விடுமுறை தினமானதால் என்னுடைய புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். மறைந்த வயதில் மூத்த என் நலன்விரும்பி ஒருவர் எனக்குப் பரிசளித்த ‘ஒருரூபாய் நோட்டுக் கட்டு’ ஒன்று என் கண்களில் பட்டது. நினைவலைகளில் ஆழ்ந்தேன்.
அப்போது அங்கு வந்த என் அம்மா ‘இதை வங்கியில் கொடுத்து 100 ரூபாயாக மாற்றிக்கொள்ளலாமே…’ என்றார்.
அதற்கு நான் ‘இது என் பண்புக்கும் படைப்புக்கும் கிடைத்த பரிசு. அதை ரூபாய் நோட்டாகவே நான் கருதவில்லை. எனக்குக் கிடைத்த ஷீல்டாக நினைக்கிறேன். எனவே, அதை மாற்றுவதில் என் மனம் ஒப்பவில்லை…’ என்றேன்.
உடனே என் அம்மா சொன்னார். ‘ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறதோ, அதே அளவுக்கு அந்த விஷயத்தில் இருந்து வெளியே வருவதற்கும் மனோபாவம் வேண்டும்…’
சட்டென, விவேகானந்தர் ‘கர்ம யோகம்’ குறித்து சொன்ன கருத்துக்கள் என் நினைவுக்கு வந்தது.
‘பேரின்பம் பெற வேண்டுமானால் நாம் எதிலும் ஒட்டாதிருக்க வேண்டும். நினைத்தபோது பற்றற்று நிற்கும் திறமை நம்மிடம் இருக்குமேயானால் எந்தத் துயரமும் இருக்காது. ஒரு பொருளின் மீது முழு ஆற்றலோடு பற்று வைக்கும் திறமையுடன், வேண்டும்போது அதில் இருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக்கொள்வதற்கான திறன் உடையவனே இயற்கையில் இருந்து மிகச் சிறந்ததைப் பெற முடியும். பற்றும் திறமை, விட்டு விலகும் திறமையின் அளவுக்கு இருக்க வேண்டும்.’
இதே கருத்தை ஜெயகாந்தன் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ என்ற தனது நாவலில் அழகாகச் சொல்லி இருக்கிறார். கதையின் சாராம்சத்தை என் நடையில் சுருக்கமாக சொல்கிறேன்.
‘அறத்துக்கே அன்பு சார்பென்ப அறியார்
மறத்துக்கும் அஃதே துணை’நல்ல விஷயங்களுக்கு மட்டும் அன்பு துணைபோவதில்லை. தீய செயல்களுக்கும் அது துணையாகின்றது என்கிறார் திருவள்ளுவர்.
அன்பை யாரிடம் அதீதமாக வைக்கிறோமோ, அது அவர்களை அடிமையாக்க நினைக்கிறது. அதுவே அவர்களை சுயமாக செயல்படாமல் வைக்கிறது. இந்தக் கதையின் நாயகி நாடக நடிகை. கலை, அழகு என இயல்பாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருபவள். அவளுக்கு கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள ஒரு பத்திரிகையாளன் மீது ஈர்ப்பு வருகிறது. இருவருக்குள்ளும் அன்பு மேலோங்குகிறது. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகையாளன் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என சொல்லும்போது நடிகை அதிர்ச்சி அடையாமல் ‘நாம் இப்படியே நண்பர்களாக இருந்து விடுடலாமே’ என்று சொல்கிறாள். அவனுடைய வற்புறுத்தல் அவளை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கிறது. திருமணமும் ஆகிறது.
சில நாட்களில் பத்திரிகையாளனுக்கு நடிகையின் சில கொள்கைகள் பிடிக்காமல் போகிறது. ஆனால் நடிகைக்கு அவன் மீதுள்ள அன்பில் ஒரு மாற்றுகூட குறையவே இல்லை. ஆனால் அவனுக்குத்தான் தன் சிந்தனைக்கு மாற்றாக உள்ள அவளுடைய செயல்பாடுகள் எரிச்சலைத் தருகிறது. ஒரு கட்டத்தில் ‘நாம் விவாகரத்து செய்துகொள்ளலாம்’ என சொல்கிறான்.
அதற்கும் அந்த நடிகை அதிர்ச்சி அடையாமல் ‘நான் திருமணம் செய்துகொள்ளாமல் நண்பர்களாக இருக்கலாம் என்றேன். ஆனால் உங்கள் விரும்பத்துக்கு ஏற்ப திருமணம் செய்துகொண்டேன். இப்போது விவாகரத்து செய்யலாம் என்கிறீர்கள். ஓ.கே. விவாகரத்து செய்துகொள்ளலாம்’ என்று வெகு இயல்பாக சொன்னபோது அவன் வக்கீலை சந்திக்கிறான்.
வக்கீல் அவன் முன் வைத்த கேள்விகள் இவைதான்.
உங்கள் மனைவியிடம் ஏதேனும் குறைகள் இருக்கிறதா?
சே…சே… அவளிடம் எந்தக் குறையும் இல்லை…
அவரிடம் ஏதேனும் உடல் அங்ககீனம் இருக்கிறதா?
சீ…சீ… அவள் கொள்ளை அழகு…
அப்போ கேரக்டரில் ஏதேனும் குறை…
ஐயோ… சொக்க தங்கம்…
‘அப்போ எப்படி விவாகரத்து செய்வது? காரணம் ஏதேனும் வேண்டுமே… மேலும் ஒரு வருடம் பார்த்துக்கொள்ளாமல் வேறு இருக்க வேண்டும்…’
‘என்னால் அவளை ஒருநாள் கூட பார்க்காமல் இருக்க முடியாது…’
‘எந்த வழிக்கும் வரலைன்னா எப்படி விவாகரத்து செய்வது?’ என்று சொல்லி வக்கீல் அவனை அனுப்பி வைக்கிறார்.
இப்படியே நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் அந்த நடிகையின் கால் செயல்படாமல் போக, வீல் சேரில் அமர்ந்துதான் காலத்தைக் கடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்த செய்தியை கேள்விப்பட்ட வக்கீல் மகிழ்ச்சியுடன் அவனிடம் சொல்கிறார்.
‘இதுதான் சரியான சந்தர்ப்பம். உன் மனைவிக்கு உடல் ஊனமாகிவிட்டது. இதையே காரணம் காட்டி அவளை விவாகரத்து செய்துவிடலாம்…’
அதற்கு அவன் சொல்கிறான்.
‘என்ன இப்படி சொல்கிறீர்கள்… இப்போ தான் என் மனைவிக்கு என் தேவை வேண்டும். அவள் காலம் முழுவதும் அவளுடன் இணைந்து அவளுக்கு பக்க துணையாக இருப்பேன்…’
இப்படியாக இந்த நாவலின் நடை போகிறது.
இதில் பரஸ்பரம் அன்பு வைக்கும் நண்பனை திருமணம் செய்துகொள்ளும்போதும் சரி, அவன் விவாகரத்து கேட்கும்போதும் சரி அந்த நடிகை ஒரே மனநிலையில்தான் இருக்கிறாள். என் பார்வையில் அந்த நடிகை இயல்பாகவே கர்மயோகத்தைக் கடைபிடிப்பவளாக தெரிகிறாள்.
விவேகானந்தரும், திருவள்ளுவரும், ஜெயகாந்தனும், நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த ‘ஒரு ரூபாய் நோட்டு கட்டும்’ கர்மயோகத்தை சிந்திக்க வைத்தது.
(விகடகவி APP பத்திரிகையில் 06-12-2017 இதழில் வெளியான கட்டுரை)
அன்புடன்
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜனவரி 15, 2019
தினசரி டாட் காமில் லிங்க்…https://dhinasari.com/?p=65590
தொடரும்…
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
தினசரி டாட் காம் ஜனவரி 15, 2019