அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!

அம்மா செளக்கியம், அப்பாவும் நன்றாக இருக்கிறார்!

‘நீங்க உங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதாக சென்ற பதிவில் சொல்லி இருந்தீர்களே, அதை மற்றவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள். அவ்வளவு அன்பாக, மரியாதையாக பொதுவெளியில் நடந்து கொள்வீர்களா? என் பிள்ளைகளை இப்போதில் இருந்தே அப்படி வளர்க்கவே கேட்கிறேன்’ என்று ஒரு நடுத்தர வயது பெண்மணி தனித்தகவலில் கேட்டிருந்தார்.

நான் அதைப் படித்துவிட்டு வாய் விட்டு சிரித்துவிட்டேன். என் கேபினுக்கு அருகில் இருந்த சில பொறியாளர்கள் திரும்பிப் பார்த்து வியந்தனர்.

‘ஒன்றுமில்லை….’ என சைகை காண்பித்துவிட்டு மீண்டும் நான் ரசித்த கேள்வியில் மூழ்கினேன்.

’மரியாதை என்றால் கைகட்டி தலையாட்டி அவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி சரி என்று சொல்வது என்று நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், மன்னிக்கவும் அந்த மாதிரியான மரியாதையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அப்படி என் பெற்றோர் வளர்க்கவும் இல்லை… எங்கள் கருத்துக்களை எந்த நேரத்திலும் தயங்காமல் சொல்வதற்கு பழக்கினார்கள்.

பாசம் என்றால் ’சொல்லுங்கம்மா, சொல்லுங்கப்பா’ என்று வார்த்தைக்கு வார்த்தை கனிவைக் கூட்டி பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தால் அதுவும் கிடையாது… சில நேரங்களில் கனிவையும் பாசத்தையும் கோபத்துடன் கூட வெளிப்படுத்துவது உண்டு. கோபத்துக்குப் பின்னால் உள்ள அக்கறை பரஸ்பரம் புரிந்துகொள்ள முடியும்.

ஆனாலும் மற்றவர்கள் என்னை சரியாக புரிந்து கொள்ள நான் சொல்லும் பதிலும் ஒரு காரணமாக இருக்கலாம். அதாவது அப்பாவை அறிந்தவர் யாரேனும் என்னிடம் ’உங்கள் அப்பா நன்றாக இருக்கிறாரா?’ என கேட்டால் ’அம்மாவும் நன்றாக இருக்கிறார், அப்பாவும் நன்றாக இருக்கிறார்’ என்பேன். அம்மாவை அறிந்தவர் யாரேனும் என்னிடம் ‘உங்கள் அம்மா செளக்கியமாக இருக்கிறாரா?’ என கேட்டால் ‘அப்பாவும் செளக்கியம், அம்மாவும் செளக்கியம்’ என்பேன்.

இதெல்லாம் மற்றவர்கள் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. சுபாவமாக வேண்டும். அப்படி சுபாவமாக பெற்றோர் வாழ்ந்து காட்ட வேண்டும்.

என் பெற்றோர் ஒரு நாளும் ‘உங்களை வளர்க்க நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம், எல்லாம் உங்களுக்காகத்தான்’ என்று சொன்னதே இல்லை. ஏதேனும் தவறு செய்தால் தவறை மட்டுமே சுட்டிக் காட்டுவார்கள், அந்தத் தவறோடு சேர்த்து ‘நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம், நீ இப்படி நடந்து கொள்கிறாயே’ என்று சொல்லி குற்ற உணர்ச்சியை தூண்டியதே இல்லை….’

இப்படி தனித்தகவலில் கேட்டிருந்த கேள்விக்கு பதில் அளித்தேன். இந்த கேள்வி பதிலை பொதுவெளியில் பகிர்ந்தால் பலருக்கும் பயன்படுமே எனத் தோன்றியதால் பகிர்ந்தேன்.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஏப்ரல் 13, 2024 | சனிக்கிழமை

(Visited 2,665 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon