நடிகர் ராஜேஷ்!

நடிகர் ராஜேஷ்!

நடிகராக நான் முதன் முதலில் இவர் நடித்துப் பார்த்த திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’. அப்போது ராஜேஷ் என்ற நடிகர் குறித்த எந்த அபிர்ப்பிராயமும் கிடையாது.

அதன் பிறகு சில வருடங்களாக குறிப்பாக கொரோனா காலத்தில் இருந்து அவர் நேர்காணல்கள் செய்து வந்த வீடியோக்கள் (இவர் பிறரை செய்த நேர்காணல்கள்) நிறைய கண்களில் பட ஆரம்பித்ததும் அவர் குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

இங்கு அரசியல் பின்னணியை பற்றி யாரும் பேச வேண்டாம். அப்படிப்பட்ட கமெண்ட்டுகள் நீக்கப்படும்.

நான் சொல்ல வந்த விஷயமே வேறு.

இலக்கியம், ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் இப்படி எந்த டாப்பிக்காக இருந்தாலும் மனிதர் தன் மனம் முழுக்க தளும்பத் தளும்ப தகவல்களுடன் நேர்காணலுக்கு வந்தமர்வது அத்தனை மரியாதையாக இருக்கும்.

அவரது நடை, உடை, சிகை அலங்காரம், பாவனை எல்லாமே அத்தனை நேர்த்தியாக இருக்கும். இயல்பாக இருக்கும். ஏனோ தானோ என்றிருக்காது.

அவரது அறிவாற்றலும், கம்பீரமான தோற்றமும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டதாய் இருக்கும் அளவுக்கு அவரது பேச்சின் நயம் வெளிப்படும்.

நானெல்லாம் என்னைப் பற்றிய நேர்காணலுக்கு நான் பதில் சொல்வதாக இருந்தால் கூட மனதுக்குள் அத்தனை ரிகர்சல் செய்து கொண்டுதான் செல்வேன். சொல்வதை எதிராளிக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் ரிகர்சல் முக்கியம். நமக்குத் தெரிந்ததை நமக்குப் புரியும்படி சொல்ல வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ரிகர்சல் எல்லாம் தேவையில்லை. அதில் நம் மேதாவித்தனம் மட்டுமே வெளிப்படும். பார்வையாளர்களுக்கு புரியாது.

எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் அவரது அறிவாற்றல் வியக்க வைக்கும். அந்த அறிவாற்றலை ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவம் இல்லாமல் தலைகனம் இல்லாமல் தான் நேர்காணல் செய்பவரிடம் இடையிடையே தகவல்களாக சொல்லியும், தனக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாததைப் போல் அடக்கமாக கேள்விகளாகக் கேட்டு பதில் வாங்கும் இவரது திறமை என்னை வியக்க வைக்கும்.

நேர்காணல் செய்வதற்காக வந்தமரும்போது கேள்விகளை பொதுவாக தயார் செய்து வராமல் / எழுதி வைத்துக் கொள்ளாமல், கேள்விகளோடு அது தொடர்பான தான் அறிந்த விஷயங்களை எல்லாம் தகவல்களாக குறிப்பெடுத்துக் கொண்டு வருவார்.

நேர்காணலின் போது, அது குறித்த தன் நிபுணத்துவத்தை நேர்காணலுக்கு வந்திருப்பவரிடம் வெளிப்படுத்தாமல் கேள்விகளுக்குப் பொருத்தமாக தான் அறிந்த தகவல்களை அழகாக சுருக்கமாக விளக்கிச் சொல்லி ‘….இப்படி சொல்றாங்களே… அது உண்மையா?’ என்று கேட்பார். மேலும் நேர்காணலுக்கு வந்திருப்பவரிடம் ‘அடடே… அப்படியா?’, ‘என்னாங்க… இப்படிச் சொல்றீங்க… ஆச்சர்யமா இருக்கே…’ என சர்வ சாதாரணமாய் தன் நிபுணத்துவத்தை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டு வெகு இயல்பாய் உரையாடும் பாங்கு அம்சமாக இருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இவர் யாரை நேர்காணல் செய்கிறாரோ அவரது கருத்துக்களைவிட அவரிடம் இவர் கேள்வி கேட்கும் போது இவர் சொல்லும் தகவல்களை நான் விரும்பி ஆர்வமாகக் கேட்பேன். எல்லாம் அறிந்திருந்தும் ஒன்றுமே தெரியாததைப் போல் அடக்கமாக கேள்வி கேட்டு பதிலை வாங்கும் அற்புதமான மனிதர்.

ஒன்று சொல்லட்டுமா?

மனதில் ஓரத்தில் ‘Ai குறித்து இவர் என்னை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்’ என்ற எண்ணம் இருந்து கொண்டுதான் இருந்தது.

எளிமையாக பதில் சொல்லும் திறன் உள்ள என்னிடம் அதைவிட எளிமையாக பார்வையாளர்கள் சார்பாக கேள்வி கேட்டு உரையாடும் இவர் என்னை பேட்டி எடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதற்கு, Ai குறித்த விழிப்புணர்வு இன்னும் பல லட்சம் மனிதர்களுக்கு சென்று சேரும் என்ற எண்ணம் மட்டுமே காரணம்.

ஓம் சாந்தி!

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 29, 2025 | வியாழன்

(Visited 12 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon