அடிப்படை நாகரிகம்!

பொதுவாக ஏதேனும் ஒரு காரணத்தினால் என்னைப் பிடிக்காதவர்கள் தங்கள் நட்பு வட்டத்தில் பேசிக் கொள்வது என்னவாக இருக்கிறது தெரியுமா?

‘அவங்க தன்னைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே இருப்பாங்க…’

அவர்களுக்குள் பேசிக் கொள்வது எப்படி எனக்குத் தெரியும்? ஞானக் கண் ஏதேனும் இருக்கிறதா என நினைக்க வேண்டாம். அந்த நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் மூலம் தகவல் கிடைத்துவிடும்.

அதிகம் பேசாத எனக்கே இந்தப் பட்டப் பெயர் என்றால் திறந்த வாயை மூடாதவர்களின் நிலையை எண்ணிப் பார்த்தேன். சற்று பயமாக இருந்தது.

என்னைப் பற்றி சுய அறிமுகம் (நன்றாக புரிந்துகொள்ளுங்கள் சுய தம்பட்டத்துக்கும் சுய அறிமுகத்துக்கும் வித்தியாசம் உண்டு) செய்து கொள்ள வேண்டியிருக்கும் சந்தர்ப்பங்கள் தவிர வேறெப்போதும் வாயை திறப்பதில்லை. என் நிறுவனப் பணி சாராத இடங்களுக்குச் செல்லும்போது நான் என்ன செய்கிறேன் என்றே யாருக்கும் தெரியாது. அதுவும் அப்பா அம்மாவுடம் செல்லும்போது ஒரு மகளாக, குட்டிச் சிறுமியின் பாவனையில்தான் என் செயல்பாடுகள் இருக்கும். ஒரு துளியும் என் ஆளுமைத்திறன் வெளிப்படாது. இது என் இயல்பு.

எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் மூலம் திரு. பி. வெங்கட்ராமன் (குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் அபிமானி, நண்பர்) என்ற பெரியவர் 70 வயதில் அவர் எழுதிய சாலைவிதிப் பாடல்கள் நூலை வெளியிட்டோம். அவர் நூல் வெளியீட்டு விழா நடத்த ஆசைப்பட்டார்.

நான் எழுதுகின்ற நூல்களுக்கே நான் வெளியீட்டு விழாவெல்லாம் இதுவரை வைத்ததில்லை. ஆகவே, அவரை விழா ஏற்பாடு செய்யச் சொன்னேன். நான் பதிப்பாளராக கலந்துகொள்கிறேன் என சொன்னேன்.

இது நடந்தது 2005 / 2006 ஆம் வருடம் இருக்கும். அவர் மயிலாப்பூரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். திருப்பூர் கிருஷ்ணன் போன்று வேறு சில முக்கியஸ்தர்களையும் சிறப்பு விருந்தினராக்கினார். அந்த நிகழ்ச்சியில் நான் ஒரு பதிப்பாளராக கலந்துகொண்டு பேசினேன்.

அப்போதே எங்கள் காம்கேரின் வயது 16. எனக்கு 16 வருட அனுபவம்.

நிகழ்ச்சி முடிந்து திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் என் பெற்றோரிடம் என்ன சொன்னார் தெரியுமா? என்னை கல்லூரியில் படிக்கும் பெண் என நினைத்துக்கொண்டு, என் பெற்றோர் தான் நிறுவனத்தை நடத்துவதாக எண்ணிக்கொண்டு ‘உங்கள் மகளை தமிழை அடிப்படையாக எடுத்து படிக்கச் சொல்லுங்கள். உங்கள் பெண்ணின் நாவில் தமிழ் நர்த்தனமாடுகிறது…’ என்றாரே பார்க்கலாம்.

அப்போதுதான் நான் என் பிசினஸ் கார்டை எடுத்து அவரிடம் கொடுத்தேன். நான் செய்து வரும் பணிகளை விளக்கினேன். அவரும் புரிந்து கொண்டார். அதன் பின்னர் பல மேடைகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நானும் அவரும் சிறப்பு விருந்தினராகவெல்லாம் கலந்துகொண்டிருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

ஆக, தேவைப்பட்டாலே தவிர என்னைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் என்னைப் பற்றி எதையுமே அறியாதவர்களுக்கு முழுமையாக சொல்ல வேண்டும் என்றால் விரிவாக சொல்லவும் தயங்குவதில்லை.

இதுபோன்ற ஒரு நிகழ்வு நேற்று. ஒரு பள்ளியில் Ai குறித்த கருத்தரங்கில் என்னை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்காக ஒருவர் போன் செய்திருந்தார். அந்தப் பள்ளியின் அட்வைஸர் கமிட்டியின் தலைவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். மெத்தப் படித்தவர். கம்ப்யூட்டர் துறை சார்ந்தவர் அல்ல.

அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ள பொதுவாக பலரும் எடுத்துக்கொள்ளும் நேரத்தைவிட அதிகமாக எடுத்துக் கொண்டார். நான் வழக்கம்போல் உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

என்னைப் பற்றி அறிந்துகொண்டு போன் செய்கிறார் என நினைத்து சுய அறிமுகம் செய்துகொள்ள வேண்டாம் என நினைத்து அமைதியாக எந்தப் பள்ளி, என்று நிகழ்ச்சி என விசாரித்தேன்.

என்னைப் பற்றி எப்படி அறிந்தீர்கள்? என வழக்கமான கேள்வியை கேட்டேன்.

உங்கள் அசத்தும் Ai நூல்கள் இரண்டையும் வாங்கினேன். வாசித்தேன். அதன் மூலம் அறிந்தேன்.

‘நூலை வாசித்தேன். நன்றாக தமிழ் எழுதுகிறீர்கள். செண்டன்ஸ் ஃபார்மேஷன் நன்றாக வருகிறது உங்களுக்கு. இப்படியே எழுதிப் பழகுங்கள்…’ என்றபோது கொஞ்சம் நெருடலாக இருக்கவே ‘என்னைப் பற்றி நீங்கள் வேறென்ன தெரியும்?’ என்றேன்.

‘எழுத்தாளர்….’ என்று இழுக்க எனக்கு கொஞ்சம் கோவம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் ஆயாசமாக இருந்தது.

‘ஆமாம் சார் 250 நூல்களுக்கும் மேல் எழுதியும் செண்டன்ஸ் ஃபார்மேஷன் வரவில்லை என்றால்தான் வியப்பாக இருக்க வேண்டும் அல்லது அதிர்ச்சியாக இருக்க வேண்டும்…’ என்றபோது அவர் கொஞ்சம் விழித்துக் கொண்டார்.

‘250 நூல்களா?’

‘ஆமாம்… நீங்கள் நினைப்பதைப் போல நான் எழுத்தாளர் மட்டும் அல்ல… காம்கேர் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தின் நிறுவனர், ஆராய்ச்சியாளர்…’ என அடிப்படை பணி குறித்து விவரித்தேன்.

அவர் அப்போதும் அதிசயமாகக் கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர முன்பே என் குறித்து என் வெப்சைட்டுகளில் பார்த்து தெரிந்துகொண்டெல்லாம் பேசவில்லை என்பது பட்டவர்த்தனமானது.

ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைக்கும்போதாவது அவர்கள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு தொடர்பு கொள்ளக் கூடாதா? அடிப்படை நாகரிகம் அல்லவா அது?

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 28, 2024 | வெள்ளி

(Visited 881 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon