பாதுகாப்பாய் இருப்போம்!
நேற்று மாலை. சரியான ராகு கால நேரம் 4.40. எங்கள் குடியிருப்பில் நடந்த ஒரு சம்பவம்.
ஆணும் பெண்ணுமாய் இரண்டு இளைஞர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் வந்தார்கள். வயது 20, 21 தான் இருக்கும். மார்டனாக உடை அணிந்திருந்தார்கள். ஆங்கிலமும் தமிழும் கலந்து அழகாகவே பேசினார்கள்.
எங்கள் வீட்டில் அப்பாதான் கதவைத் திறந்தார். அந்த நேரம் நான் வீட்டிலில்லை. வெளியில் சென்றிருந்தேன். ‘பிசினஸ் பெண்மணிகளுக்கு ஒரு நிகழ்ச்சி…’ என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டு ‘உள்ளே வந்து பேசலாமா?’ என முடிக்க அப்பா ‘எதுவும் தேவையில்லை…’ என வழக்கம்போல் சாந்த சொரூபமாக சொல்லி அனுப்பிவிட்டார்.
நான் வீட்டுக்கு வந்ததும் அப்பா இதுபோல் இரண்டு பேர் வந்திருந்ததைக் கூற, நான் சந்தேகப்பட்டு மற்ற வீடுகளுக்கும் போன் செய்து கேட்டேன்.
எதிர்வீட்டில் கதவைத் திறந்த பெண்மணியிடம் ‘அண்ணன் இல்லையா, அண்ணன் வரச் சொல்லி இருக்கிறார்… உள்ளே வரலாமா?’ என ஊருக்குச் சென்றிருக்கும் அவருடைய கணவன் அனுப்பியதாக சொல்லி இருக்கிறார்கள். ஞாயிறு தோறும் ராகுகால பூஜையில் இருக்கும் அவர், கடுப்படித்து அனுப்பி இருக்கிறார்.
கீழ் வீட்டில் கதவைத் திறந்த ஒரு பாட்டியிடம் ‘முதியோர் இல்லத்தில் இருந்து வரோம்… உள்ளே வந்து பேசலாமா?’ என்று சொல்லி ஏதோ உளறி இருக்கிறார்கள். பாட்டியும் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அனுப்பி வைத்திருக்கிறார்.
அந்த இளைஞர்களின் குறிக்கோள்தான் என்ன? யாரேனும் ஒருவர் அசந்தால்கூட அடித்துப் போட்டு விட்டு கிடைத்தை சுருட்டிக் கொண்டு சென்றிருப்பார்கள் என நினைக்கிறேன்.
உண்மையாகவே நன்கொடை ஏதேனும் வசூலிக்க வந்திருப்பவர்கள் என்றால் ஒரே மாதிரிதானே எல்லா வீடுகளிலும் காரணம் சொல்லி பேசி இருக்க வேண்டும்.
அவர்கள் வீடுகளில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றாற்போல் காரணத்தைச் சொல்லிக்கொண்டு பேசி இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் நிறுவனம் நடத்தும் நான் இருப்பதை தெரிந்துகொண்டு பிசினஸ் விமன் என்ற ஆயுதம், எதிர் வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருப்பதால் கணவன் வரச் சொல்லி இருக்கிறார் என்ற ஆயுதம், பாட்டி இருக்கும் வீட்டில் அவருக்கு ஏற்றாற்போல் முதியோர் இல்லம் என்ற ஆயுதம்.
எங்கள் குடியிருப்பு செக்கியூரிட்டி பாத்ரூம் சென்றிருக்கும் இடைவெளியில் இத்தனையும் நடந்திருக்கிறது.
பரிதாபப்பட்டோ அல்லது மனிதாபிமான செய்கையாகவோ நினைத்துக்கொண்டு யாரையும் வீட்டின் உள்ளே விட வேண்டாம். நம் பாதுகாப்புக்குப் பிறகுதான் மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாமே. எனவே கவனம்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்வு இது. எச்சரிக்கைப் பதிவு.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
comPcare Software
ஜூன் 19, 2023 | திங்கள்