பிரச்சனைகளும், தீர்வுகளும்!
சிறியதிலும் சிறிய ஒரு பிரச்சனை. அது குறித்து நான் உடனடியாக பதில் கொடுத்து விட்டு அதில் இருந்து வெளியில் வந்து விட்டாலும், என்னுடன் வந்திருந்தவர்களில் சிலர் ‘மேடம் அதில் இருந்து இன்னும் வெளியில் வரவில்லை…’ என அவர்களாகவே கற்பனை செய்து பேசினார்கள். அதில் ஒரு மலேசிய வாழ் இந்தியப் பெண் ‘ஆமாம் சார், நாங்கள் பெண்கள். எங்களால் ஆண்கள் போல் ஒரு பிரச்சனையில் இருந்து அத்தனை சீக்கிரம் வெளியில் வர முடியாது’ என சொன்னவுடன் அந்தப் பெண்ணின் அறியாமையை நினைத்து கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்தது.
இத்தனைக்கும் அவர் சிறிய அளவில் ஆன்லைனில் பிசினஸ் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு பதில் சொல்லாமல் என்னால் நகர முடியவில்லை.
மேடம், ஒரு பிரச்சனை குறித்து பேசும்போது பிரச்சனையின் வலுவை குறித்து மட்டும் பேசினால்தான் அதற்கான தீர்வு கிடைக்கும். அதைவிட்டு ஆண்களுக்கு அந்தப் பிரச்சனையின் வலி அப்படி இருக்கும், பெண்களுக்கு பிரச்சனையின் வலி இப்படி இருக்கும் என பேசினால் பிரச்சனையின் போக்கு திசை மாறிவிடும்.
பிரச்சனை. அதன் சாராம்சம். அதன் நியாயம். என்ன செய்ய வேண்டும். எப்படி தீர்வு காண வேண்டும். இவ்வளவாகத்தான் அது குறித்த விவாதங்கள் அமையப்பெற வேண்டுமே தவிர ஆண்களுக்கு, பெண்களுக்கு என அதை பிரிவுகளாக்கி ஆராய்ந்தால் அந்த பிரச்சனை நீர்த்துவிடும். எந்தத் தீர்வும் கிடைக்காது’ என்றேன்.
அதற்குப் பிறகு அந்தப் பெண் வாய் திறக்கவில்லை. ஆனால் புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023