ஒரு தகப்பனின் பெருமிதம்!
நன்றி திரு. கோபி சரபோஜி.
இனி அவரது வார்த்தைகளில் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ, நடக்கப்போவது என்ன?’ நிகழ்ச்சி குறித்து அவரது கருத்துக்கள்.
வகுப்பறை இல்லா கற்றல்!
‘ஏஐ மெட்டாவெர்ஸ்’ குறித்து அவ்வப்போது சமூகவலைத்தில், சஞ்சிகைகளில் வாசிக்கும் போது என்னளவில் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருந்தது. பிள்ளைகளிடம் அது குறித்து கேட்டேன். அவர்களும் சொன்னார்கள். அதுவும் கூட எனக்குப் புரியவில்லை. போதாக்குறைக்கு மகளின் கல்விக்கான தேடலின் போதும் இந்த படிப்பு குறித்தும் பலரும் யூடியூபில் அறிமுகமாக சொல்லி இருந்தனர். பிள்ளைகளுக்கு அது குறித்து ஏதோ தெரிகிறது. நமக்கு தான் புரியவில்லை என நினைத்திருந்தேன்.
அந்த சமயத்தில் காம்கேரின் (Compcare K Bhuvaneswari, Compcare Software) ‘ஏஐ மெட்டாவெர்ஸ்’ குறித்த இரண்டு நாள் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வாசிக்க நேர்ந்தது. மீண்டும் பிள்ளைகளிடம் பேசினேன். அது தங்களுக்கான நிகழ்வா? என்பதான பதிலாக இருந்தது. அதன் பின் எனக்கு இருந்த சில சந்தேகங்களை கேட்டறிந்த பின் பிள்ளைகளிடம் சொன்னபோது அவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ள சம்மதித்தார்கள்.
முதல் நாள் நிகழ்வு முடிந்த பின் மகன் சொன்ன பதிலில் இருந்த உற்சாகம் அவர்களுக்கு அந்த நிகழ்வு கொடுத்திருக்கும் செய்தி பயனுள்ளதாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. இரண்டாம் நிகழ்வு முடிந்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என மகளும், மகனும் சொன்னார்கள். ஏன் இப்ப சொல்ல முடியாதா? என்றேன். இப்ப பாதி தானே எங்களுக்கு தெரிஞ்சிருக்கு. மீதி பாதியை நாளை அறிந்து கொண்டு சொல்கிறோம் என்றார்கள்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியை முடித்த பின் மகன், ஒரு டினோசரை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள். மகிழ்வீர்கள். ஆனால், அதற்காக பின்புலத்தில் நடப்பவைகளை அறிந்து கொள்வதும், அது சார்ந்து படிப்பதும் ஏஐ மெட்டாவெர்ஸ் என்றும், அதன் வழி மருத்துவ துறைகளில் நிகழப் போகும் ஆச்சர்யங்கள் சிலவற்றையும் சொன்னான். மகளோ அவள் பங்கிற்கு சமீபத்தில் இறந்து போன தன் பெரியப்பாவை உதாரணமாக்கி, அதாவது பெரியப்பா போட்டோ, அவர்களின் செயல்கள் சார்ந்த கிளிப்பிங்குகள் இருந்தால் அவர்கள் நம்மோடு இருப்பது போன்ற ஒரு உலகை உருவாக்கி விட முடியும் என்றும் அவர்கள் சொன்ன மற்ற சில தகவல்கள் எனக்கு புதிதாகவும், ஏஐ மெட்டாவெர்ஸ் குறித்த எளிய புரிதலையும் எனக்குத் தந்தது. தவிர, அவர்களுக்கு ஏஐ மெட்டாவெர்ஸ் குறித்து ஆரம்பத்தில் இருந்த புரிதலை காம்கேரின் இரண்டு நாள் நிகழ்ச்சி கூடுதல் தெளிவாக்கி இருப்பதை என்னால் உணர முடிந்தது.
மகனுக்கு பாடத்திட்டத்தில் இருக்கும் விசயத்தை விட கூடுதலாய் தெரிந்து கொண்ட சந்தோசத்தை, மகளுக்கு புதிய தகவலோடு அது தான் படிக்கத் தேர்ந்தெடுத்த துறையில் எந்த வகையில் பயனாகப் போகிறது?என்பதை அறிந்து கொண்ட மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. தன் பிள்ளைகளை நவீன தொழில் நுட்பங்களுக்கு தயார் செய்ய நினைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் காம்கேரின் இந்த இரண்டு நாள் நிகழ்வுக்கு அனுப்பலாம், வாய்ப்பும், நேரமும் இருப்பின் அவர்களும் கலந்து கொள்ளலாம்.
‘வகுப்பறை இல்லா கற்றல்’ என்ற இந்நிகழ்வு ‘கற்றுக் கொண்டால் குற்றமில்லை’ என்ற வாக்கியத்திற்கு மிகச்சரியாக பொருந்தும்.
– கோபி சரபோஜி