இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்?

இன்னுமா அதே கம்பெனியில் வேலை செய்கிறாய்?

புகைப்படம்: நான்கு மாதங்களுக்கு முன்னர் (பிப்ரவரி மாதம்) காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Ai குறித்து பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு எடுத்த செல்ஃபி.
—-
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 14 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஒரு இளைஞரை (36) சந்தித்தேன். அவருடைய அப்பா அம்மா எங்கள் குடும்ப நண்பர்கள் என்பதால் அவரை அவருடைய சிறு வயதில் இருந்தே தெரியும்.

இவரிடம் பலரும் கேட்கும் ஒரு கேள்வியை கடைசி பத்தியில் கொடுத்துள்ளேன். திருமணம் ஆகாதவர்களை / செய்துகொள்ளாதவர்களைப் பார்த்து ‘ஏன் திருமணம் ஆகவில்லை? என்றும், திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்களைப் பார்த்து ‘ஏன் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை?’ என்றும் கேட்பதற்கு இணையான கேள்வி அது. அதற்கு அவர் என்ன பதில் கொல்கிறார் என்பதையும் இறுதி பத்தியில் கொடுத்துள்ளேன். பொறுமை இருப்பவர்கள் பதிவை முழுமையாக வாசிக்கலாம்.

Hats Off to his mental maturity!

பொதுவாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் வருடத்துக்கு ஒரு நிறுவனம் (இது கொஞ்சம் அதிகப்படியாக தோன்றினால் 2 வருடங்களுக்கு ஒரு நிறுவனம் என வைத்துக் கொள்ளுங்கள்) சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாத குறையாக மாறுவார்கள்.

இவ்வளவு ஏன்… ஒரு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்து ஒவ்வொரு நிலையாக நேர்காணல் முடிந்து ஹெச்.ஆர் இண்டர்வியூ வரும்போது ஏற்கெனவே வேறொரு நிறுவனத்தில் ஆஃபர் லெட்டர் வந்திருந்தால் அதையும் ரெஃபரென்ஸாக கொடுங்கள் என்று நேரடியாகவே பேரம் பேசுகிறார்கள். ஒரு நிறுவனத்தில் வருடத்துக்கு 10 லட்சம் கொடுப்பதாக ஆஃபர் கொடுத்திருந்தால், அதே நேரத்தில் மற்றொரு நிறுவனத்துல் நேர்காணலுக்குச் சென்று அங்கு 10.5 லட்சம் கொடுப்பதாக ஆஃபர் லெட்டர் கொடுத்திருந்தால் அதையும் ரெஃபரன்ஸாக கொடுக்கலாம். அப்படிக் கொடுத்தால் 10.5 லட்சமோ அல்லது அதற்கு மேலோ சம்பளம் நிர்ணயித்து வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். பேரம் பேசுவது எப்படி என்பதை ஐடி நிறுவனத்தில் ஆட்கள் எடுக்கும் பிரிவில் இருப்பவர்கள் நன்கறிவர்.

32 ஆண்டுகளுக்கு முன்னர் ஐடி நிறுவனங்களே இல்லாத காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதன் முதலில் ஐடி நிறுவனம் (காம்கேர் சாஃப்ட்வேர்) தொடங்கிய பெண் தொழில்நுட்ப வல்லுநர் என்ற அங்கீகாரம் பெற்றிருந்தேன். அந்தக் காலகட்டத்தில், ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் குறைவு. அப்போது பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைத்து இளம் பெண்களை (நானுமே அப்போது 21 வயது இளம் பெண்தான்) வேலைக்கு எடுத்து, அவர்களுக்கு கம்ப்யூட்டர் கீபோர்ட்டையும், மவுசையும் பிடிக்க கற்றுக் கொடுத்து, லாஜிக்கலாகவும் சிந்திக்கப் பழக்கி புரோகிராம் எல்லாம் எழுத பயிற்சி கொடுத்து வேலைக்குத் தயார்படுத்த 6 மாத காலம் நிமிடமாய் பறந்துவிடும். ‘அப்பாடா’ என நிமிர்ந்து உட்கார்ந்து வேலைகளை ஆரம்பிக்கலாம் என நினைத்தால் அங்குதான் பிரச்சனை ‘இதோ வந்துட்டேன்’ என ஓடி வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்ளும்.

ஆம். பெண்களாக இருந்தால் திருமணம் நிச்சயம் ஆகிவிடும். வேலையில் இருந்து நின்று விடுவார்கள். பெண்களால் இப்படி பிரச்சனை ஏற்படுவதால் முழுக்க முழுக்க பெண்களை வைத்து நிறுவனம் நடத்த வேண்டும் என்ற கொள்கையை விட்டுக் கொடுத்து ஆண்களையும் வேலைக்குத் தயார்படுத்தினால், கூடுதல் சம்பளம் வேண்டி எங்கள் காம்கேரில் இலவசமாக பெற்ற அனுபவத்தை சேர்த்து பயோடேட்டா தயாரித்து வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.

ஆக, எங்கள் காம்கேரில் முதல் 10 வருடங்கள் வேலைக்கு ஆட்களை எடுப்பதும் எங்கள் தேவைக்கு ஏற்ப பயிற்சி கொடுப்பதுமே மாபெரும் பணியாக இருந்தது. மேலும், நாங்கள் விஞ்ஞானிகளைப் போல புதுப் புது சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் பணி செய்வதால் எங்களிடம் பணிபுரிவது அத்தனை எளிதும் அல்ல. ‘விட்டால் போதும்’ என அயல்நாட்டுப் ப்ராஜெக்ட்டுகளை எடுத்து சுலபமாக பணி செய்யக் கூடிய நிறுவனங்களை நாடிச் சென்று விடுவர்.

ஏன் ‘விட்டால் போதும் என ஓடி விடுவார்கள்?’ என உங்களில் சிலர் நினைக்கலாம். அவர்களுக்காக சிறு விளக்கம்.

யோசித்துப் பாருங்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே காம்பஸ் இன்டர்வியூவில் அள்ளி எடுத்துக் கொண்டு செல்லும் அத்தனை கல்லூரி மாணவர்களும் எப்படி ஐடி நிறுவனங்களில் பணி ஆற்ற முடிகிறது. வேலை சுலபம். அயல்நாட்டில் இருந்து ப்ராஜெக்ட்டுகளை எடுத்து அதில் பகுதி பகுதியாக பிரித்துக் கொடுத்து இங்கிருக்கும் இளைஞர்களை வைத்து வேலைகளை முடித்துக் கொடுப்பதுதான் பெரும்பாலும் ஐடி நிறுவனங்களில் நடைபெறும் பணி.

ஆனால், எங்கள் காம்கேரில் அப்படி கிடையாது. ஒவ்வொரு சாஃப்ட்வேரையும் நாங்களே தயாரித்தோம். அனிமேஷனுக்காக சாஃப்ட்வேர்கள் எல்லாம் வெளிவருவதற்கு முன்பே சி, சி++ போன்ற மொழிகளில் அனிமேஷன்களை உருவாக்கி உள்ளோம். அதற்காக சாஃப்ட்வேர்களை எல்லாம் நாங்களே தயாரித்திருக்கிறோம். இப்போது வரை அப்படித்தான்.

அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் பணி செய்வது கொஞ்சம் சிரமம். முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஒரு புரோகிராமரோ அல்லது சிஸ்டம் அனலிஸ்ட்டோ, ஓவியரோ அல்லது அனிமேட்டரோ யாராக இருந்தாலும் அவரவர்கள் தங்கள் பணியில் Down to Earth ஆக அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அல்லது தெரிந்து கொள்ளும் ஆர்வமாவது இருக்க வேண்டும். இப்படி வேலை செய்வதை நிறைய பேர் இன்றளவும் விரும்புவதில்லை. தையல் கடையில் சட்டைக்கு காஜா போடும் பணி செய்யும் ஒருவர் முழு சட்டையை தைக்கும் கலையை கற்க முயலவில்லை என்றால் அவர் காலம் முழுவதும் காஜா போட்டுக் கொண்டே அமர்ந்திருக்க வேண்டியதுதான்.

அப்படித்தான், எங்கள் நிறுவனத்தில் பணி புரிவோர் சில காலம் பணியில் இருந்துவிட்டு சுயமாகக் கூட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் எங்கள் நிறுவனத்துக்கு மற்ற எம்.என்.சி நிறுவனங்களில் பணிவோர் வேலைக்கு வந்தால் அவர்களால் பணி செய்ய முடியாது. காரணம் அவர்கள் அவர்களுக்கு இட்ட ஒரு சிறு பகுதிப் பணியில் மட்டுமே அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவோரால் புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவதற்குக் கூட முடியும்.

காரணம் மேலே சொன்னதுதான். புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பாருங்கள்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், மற்ற ஐடி நிறுவனங்கள் இட்லி மாவை கடையில் இருந்து வாங்கி இட்லி தயாரித்து கொடுப்பவர்கள் என்றால் நாங்கள் இட்லி மாவு அரைக்கத் தேவையான அரிசி, உளுந்து இவற்றை நிலத்தில் விளைவித்து, சரியான பக்குவத்தில் ஊறவைத்து, தேவையான உப்பு, வெந்தயம் சேர்த்து அரைத்து பக்குவமாக புளிக்க வைத்து இட்லி தயாரித்துக் கொடுப்பவர்கள்.

இந்த உதாரணமும் புரியவில்லை என்றால் இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல.

சரி முதல் பத்தியின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.

அவரிடம் கேட்கும் பொதுவான கேள்வி:

‘நீங்கள் ஏன் ஒரே நிறுவனத்தில் புரிகிறீர்கள்… அதுவும் 14 வருடங்கள் தொடர்ச்சியாக…’

அதற்கு அவர் சொல்லும் பதில்:

‘நீங்கள் அதற்கான காரணத்தை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளுங்கள்… எனக்குப் பிடித்தக் காரணம் I Love My Job at this concern’

முன்பெல்லாம் வேலைக்கு சேர்ந்து 2 வருடங்களிலேயே ஏன் வேறு நிறுவனம் செல்லவில்லை என கேட்பார்களாம். அப்போதெல்லாம் கொஞ்சம் ‘கில்ட்’ ஆகி காரணங்களை புரிய வைக்க யோசிப்பாராம். என்ன காரணம் சொல்ல?

‘ வேறு நிறுவனம் ஏன் மாறுகிறாய்’ என கேட்டால் ‘வேலை பிடிக்கவில்லை, ‘பாஸை பிடிக்கவில்லை’, ‘டீமை பிடிக்கவில்லை’, ‘இங்கு கொடுப்பதைவிட அங்கு நிறைய சம்பளம் கொடுக்கிறார்கள்’ என்று ஏதேனும் ஒரு காரணத்தையோ அல்லது எல்லா காரணங்களையோ அடுக்கலாம்.

‘ஏன் நிறுவனம் மாறவில்லை?’ என்றால் என்ன பதில் சொல்வது? இது எப்படி இருக்கிறது தெரியுமா… ஏன் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கு எளிதாக பதில் சொல்லி விடலாம். ஏன் பிடிக்கிறது என்று கேட்டால் பதில் சொல்வது கடினம். அப்படித்தான்,  வேலைக்கு சேர்ந்த 14 வருடங்களில் 13 வருடங்கள் ஒரே கேள்வி, இதே கேள்வி! போரடிக்காதா பின்னே?

இவர் சொல்லும் பதிலும் ஒன்றே ஒன்று தான்.

I Love My Job at this concern.

இப்படி உணர்வுப் பூர்வமான பந்தத்தை வேலை செய்யும் நிறுவனங்களில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படும் பன்னாட்டு நிறுவனங்களில் (MNC) தொடர்ச்சியாகப் பணிபுரியும் இந்த இளைஞரை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

விடைபெறும் முன் வாழ்த்துகள் என்றேன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 19, 2024 | வெள்ளி

(Visited 1,295 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon