இந்தப் புகைப்படங்கள் 10 வருடங்களுக்கு முன் சேவாலயாவில் எடுத்தவை…
1992-ம் ஆண்டில் இருந்து வருடா வருடம் எங்கள் காம்கேரின் COMPCARE DAY – ஐ எங்கள் நிறுவனத்தில் என்னுடன் இணைந்து பணிபுரிபவர்களுடன் இணைந்து அலுவலகத்தில் பூஜை செய்து கொண்டாடிய பிறகு அன்றைய தினம் ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று எங்களால் ஆன உதவிகளை செய்து, அவர்களுடனும் எங்கள் நேரத்தை செலவிடுவோம்.
2007-ம் ஆண்டுவரை ஒருசில வருடங்கள் சேவாலயாவிற்கும் சென்றிருக்கிறோம்.
1988 – ல் தொடங்கப்பட்ட சேவாலயா சென்னையில் பாக்கம் என்ற இடத்துக்கு அருகில் உள்ள கசுவா என்ற கிராமத்தில் இயங்கி வருகிறது. பெற்றோர் இருவரும் இல்லாமல் நிராதரவாக விடப்பட்ட குழந்தைகளுக்கும், பெற்றோரில் யாரேனும் ஒருவர் இருந்தாலும் ஏழ்மை காரணமாக வளர்க்க முடியாமல் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும்… வயதான காலத்தில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியோர்களுக்கும்… தங்கள் கோசாலா மூலம் கரவை நின்றுபோன மாடுகளுக்கும்… சேவாலயா புகலிடம் கொடுக்கிறது!
2007-ம் ஆண்டு எங்கள் அப்பா அம்மா பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையை தொடங்கினோம். மாற்றுத்திறனாளிக்கு உதவும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் அவர்களின் கல்வி வேலைவாய்ப்புக்கு உதவி வருவதோடு சூழலுக்கு ஏற்ப பல்வேறுதரப்பு மக்களுக்கும் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம்.
பார்வையற்றவர்கள் ஸ்க்ரைப் (பார்வையற்றவர்கள் வாயால் சொல்ல சொல்ல தேர்வெழுதுபவர்கள்) உதவியின்றி ஸ்க்ரீன் ரீடிங் தொழில்நுட்பம் மூலம் தேர்வெழுத உதவும் ஸ்க்ரைப் சாஃப்ட்வேர் உருவாக்கியுள்ளோம்.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தரப்பினரில் (பெற்றோர், ஆசிரியர், ஓவியர்கள், எழுத்தாளர்கள் Etc.,) திறமைசாலிகளைத் தேர்ந்தெடுத்து ‘ஸ்ரீபத்மகிருஷ்’விருதளித்தும் வருகிறோம்.
இந்த வருடம் (2018) பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11 அன்று சேவாலயா ஆஸ்ரமக் குழந்தைகளுக்காக பேசுவதற்காகவும், அவர்களுடன் இணைந்து பாரதியார் தினம் கொண்டாடவும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சேவாலயா சேவைகள் சிறக்க வாழ்த்துகளும் பிராத்தனைகளும்…
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 24, 2018