#Ai: விவசாயத்தில் Ai

விளம்பரத் தூதுவராக அழைப்பு! 

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அரசாங்கப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மகனையும் மகளையும் நல்ல வேலையில் கால் ஊன்றச் செய்து, திருமணமும் செய்து வைத்து விட்டு தனக்குப் பிடித்தமான விவசாயத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். சென்னையில் பாதி நாள், கிராமத்தில் மீதி நாள் என வாழ்ந்து வருகிறார். மனைவியும் இவருக்கு முழு மனதுடன் ஆதரவளிக்கிறார்.

தனக்கும் தங்கள் பிள்ளைகள் குடும்பத்துக்கும் வருடம் முழுவதற்குமான அரிசி, உளுந்து, நல்லெண்ணெய் (எள்), கடலை எண்ணெய் (நிலக்கடலை) இவை அனைத்தும் இவரது சொந்த நிலத்து உபயம். இந்த வருடம் கரும்பு பயிரிட்டிருக்கிறார்.

இவர் சென்னையில் இருக்கும் தினங்களில் கிராமத்தில் இருக்கும் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார், இன்று நேற்றல்ல  இன்டர்நெட் டேட்டா ப்ளான் எல்லாம் போட முடியாத சாதாரண நோக்கியா போன் வைத்திருந்த காலத்தில் இருந்தே, அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக.

அதாவது அவரது கிராமத்து நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பொருத்தியிருக்கும் மோட்டரின் ஸ்டார்ட்டரில் மொபைல் சிம் பொருத்தப்படும். அந்த சிம்மிற்கு என ஒரு மொபைல் எண் இருக்கும் அல்லவா? அந்த எண்ணுக்கு போன் செய்தால் மோட்டர் தானாகவே ஆன் ஆகி நிலத்துக்குத் தண்ணீர் பாய ஆரம்பித்துவிடும். அதுபோல் எப்போது மோட்டரை ஆஃப் செய்ய வேண்டுமோ அப்போது மீண்டும் அந்த மொபைல் எண்ணுக்கு போன் செய்தால் மோட்டர் ஆஃப் ஆகி தண்ணீர் பாய்ச்சுவதும் நின்றுவிடும்.

மொபைல் போன் அழைப்பின் மூலமே தேவையான போது தொலைதூரத்தில் இருந்து கொண்டே தன் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தவர், இப்போது Ai மூலம் விவசாயத்தை இன்னும் மேம்படுத்த நினைத்து என்னிடம் சில ஆலோசனைகள் கேட்டிருந்தார்.

இவர் தான் செய்து வரும் இயற்கை விவசாயம் குறித்து இவரே சொல்லும் வீடியோ!

பல்வேறு துறைகளில் Ai -ன் பங்களிப்பு குறித்து நான் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளில் ‘விவசாயத்தில் Ai’ என்பதும் உண்டு என்பதால் ‘கரும்பு தின்ன கூலியா’ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு விவசாயத்துறைக்காக இயங்கி வரும் சில நிறுவனங்களை அணுகி விவரங்களை சேகரித்தேன்.

Ai மூலம் விவசாயம் செய்வதால் மனித உழைப்பு குறைகிறது, பணமும் மிச்சமாகிறது, துரிதமான துல்லியமான தகவல்களைப் பெற்று நேரடியாக விவசாயம் செய்வதைப் போலவே செய்ய முடிவதால் மிகச் சிறப்பாக செயல்பட முடிகிறது.

விவசாய நிலம் கிராமத்தில் இருந்தாலும் மாநகரத்தில் நாம் வேறொரு பணி செய்துகொண்டே கூட விவசாயத்தில் ஈடுபட முடியும். வளரும் தொழில்நுட்பத்துடன் இணைந்து விவசாயம் செய்யும்போது அது அடுத்தத் தலைமுறைக்கு விவசாயத்தின் மீது பேரார்வத்தை கொண்டு வர உதவுகிறது.

இப்படி ஏற்கெனவே விவசாயத்தில் Ai குறித்து நான் அறிந்த தகவல்களுடன் விவசாயத்துறை வல்லுநர்கள் சொன்ன தகவல்கள் குறித்தெல்லாம், எங்கள் குடும்ப நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, மிக உற்சாகமாக கேட்டுக்கொண்டார். எப்படியாவது இந்த தொழில்நுட்பத்தை எல்லாம் நானும் பயன்படுத்த வேண்டும் என ஆவலாகக் கூறினார்.

பேச்சின் ஊடே, விவசாய நிலத்தில் பொருத்தப்படும் சென்சார்களையும், அதற்கான சாதனங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நான் தொடர்புகொண்டு பேசியபோது என்னிடம் பேசிய விவசாயத்துறை வல்லுநர் ஒருவர் சொன்ன ஒரு கருத்தைச் சொன்னேன்.

‘விவசாய நிலத்தில் கால் வைக்காமலேயே விவசாயம் செய்ய வைப்பதே எங்கள் குறிக்கோள்’ – விவசாயத்துறை வல்லுநர் சொன்ன கருத்து இதுதான்.

இதைக் கேட்டவுடன் எங்கிருந்துதான் அவருக்கு பதற்றம் வந்தது என தெரியவில்லை. சடாரென உணர்ச்சிவசப்பட்டு “இதை மட்டும் நான் ஏற்க மாட்டேன். ஏனெனில் எங்கள் அப்பா ‘பார்க்காத பயிறும் கெடும்’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். விவசாய நிலத்தை அவ்வப்பொழுது நேரடியாக சென்று பார்க்க வேண்டும். இல்லை என்றால் பயிர்கள் அழும். பயிருக்கும் பாசம் உண்டு. உயிர் உண்டு. என்னதான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், நம் நேரடி கண்பார்வையில் பயிர் இருந்தால் மட்டுமே நல்ல விளைச்சலைக் கொடுக்கும்” என்றார்.

அப்போதுதான் நான், ‘எனக்கும் அதில் 100% உடன்பாடுதான். இதே கருத்தை விவசாயத்துறை வல்லுநரிடம் நானே சொன்னேன்’ என்று சொல்லி எனக்கும் விவசாயத்துறை வல்லுநருக்கும் இடையே நடந்த உரையாடலை விளக்கினேன்.

நான்:

‘பார்க்காத பயிறும் கெடும்!’ என்பது காலம் காலமாக சொல்லப்படும் வாக்கு. எனவே ’விவசாய நிலத்தில் கால் வைக்காமலேயே விவசாயம் செய்ய வைப்பதே எங்கள் குறிக்கோள்’ என்ற உங்கள் நிறுவன வாக்கை (Company Quote) சற்றே மாற்றி அமைத்துக்கொண்டால் விவசாயத்தில் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை இன்னும் பரவலாக்க முடியும். நம் நாட்டைப் பொறுத்தவரை விவசாயம் என்பது நம் பாரம்பர்யமான விஷயம். அதன் ஆதாரத்தையே மாற்றி அமைக்கும் விதமாக பேசினால் சென்ற தலைமுறை மக்களிடமே நம் பேச்சு எடுபடாமல் போகும். சென்ற தலைமுறையினரை ஊக்கப்படுத்தினால் மட்டுமே இளைய தலைமுறையினரிடம் விவசாய ஆர்வத்தைக் கொண்டுவர முடியும்”

விவசாயத்துறை வல்லுநர்: 

‘தொழில்நுட்பம் சார்ந்த உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரிகிறது’ என்று கேட்டார்.

நான்: 

‘தொழில்நுட்பத்தில் நான் வெறுமனே பணி புரியவில்லை. தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகள் செய்யும் விஞ்ஞானி நான். என்னுடன் சேர்ந்து எங்கள் நிறுவனத்தில் இதுபோல் ஆராய்ச்சிகள் செய்யும் பலர் உள்ளனர். எங்கள் பணியே துறை வாரியாக தொழில்நுட்ப சாஃப்ட்வேர்களை உருவாக்குவதுதான். இப்போது ஏஐ பயன்படுத்தி விவசாயம், இராணுவம், மருத்துவம், கல்வி என பலதரப்பட்ட துறைகளுக்கு சாஃப்ட்வேர் தயாரித்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எந்தத் துறைக்காக சாஃப்ட்வேர் தயாரிக்கிறேனோ, அந்தத் துறையில் ஆழ்ந்த அறிவைப் பெறாமல் அந்த ப்ராஜெக்ட்டுக்குள் கால் வைக்க மாட்டேன்…’ என்றேன்.

விவசாயத்துறை வல்லுநர்: 

அதற்கு அவர், ‘நீங்களே எங்கள் விவசாயத் தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதுவர் (Advertising Ambassador) ஆகிவிடலாமே மேடம்’ என்றபோது அந்த பாராட்டை சிறிய சிரிப்பால் ஏற்று நன்றி சொல்லி போன் அழைப்பில் இருந்து விடைபெற்றேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர் 
செப்டம்பர் 17, 2023 | ஞாயிறு

(Visited 898 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon