கும்பகோணம் பாசமும், காரைக்குடி அன்பும்!
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த போது ஜெண்ட்டிங் ஹைலேண்ட்ஸ் என்ற இடத்துக்குச் சென்று வந்தோம். தரையில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் இருக்கும் மலைப் பிரதேசம் அது. வின்ச்சில் சென்றோம். கடும் பனி என்பதால் ஊரின் அழகை அத்தனை அடி உயரத்தில் இருந்து ரசிக்க முடியவில்லை. அதுவும் நல்லதுக்குதான். வின்ச் மேலே செல்ல செல்ல அத்தனை அடி உயரத்தில் இருந்து கீழே பார்க்கும்போது, என்னதான் இரயில் பெட்டி போன்ற கண்ணாடி கூண்டு வின்ச்சாக இருந்தாலும், கொஞ்சம் லேசாக பயம் வரத்தான் செய்யும்.
அப்படி மேலே சென்று விட்டு, கீழே இறங்குவதற்காக காத்திருக்கும் சமயம் எங்களுடன் வந்திருந்தவர்களில் நான் ஐக்கியமாகி இருந்த ஒரு சிறு குழுவை தவற விட்டேன் என்பதால் வேறொரு குழுவினருடன் காத்திருந்த சமயம் அவர்கள் ஒருவருக்கொருவர் குடும்பம் போல் பாசத்துடன் பேசிக்கொண்டார்கள்.
அமைதியாக பார்வையாளராக மட்டுமே இருந்த நான் ஒரு கட்டத்தில் ‘நீங்கள் அனைவரும் ஒரே குடும்பமா?’ என கேட்டு விட்டேன்.
அதற்கு அவர்கள் ‘இல்லை, இல்லை. இங்கு வந்து தான் அறிமுகம்’ என்று சொன்னதுடன் என்னைப் பற்றிக் கேட்க நான் என் பெயரை மட்டும்தான் சொன்னேன்.
அவர்கள் இருவரும் ஆச்சர்யப்பட்டனர்.
அதில் ஒருவர் (வலதுபக்கம் இருப்பவர்) ‘அட நீங்கதான் காம்கேர் புவனேஸ்வரியா? என்ன மேடம் இவ்வளவு அமைதியா சொல்றீங்க… நான் என் கல்லூரி காலத்திலேயே உங்கள் புத்தகங்களை படித்துத்தான் கம்ப்யூட்டர் அறிந்தேன்… உங்களின் பல நூல்களை வாசித்திருக்கிறேன்’ என்று சொன்னதுடன் அவர்கள் குழுவினரிடம் ‘மேடம்தான் கம்ப்யூட்டரில் தமிழ் அறிமுகம் ஆவதற்கு முழுமுதற் காரணம்’ என்று பெருமையாக சொன்னார். அது மட்டும் இல்லாமல் வரும் வழியில் எல்லாம் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் என்னை பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார்.
இவர் கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியில் இருக்கிறார். பெயர் உயர்திரு ரமேஷ்.
மற்றொருவர் (இடது பக்கம் இருப்பவர்) ‘நானும் உங்கள் பல நூல்களை வாசித்திருக்கிறேன். மிக எளிமையாக இருக்கும்…’ என்று மென்மையாகச் சொன்னார்.
இவர் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக ஆக பணியில் இருக்கிறார். பெயர் உயர்திரு ராஜாராம்.
இருவருமே என்னை அவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் மாணவ மாணவிகளுக்காக பேசுவதற்கு சிறப்பு விருந்தினராக வருவதற்கு எனக்கு அழைப்பு விடுத்தனர். ‘நிச்சயம் வருகிறேன்’ என்று சொல்லி இருக்கிறேன்.
இவர்கள் மட்டுமில்லாமல் இவர்கள் குழுவில் இருந்தவர்களும் என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஒரே வாகனத்தில் பயணம் செய்தாலும் என்னை தினமும் பார்த்தும் என்னை அடையாளம் காணாத அவர்கள், என் பெயரைச் சொன்னதும் அடுத்த நொடியே அடையாளம் தெரிந்துகொண்டது எனக்கு உண்மையிலேயே பெருமையாக இருந்தது. என் உழைப்புக்குக் கிடைத்த, இறைவன் கொடுத்த மரியாதை அல்லவா அது. எப்படி மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியும் சொல்லுங்கள்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023