ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை!

ருசியைக் கூட்டும் மைக்ரோ கருணை!

வைதீஸ்வரன் கோயிலில் புதிதாக வண்ணம் பூசப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆடு வாகனத்தை புகைப்படம் எடுத்த போது என்னை கடந்து சென்ற குருக்கள் ‘அங்காரகன் வாகனம்’ என்று சொல்லியபடி செல்ல, நாங்கள் அங்காரகன் சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானை வணங்கிவிட்டு மற்ற சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியே வந்தோம்.

அங்கு சிறு துணியில் நாட்டு காய்கறிகளை கூறுகளாகப் போட்டு விற்பனை செய்து வந்த வயதான பாட்டிகள் அமர்ந்திருந்தார்கள். சிறிய துண்டு. கொஞ்சம் கத்தறி, கொஞ்சம் வெண்டை, சிறு பைகளில் முடக்கத்தான் கீரை இப்படி. பெரிய வியாபாரம் எல்லாம் இல்லை. வெயில் இல்லை என்றாலும் வெயில் வந்துவிடுமோ என தலையில் கிழிந்த துண்டை போர்த்திக் கொண்டு கண்கள் இடுங்கிய பாட்டிகள்.

அம்மாவுக்கு கீரை வகைகளை பார்த்துவிட்டால் சந்தோஷமாகிவிடும். நாங்கள் சென்னை திரும்ப 2 நாட்கள் ஆகும் என்ற நினைவை மறந்து முடக்கத்தான் கீரையை வாங்குவதற்காக விலை கேட்டுக் கொண்டிருந்தார்.

முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்தது. எங்கள் வீட்டில் பல வருடங்களாகவே முடக்கத்தான் கீரையை தோசை மாவில் போட்டு அரைத்து முடக்கத்தான் தோசைதான். மிக ருசியாக இருக்கும். சத்தான தோசை.

நானும் அப்பாவும் அம்மாவிடம் ‘வீடு போய் சேர்வதற்குள் வாடிவிடாதா…’ என சொல்லி அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டோம். அம்மாவுக்கும் அது நன்றாகவே தெரியும். ஆனாலும் முடக்கத்தானை பார்த்த சந்தோஷத்தில் அந்த விஷயம் கண்களை மறைத்து விட்டது.

நாங்கள் நகர்ந்து வந்ததும், அந்த பாட்டி ‘வாங்கி ஃப்ரிட்ஜில் போட்டு வைத்தால் வாடாது…’ என முனகியது காதில் விழுந்தது. அவரிடம் நாங்கள் ஊர் திரும்ப 2 நாட்கள் ஆகும் என சொன்னாலும் புரியப் போவதில்லை.

சரி, கீரை வாங்காமல் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வரலாம் என நினைத்தோம். அதுவும் சரியான அணுகுமுறையாக இருக்காது. உழைத்து வாழ நினைக்கும் பாட்டியை அவமரியாதை செய்ததைப் போலாகிவிடும் என்பதால், மனசு கேட்காமல் அம்மாவை நிழலில் நிற்கச் சொல்லிவிட்டு, நானும் அப்பாவும் திரும்ப அங்கு சென்று அந்த பாட்டி வைத்திருந்த ஒரு பை கீரை வாங்கிவிட்டு பணம் கொடுத்தோம்.

‘ஏம்மா, அம்மா ஊர் போய் சேர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்களே…’ என்றார் மெல்லிய குரலில்.

‘இல்லை, உங்களுக்கு வரும் ஒரு சிறு வியாபாரத்தைக் கெடுக்க வேண்டாம் என்றுதான் வாங்குகிறோம். நாங்கள் வாங்கிவிட்டு சென்றால் எங்களுக்குப் பின்னால் வருபவர்களில் யாரேனும் உங்களிடம் வாங்குவார்கள். வாங்காமல் சென்றால், அவர்களுக்குள்ளும் அதே சிந்தனை ஒட்டிக் கொள்ளும் அல்லவா?’ என்று சொன்னதற்கு கைகளை தலைக்கு மேல் கூப்பி நன்றி சொன்னார்.

அந்தக் கீரையை நாங்கள் எதற்கும் இருக்கட்டும் என கொண்டு செல்லும் எவர்சில்வர் டப்பா ஒன்றில் போட்டு மூடி வைத்தோம். வெயில் படாமல் இருக்க காரின் டிக்கியில் உள்ளே தள்ளி வைத்துவிட்டு அதற்கு மேல் மற்ற பைகளை மறைத்து வைத்தோம்.

என்ன ஆச்சர்யம். வீடு வந்து முதல் வேலையாக அந்தக் கீரையை எடுத்துப் பார்த்தோம். வாங்கிய நிலையில் அப்படியே இல்லை என்றாலும் கொஞ்சமாக, மிக கொஞ்சமாக வாடி இருந்தது. அதை மற்றொரு காற்றுபுகா டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜுக்குள் வைத்தாம்.

அடுத்த நாள் முடக்கத்தான் தோசை எப்படி ருசித்தது என்று சொல்லவும் வேண்டுமா? கீரை பாட்டியின் நேர்மையும், எங்களின் சிறு கருணையும் சேர்ந்து அட்டகாசமாக இருந்தது.

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 16, 2024 | ஞாயிறு

(Visited 1,098 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon