சிங்கப்பூர் அன்பு!
என் எழுத்துக்கள், ஆடியோ வீடியோ படைப்புகள், அனிமேஷன் மற்றும் சாஃப்ட்வேர் தயாரிப்புகள் வாயிலாக என்னை நன்கறிந்து ஆனால் நேரில் சந்திக்காத அன்பர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு ‘நீங்கள் தானே காம்கேர் புவனேஸ்வரி’ என கேட்டு தங்களை அறிமுகம் செய்துகொண்டு நலம் விசாரித்தவர்களுள் ஒருவர்தான் உயர்திரு ப்ரியா. இவர் தன் மகளுக்காக சிங்கப்பூரில் இருந்து மலேசியா வந்து மூன்று நாட்கள் தங்கி இருந்து மாநாட்டில் கலந்துகொண்டார்.
முதல் நாள் சந்தித்தபோது ‘என் மகளின் மனதில் தமிழின் அருமை பெருமைகளை ஆழமாக வேரூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுள் இதுபோல தமிழுக்காக நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதும் ஒன்று’ என்றார்.
மறுநாள் அவரை மாநாட்டில் சந்தித்தபோது ‘உன் அம்மாவை நினைத்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உன் அம்மா உனக்காகத்தான் மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூரில் இருந்து மலேசியா வந்திருக்கிறார். மாநாட்டை நன்றாக பயன்படுத்திக்கொள்’ என்று சொன்னேன்.
அப்போது ப்ரியா மிக இயல்பாக, ’அவளுக்காக மட்டும் அல்ல… எனக்காகவும் வந்திருக்கிறேன்’ என கண் சிமிட்டியபடி அவர் மகளைப் பார்த்து புன்னகைத்துக்கொண்டே சொன்னார்.
இந்த இடத்தில்தான் இன்றைய பெண்களின் தன்னம்பிக்கை நின்று ஜெயிக்கிறது.
தங்கள் ஆசா பாசங்களையும், கனவுகளையும் தங்கள் பிள்ளைகள் மீதும் குடும்பத்தின் மீதும் கொட்டி தங்களை தியாக பிம்பங்களாக வளர்த்துக் கொண்ட முந்தையமுறை அம்மாக்களிடம் இருந்து வேறுபட்டு தன்னம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கும் இன்றைய தலைமுறை (அம்மாவை) ப்ரியாவை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023