நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா? 

நீங்கள் சொர்க்கத்தைக் காண விரும்புகிறீர்களா? 

ஜூன் 22, 2024 : அப்பாவின் ஜென்ம நட்சத்திரம் அன்று (Star Birthday)  சென்னை பனையூரில் உள்ள மத்ஸ்ய நாராயணா கோயில் சென்றிருந்தோம்.

மத்ஸ்ய நாராயணா பெருமாள் – சொர்க்கத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை உண்டாக்கும் கோயில் நம் சென்னைக்கு மிக அருகில்!

மச்சாவதார பெருமாள் 10 அடிக்கும் மேல் பிரமாண்டமாய் அமைந்திருக்கும் அற்புத ஆலயம். மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமஸ்கிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்தக் கோயிலில் உள்ள பெருமாளின் கால்பகுதி மீன் வடிவில் உள்ளது.

சென்னை உத்தண்டி பனையூரில் கோபுரங்களும், கதவுகளும் இல்லாத பிரமாண்டமான கோயில் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது இந்தக் கோயின் சிறப்பு. கோயிலில் இருந்து சில அடிகள் நடந்து சென்றால் கடல். சுவாமியின் பெயர் மத்ஸ்ய நாராயணா பெருமாள்! கோயில் முழுவதும் அலைகளின் சப்தம் பின்னணி இசையாய்.

108 தூண்களால் கட்டப்பட்ட கோயில், கடற்கரைக்கு மிக அருகில், மிக சுத்தமாக பராமரிக்கப்பட்டு உள்ளே நுழைந்ததுமே தெய்வீகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

நுழை வாயிலிலேயே ‘கடற்கரைக்குச் சென்றுவிட்டு கோயிலுக்கு வரவேண்டாம். கோயில் மண்ணாகிவிடும். கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு கடலுக்குச் செல்லுங்கள்’ என்ற வேண்டுகோள் பலகை உள்ளது.

உள்ளே நுழைந்ததும் ரத வாகனங்கள், ஸ்ரீகிருஷ்ண பகவான் வரவேற்கிறார்.அடுத்து ஆஞ்சநேயர், சிவன், விநாயகர் என துல்லியமான வடிவமைப்பில் சிலைகள். அத்தனையும் அம்சமாய், சுத்தமாய், தெய்வீகமாய்… சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. அத்தனை அருட்கடாட்சமாய் கண்களை மட்டுமல்ல மனதையும் பரவசமாக்குகின்றன.

வியாசர் அருள விநாயகர் மகாபாரதம் எழுதும் சிலையை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை நேர்த்தி.

பசுமையான புற்களால் மூடப்பட்ட மலையில் நவகிரகங்களில் சிலைகள் பொருத்தப்பட்டு பக்தர்கள் சுற்றி வரும்போது இயற்கையாய் மலையை சுற்றிவரும் உணர்வில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்ளே குழந்தைகளுக்காகவே சிறிய கோயில் உள்ளது. ராமர், சீதை, லஷ்மணரை வணங்கும் ஆஞ்சநேய சுவாமி சிலைகள் வரவேற்க குழந்தைகள் மட்டுமே அனுமதி என்ற பெயர் பலகையுடன் குட்டி கோயில் ‘அடடா’ என பரவசமாக உள்ளது.

இதெல்லாம் இந்தக் கோயிலின் முதன்மை சுவாமியைச் சுற்றி உள்ள அம்சங்கள்.

இந்தக் கோயிலின் முதன்மை சுவாமியான மத்ஸ்ய நாராயணா பெருமாள் 10 அடிக்கும் மேலான உயரத்தில் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றி ஸ்லோகங்கள் பொறிக்கப்பட்ட தூண்கள். பகவானை சுற்றி தண்ணீரால் நிரம்பிய அகழி போன்றதொரு நீரோட்டம். பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்ய வசதியாக அமர்வதற்கு சுத்தமான இடம்.

கடலை பற்றியும் கடற்கரைப் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும். கடற்கரை சுத்தமோ சுத்தம். சுத்தமான இடங்களே தெய்வீக தன்மை பெற்றுவிடுவது இயற்கைதானே. கடல் பார்ப்பதற்கு கொஞ்சம் பயம் உண்டாகிறது. பயம் என்றால் பக்தி என்று சொல்லலாம். காரணம் நடுக்கடலின் ஆழத்தை மிக அருகில் பார்ப்பதைப் போல தண்ணீரின் உயரம். அதைத் தொடர்ந்து கடற்கரை முக அருகில் இருப்பதால் பக்தியும் பரவசமும் ஒன்று சேர்ந்து நம்மை மரியாதையுடன் கடலை வணங்கச் செய்கிறது.

மாலையில் கடலுக்கும் தீபாரதனை காட்டுகிறார்கள். அதனை சமுத்திர ஆரத்தி என்கிறார்கள்.

சின்மயா மிஷின் பராமரிப்பில் அமைந்துள்ள இந்தக் கோயில் இந்தியாவில் நான் பார்த்த வரை மிக வித்தியாசமான கோயில்.

‘To Give Maximum Happiness to Maximum People for the Maximum Time’ – இதுவே சின்மயா மிஷினின் மோட்டோ.

உண்மைதான். கடலும், பெருமாளும் சொர்க்கத்தை உணரச் செய்கிறார்கள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare K Bhuvaneswari
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 22, 2024 | சனிக்கிழமை

(Visited 1,805 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon