அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே!
நேற்று எங்கள் காம்கேரில் தயாரித்த Ai சாஃப்ட்வேர் வாங்கிய ஒரு கிளையிண்ட், ஏற்கெனவே என்னை அறிந்தவர், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து சிலாகித்துப் பேசினார்.
‘நீங்கள் உங்கள் அப்பா அம்மா உங்களுடன் இருக்கிறார்கள்… அவர்களை நீங்கள் வைத்து காப்பாற்றுகிறீர்கள்… எத்தனை பெரிய விஷயம்… இந்தக் காலத்தில் இதெல்லாம்… ரொம்ப பெருமையா இருக்கு…’
என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.
‘சார்… சார்… ஒரு நிமிஷம்…. நீங்கள் சொல்வதில் இருந்து நான் முற்றிலும் முரண்படுகிறேன். என் அப்பா அம்மா நான் என நாங்கள் ஒன்றாக வசிக்கிறோம்… யாரும் யாரையும் வைத்து காப்பாற்றுவதெல்லாம் இல்லை…’ என்று பதில் அளித்தேன்.
அவர் அந்த பதிலில் திருப்தி அடையாமல் ‘இருந்தாலும்…’ என இழுக்க, நான் அதற்கு மேல் அவரை தொடரவிடவில்லை.
‘சிறு வயதில் நம்மை பெற்று வளர்க்கும் அப்பா அம்மா என்றாவது நான்தான் பெற்றேன், நான்தான் வளர்த்தேன். நான்தான் படிக்க வைத்தேன், நான்தான் காப்பாற்றினேன் என்று சொல்கிறார்களா? நாம் வளர்ந்தவுடன் நாம் மட்டும் ஏன் ‘பெற்றோர்களை வைத்துக் காப்பாற்றுகிறேன்’, ‘பெற்றோர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்’ என்று அந்நிய வார்த்தைகளைச் சொல்லி அவர்களை மூன்றாவது மனிதர்களைப் போல் பிரிக்க வேண்டும்? எல்லோரும் சேர்ந்து வசிக்கிறோம் என சொல்லிப் பழகுவோமே. அதுதானே உண்மை…’ என்றபோது அந்த கிளையிண்ட் ‘உங்கள் அளவுக்கு என்னால் மெச்சூரிட்டியாக சிந்திக்க தெரியவில்லை….’ என சொன்னார்.
எல்லா அப்பா அம்மாவும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதில்லை. விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கிறார்கள், எல்லா விஷயங்களையும் போலவே.
எனக்குத் தெரிந்தே எங்களிடம் பணிபுரியும் பொறியாளர் ஒருவரின் பெற்றோர் அவரை ‘நான் தானே படிக்க வைத்தேன், நான் தானே வளர்த்தேன், நான் தானே துணிமணி வாங்கிக் கொடுத்தேன்’ என சொல்லி சொல்லி காண்பிப்பார்களாம். அப்படி எந்தப் பெற்றோராவது குத்திக் காண்பித்தால் ‘நீங்கள் செய்யாமல் அடுத்த வீட்டுக்காரர்களா செய்வார்கள்’ என தாராளமாகக் கேட்கலாம்.
பெற்றோருடன் ஒன்றாக சேர்ந்து வசிப்பவர்களிடம் ஒன்று ‘அப்பா அம்மா உங்களுடன் தான் இருக்கிறார்களா, அவர்களை நீங்கள்தான் காப்பாற்றுகிறீர்களா?’ என்று கேட்க வேண்டியது அல்லது ‘நீங்கள் அப்பா அம்மாவுடன்தான் இருக்கிறீர்களா?’ என்று கேட்க வேண்டியது. இதுதான் மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறது.
குழந்தைகளுக்கு எத்தனை வயதானால்தான் என்ன? அப்பா அம்மாவுக்கும் எத்தனை வயதானால்தான் என்ன? குடும்பம் என்றால் அப்பா, அம்மா, குழந்தைகள் என அனைவரும் சேர்ந்த ஒரு அழகான கூடுதானே? இதில் யார் யாரை வைத்துக் காப்பாற்றுவது?
பிள்ளைகள் வளர்ந்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அவர்கள் அப்பா அம்மாவுடன் வசிப்பது என்பது மாறி அவர்களை பிள்ளைகள் வைத்துக் காப்பாற்றுவது என்று அவர்களை அந்நியமாக்குவதை நினைக்கும்போது மனம் வெதும்புகிறது.
இனியாவது, அப்பா அம்மாவுடன் சேர்ந்து ஒன்றாக வசிக்கிறோம் என சொல்லிப் பழகலாம்.
அன்பெனும் கூட்டில் நாமோர் அங்கமே, நாமே கூடல்ல!
புகைப்படம்: Prompted by Compcare K Bhuvaneswari, Drawn by Ai
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 9, 2024 | ஞாயிறு