ஒரு பிசினஸ் கார்டும், தலையணை உயர புத்தகமும்!
இன்று காலை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு (Chennai International Book Fair) நானும் அப்பாவும் சென்றிருந்தோம். இன்றே கடைசி நாள்.
நுழைவாயிலில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்கள் ‘முன்பதிவு செய்திருக்கிறீர்களா? என்றனர். ‘இல்லை, செய்ய வேண்டும் என தெரியாது?’ என்று சொல்லிக்கொண்டே என் ‘பிசினஸ் கார்டை’ கொடுத்தேன். அப்படியும் இப்படியுமா கார்டை பார்த்துவிட்டு ‘இல்லை மேடம், ரெஜிஸ்ட்டர் செய்தால்தான் அனுமதி’ என்று சொல்ல நான் பொறுமையாக பிசினஸ் கார்டில் உள்ள எங்கள் நிறுவனப் பெயரைக் காட்டி ‘நான் தான் இந்த நிறுவனத்தின் சி.ஈ.ஓ. இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை சந்திக்க வேண்டும்…’ என்றேன் ஆங்கிலத்தில்.
ம்ஹும். அசைந்து கொடுக்கவில்லையே. முன்னைவிட பெரிதாகவும் வேகமாகவும் தலையை ஆட்டி மறுக்க, என்ன செய்வது என யோசித்தபடி என் கைகளில் நான் கொண்டு சென்றிருந்த தலையணை சைஸ் புத்தகங்களை பையில் இருந்து எடுத்து அவர்கள் முன் வைத்து ‘இவற்றை எல்லாம் எழுதியது நான்தான். இதுபோல 250 புத்தகங்கள் எழுதி உள்ளேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே உள்ளே இருந்து சுடிதார் அணிந்த ஒரு பெண் வந்தார். டேபிள் மீது வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு ‘மேம். நீங்கள்தான் காம்கேர் புவனேஸ்வரியா?’ என்று சற்றே பெரிய குரலில் உணர்ச்சிவசப்பட சப்தம் அவர் போட்டிருந்த மாஸ்க்கைத் தாண்டி வெளியே கேட்டது.
நான் உற்சாகத்துடன் ‘ஆமாம்’ என்பதைப் போல் தலையாட்ட ‘மேம். தமிழ்நாட்டில் எல்லா பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் உங்கள் நூல்தான் மேம்…கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறவர்கள் உங்கள் நூலை படிக்காமல் வெளியே வரவே மாட்டார்கள்…’ என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டே போக நான் அவர் எங்கு பணி செய்கிறார் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
அங்கு அமர்ந்திருந்தவர்கள் மட்டுமில்லாமல் அந்த ஹாலில் இருந்தவர்கள் அனைவரின் கண்களும் எங்கள் மீதுதான்.
அடுத்த நிமிடம் என் பெயரை பதிவு செய்து அடையாள அட்டையைக் கொடுத்தார் முன்பு என்னை அனுமதிக்க மறுத்த பெண். மேலும் நான் கவனிக்கவில்லை என நினைத்து ‘இவங்க கம்பெனி நடத்தறாங்கன்னு சொன்னதும் எனக்கு ஒரு நிமிஷம் என்னன்னு புரியலை… தலையை சுத்திடிச்சி…’ என ஏதோ அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
‘என் அப்பாவுக்கு அடையாள அட்டை வேண்டுமே?’ என சொல்ல ‘ஒரு நபருக்குத்தான் அனுமதி’ என்றனர். ‘அப்பாவும் எங்கள் நிறுவனத்தின் ஒரு டைரக்டர்தான்… அவருக்கும் வேண்டும்’ என்றேன். நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு பெண் என் அப்பாவின் பெயரை பதிவு செய்து அடையாள அட்டைக் கொடுத்துவிட்டார்.
அங்கு அமர்ந்திருந்த அனைவரும் எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
என் பிசினஸ் கார்டில் உள்ள என் பெயர் செய்யாததை, என் பெயர் தாங்கிய நான் எழுதிய புத்தகம் செய்துகாட்டியது. ‘ஆஹா!’ என சொல்லிக் கொண்டே கண்காட்சிக்குள் சென்றோம்.
பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் மட்டும்தான் இந்த கண்காட்சி என்பதால் பேரமைதியாக இருந்தது புத்தகக் கண்காட்சி.
மிக பிரமாண்டம், மிகுந்த கலைநயம், ஆங்காங்கே தன்னார்வத் தொண்டர்கள் என மேலைநாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகள் போல அத்தனை அமைதியாக அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மலேசியா நாட்டு பதிப்பாளர்களை மட்டும் சந்தித்துப் பேசிவிட்டு கிளம்பினோம். அதற்கே 3 மணி நேரம் ஆகிவிட்டது.
நீண்ட நேரம் என் பிசினஸ் கார்டும், நான் எழுதிய புத்தகங்களும் மாறி மாறி என் மனக்கண் தோன்றியபடியே இருந்தன.
என் கைப்பையின் உள்ளே வைத்திருந்த பிசினஸ் கார்டுகளும், புத்தகங்களும் இன்று காலை நடந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நட்பாக இருக்குமா அல்லது எதிரிகளாகி இருக்குமா என்று நினைத்தேன். சிரிப்பு வந்துவிட்டது.
புகைப்பட குறிப்பு: புகைப்படத்தில் எனக்கருகில் உள்ள தலையணை உயர (750 பக்க நூல்) புத்தகம்தான் இன்று எனக்கான அங்கீகாரத்தைக் கொடுத்து கெளரவித்தது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜனவரி 18, 2024 | வியாழன்
#ai_avatar, #ai_avatar_tamil_book
#bookfair2024