எந்தப் புள்ளிக்கு பிள்ளையார் சுழி அந்தஸ்து?
ஒரே விஷயம். அந்த விஷயத்தில் அவரவருக்கு எந்தப் புள்ளி பிடித்துப் போகிறதோ அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். மேலே வர அந்த உந்து சக்தியே போதுமானதாக இருக்கிறது.
ஆம். சென்ற வார சனி, ஞாயிறில் நடைபெற்ற ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ : நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா, தம்பி இருவரின் அப்பா என்னிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் தான் முதல் பத்திக்கான விதை.
அக்கா B.S.c., (Hons.) Agriculture – 4 வருட படிப்பு சேர்ந்துள்ளார். தம்பி இப்போதுதான் +1 கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரிடமும் நிகழ்ச்சி எப்படி இருந்தது எனக்குப் புரியும்படி சொல்லுங்கள் என கேட்டிருக்கிறார் அவர்களின் அப்பா. திரு. கோபி சரபோஜி. தொடர்ச்சியாக என் எழுத்தை வாசித்து தன் பிள்ளைகளுடன் விவாதித்தும் வருபவர்.
அதற்கு அக்கா சொன்ன பதில்:
’மெட்டாவெர்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களையும் சந்திக்க முடியுமாம். நாம் சமீபத்தில் இறந்துபோன பெரியப்பாவை பார்க்க நினைத்தாலும் பார்க்க முடியுமே. கொஞ்சம் சோகம் குறையும் அல்லவா?’
தம்பி சொன்ன பதில்:
‘என் வகுப்பில் தொழில்நுட்பம் குறித்து அறிந்தவர்களுள் நான் ஒரு படி மேலாக விஷயம் தெரிந்து வைத்திருக்கிறேன் இந்த நிகழ்ச்சி மூலம். என் ஆசிரியருக்கு நான் தெரிந்துகொண்ட விஷயங்களை சொன்னால் வகுப்பில் நான் தான்பா ஹீரோ…’
அக்காவுக்கு பாசம் என்கின்ற புள்ளி பிடித்திருக்கிறது. தம்பிக்கு வகுப்பில் மற்றவர்களைவிட தான் கொஞ்சம் கூடுதலாக தெரிந்து கொண்ட புள்ளி பிடித்திருக்கிறது. அந்தப் புள்ளிதான் அவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆழமாக கற்றுக்கொள்ள உதவும் தொடக்கப் புள்ளி.
பலருக்கும் இப்படித்தான் தொடக்கப் புள்ளியை ஆரம்பிப்பதில்தான் சிக்கல். அது பிடிபட்டுவிட்டால் அவர்களை கைகளில் பிடிக்க முடியாது.
சென்ற சனி ஞாயிறு இப்படியாக மகிழ்வுடனும் மன நிறைவுடனும்!
நீங்களும் கலந்துகொள்ள நினைத்தால் வாட்ஸ் அப் செய்யலாம்: 9444949921. தமிழில் பேசவும், தமிழில் பேசுவதை புரிந்துகொள்ளவும் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு இல்லை.
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 11, 2023 | திங்கள் கிழமை