிறார். செய்துவிட்டுப் போகட்டுமே.
பல நல்ல விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் குட்டி குட்டியாக ஆரம்பமாகின்றன. தொடங்கும்போதே முழுமையாகவேத் தொடங்க வேண்டும் என்பதில்லை. நிச்சயம் என்றாவது ஒருநாள் ஏதேனும் ஒரு வடிவத்தில் முழுமை பெறும். முழுமை அடையாவிட்டாலும் தவறான வழியில் செல்லாது. அது ஒன்று போதாதா?
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 17, 2023 | சனிக்கிழமை