திருமணங்கள்!

திருமணங்கள்!

ஒரு பெண் 53 ஆண்களை மேட்ரிமோனி வெப்சைட் மூலம் தொடர்பு கொண்டு ஏமாற்றி திருமணம் செய்ததுதான் நேற்றைய பேசுபொருள்.

இதற்கு தன் சொந்தப் பதிவுகள் மூலமும், பிறரது பதிவுகளுக்கு கமெண்ட் செய்வதன் மூலமும் வயது வித்தியாசம் இல்லாமல் நிறைய ஆண்கள், தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் மூன்றாம்தர எண்ண ஓட்டங்கள், வக்கிர எண்ணங்கள். என்னடா இது, இவர்களா இப்படி சிந்திக்கிறார்கள் என்று எண்ணும் அளவுக்கு கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்கள்.

ஒருவர், அந்த ஒருவர் ஆணோ, பெண்ணோ யாராக வேண்டுமானலும் இருக்கட்டுமே, அவர் கீழ்த்தரமான செயல்களை செய்கிறார் என்றால் அதை விமர்சிப்பவர்களின் மன ஓட்டங்களும், கருத்துக்களும் அதைவிட கீழ்த்தரமாக இருந்தால் இரண்டு தரப்பினருக்கும் என்ன வித்தியாசம்?

அப்படிப்பட்ட அசிங்கமான எழுத்துக்களையே மாலையாகப் போட்டு அலங்கரித்துக் கொண்டிருந்தது சமூக ஊடகங்கள், நேற்று முழுவதும்.

மேட்ரிமோனி வெப்சைட் என்றதும் என் நினைவுக்கு வந்தது இருபது வருடங்களுக்கு (2002) முன்னர் கனடாவில் வசித்து வரும் ஒரு கிளையிண்ட்டுக்காக (பெண்) நாங்கள் (காம்கேர்) வடிவமைத்து பராமரித்துக் கொண்டிருந்த ஜெய்ஹனுமான் மேட்ரிமோனி வெப்சைட்தான். அந்த காலகட்டத்தில் திருமணத்துக்காக மேட்ரிமோனி வெப்சைட்டெல்லாம் பிரபலமாகவில்லை (வரவே இல்லை என்றும் சொல்லலாம்) என்பதாலும், ஹனுமான் பெயரைத் தாங்கியதாலும் அந்த வெப்சைட் பிரபலமாக விளங்கியது.

ஐந்தாறு வருடங்கள் நாங்கள் பராமரித்துவிட்டு பின்னர் அவர்களுக்கே பயிற்சி கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் அந்தப் பொறுப்பை.

அதைவிடுங்கள். அது விஷயம் அல்ல இங்கு.

என் அப்பாவின் அண்ணா பேரனுக்கு நாங்கள் தான் வரன் பார்த்து வருகிறோம். எங்கள் பெரியப்பாவும் இல்லை, பையனுக்கு அப்பாவும் இல்லை என்பதால் முழு பொறுப்பையும் அப்பாதான் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமும் வரன் பார்க்கிறோம். அதில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள்.

இந்த போஸ்ட் காம்கேர் புவனேஸ்வரி பதிவில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது.

ஒரு பெண்ணின் ஜாதகத்துக்கு அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டோம். அந்தப் பெண்ணின் அப்பா என தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் சில நிமிடங்களில் புகைப்படமும், ஜாதகமும் பிற விவரங்களையும் அனுப்புவதாக சொன்னார். சொன்னபடி செய்யவும் செய்தார்.

புகைப்படங்களை பார்த்த நாங்கள் அதிர்ந்தோம். திருமணத்துக்குத்தானே பெண் பார்க்கிறோம்? என்று ஒருவித கலக்கமான மனநிலை உண்டானது. பெண்கள் மார்டனாக உடை அணிவது தவறில்லை. ஆனால் மார்டனையும் தாண்டி அந்தப் புகைப்படங்கள் என்னவோ செய்தன. பார்க்கவே அருவருப்பாக இருந்தன.

நிச்சயம் ஒரு நல்ல அப்பா அந்த மாதிரியான புகைப்படங்களை அனுப்பவே மாட்டார்.

அதில் வேறு ஏதோ விவகாரம் இருப்பதாகத் தோன்றவே நாங்கள் அந்தப் புகைப்படங்களையும் அவர் அனுப்பிய விவரங்களையும் டெலிட் செய்தோம். உடனடியாக அவருக்கு ‘பையனுக்கு பெண்ணை பிடிக்கவில்லை’ என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல், ‘பையன் பிசினஸ் செய்வதால், பெண் அவர் இருக்கும் ஊருக்கு வர வேண்டி இருக்கும். அது சாத்தியமாக இருக்காது என்பதால் மன்னிக்கவும், வேறு ஜாதகம் அமைய வாழ்த்துகள்’ என சொல்லி அந்த எண்ணை ப்ளாக் செய்துவிட்டோம்.

அடுத்து ஓர் அனுபவம். ஒரு பெண்ணின் ஜாதகக் குறிப்பில் அவருக்கு ஒரு கண்ணுக்கு அருகே சிறு வீக்கம் இருப்பதாக சொல்லி இருந்தார்கள். பெண்ணின் புகைப்படம் வெப்சைட்டில் இல்லை. எங்கள் குடும்பத்திலேயே ஒருவருக்கு கண்ணுக்கு மேலே சிறு வீக்கம் இருக்கும். ஆனால் அது உடல்நலக் குறை அல்ல. மேலும் அது அவருக்கு அழகாகவும் அடையாளமாகவும் இருக்கும். அதுபோல இருக்கும் என நினைத்து அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டோம்.

நடுத்தர வகுப்பு குடும்பம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் அப்பா. அம்மா ஹவுஸ் மேக்கர். ஒரே பெண்.

புகைப்படம் அனுப்பினார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்தும் அதிர்ந்துவிட்டோம். ஆனால் இந்த அதிர்ச்சி வேறு, முன்பு நான் குறிப்பிட்ட புகைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி வேறு.

இந்தப் புகைப்படத்தில் உள்ள பெண் நன்றாக புடவை அணிந்து கம்பீரமாக உயரமாக இருந்தார். ஆனால் இரு கண்களிலும் பார்வையையே மறைக்கும் அளவுக்கு மருக்கள் பெரிது பெரிதாக வளர்ந்து கொத்து கொத்தாக கன்னங்களின் மேல் தொங்கிக் கொண்டிருந்தன.

முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். ஆன்லைனில் ஏதோ வேலையும் செய்கிறார் என்றாலும், பார்ப்பதற்கு பயமாக தோன்றியது. பின்னர் அந்த பயம் அனுதாபமாக மாறியது. பின்னர் ‘பாவம்’ என பரிதாபப்பட வைத்தது.

தன் பெண்ணுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஒரு தகப்பனின் கடமை உணர்ச்சியை நினைத்து பெருமைப்பட்டோம். அந்த மகளும் நம்பிக்கையுடன் அப்பாவின் முயற்சிக்கு ஒத்துழைக்கிறார் என்பதை நினைத்தபோது ‘அந்த மகளுக்கு திருமணம் ஆகாவிட்டாலும் பரவாயில்லை. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும்’ என பிரார்த்தனை செய்து கொண்டோம்.

’உங்கள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள்!’ என்று மட்டும் அப்பா வாட்ஸ் அப் தகவல் அனுப்பி வைத்தார். வேறென்ன சொல்ல முடியும்? எதையாவது சொல்லி அவர்கள் மனதை நோகடிக்காமல் (எந்த பதிலை சொன்னாலும் அவர்கள் மனம் நோகத்தான் செய்யும் என தெரிந்திருந்தாலும்) இப்படி பொதுவான ஒரு வாழ்த்தை அனுப்பி அந்த வரனுக்கும் முற்றுப் புள்ளி வைத்தோம்.

ஒரு பெண் 53 ஆண்களை ஏமாற்றி மணம் புரிந்த நேற்றைய செய்தி பலருக்கும் பலவிதமான சிந்தனைகளை ஏற்படுத்தியதை அவரவர்கள் எழுத்துக்கள் வெட்ட வெளிச்சமாக்கின.

எனக்குள் ஏற்பட்ட எண்ணச் சிதறல்கள் இப்படியாக!

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 11, 2024 | வியாழன்

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon