அப்பாவின் தியாகத்தைப் பற்றிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதற்கு பலரின் கமெண்ட்டுகள் மனதை கனக்கச் செய்தன. எனக்கும் சின்ன ஃப்ளாஷ்பேக் எட்டிப் பார்த்தது.
25 ஆண்டுகளுக்கு முன்னர் நான் சென்னை வந்து என் நிறுவனத்தைத் தொடங்கியபோது பல்துறை சார்ந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது என் கிளையிண்ட் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
‘எப்படி உங்களால் உங்கள் அப்பா, அம்மா மீது இத்தனை பாசமாக இருக்க முடிகிறது? என் பெண்ணுக்கு சச்சினையும், ஷாருகானையும்தான் பிடிக்கிறதே தவிர…’
இந்தக் கேள்விக்கு அப்போது எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
நான் வேண்டுமென்றே என் பெற்றோர் பெருமைகளை மிகைப்படுத்தி மற்றவர்களிடம் சொல்வதில்லை. என் பணிசார்ந்த விஷயங்களைப் பேசும்போது தேவைப்படும் இடத்தில் அவர்களையும் குறிப்பிடுவேன். அவ்வளவுதான்.
ஆனாலும் அந்த கிளையிண்ட் அப்படி நுணுக்கமாக என்னைப் புரிந்துகொண்டு கேட்ட கேள்வி எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் என்ன பதில் சொல்வது என ஒருநிமிடம் யோசிக்கத்தான் வேண்டியிருந்தது.
பாசம் வைப்பதற்கு காரணம் என்ன சொல்வது? எதைச் சொல்வது? எதை விடுவது?
ஆனாலும் பதில் சொன்னேன்.
‘அந்த அளவுக்கு என் அப்பா எங்களிடம் பாசத்துடனும் நேசத்துடனும் நடந்துகொள்கிறார். வாழ்ந்து காட்டுகிறார்…’
‘நாங்களும் அப்படித்தானே செய்கிறோம்….’ என்றவருக்கு ‘என்னவோ எனக்கு என் அப்பா அம்மாவை ரொம்பப் பிடிக்கும்… அவர்கள்தான் என் நண்பர்கள்…’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
சென்ற வருடம் எங்கள் காம்கேரின் வெள்ளிவிழாவுக்காக மீண்டும் அதே கிளையிண்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போதும் மறக்காமல் இதே கேள்வியை கேட்டார். அவர் மகளுக்கு திருமணமும் ஆகி பேரன் பேத்திகளும் பெற்றுவிட்டார். ஆனாலும் அவருக்குள் இந்த கேள்வி மறையாமல் அப்படியே இருந்தது.
இப்போது என்னால் தெளிவான பதிலை சொல்ல முடிந்தது.
என் அப்பாவும் அம்மாவும் இரண்டு விஷயங்களை செய்யவே இல்லை.
ஒன்று, ‘நாங்கள் அந்த காலத்தில் எப்படி கஷ்டப்பட்டோம் தெரியுமா… உங்களுக்கு இப்போது இருக்கும் வசதிகள் எல்லாம் கிடையாது… அப்படிக் கஷ்டப்பட்டு வளர்ந்தோம்…’
இரண்டாவது, ‘நாங்கள் எப்படி எல்லாம் ராத்திரி பகலாக கஷ்டப்படறோம் உங்களுக்காக…. எவ்வளவு பணம் செலவழிக்கிறோம்… கொஞ்சமாவது எங்கள் கஷ்டம் புரிகிறதா…’
இப்படி ஒருநாளும் சொன்னதில்லை.
மதிப்பெண் குறைந்தாலும் சரி, தம்பி தங்கைகளுக்குள் சண்டை போட்டுக்கொண்டாலும் சரி, ஏதேனும் சிறு தவறுகள் செய்தாலும் சரி, அறியாமல் அடம் பிடித்தாலும் சரி, புரியாமல் கோபித்துக்கொண்டாலும் சரி….
நேரடியாக நிகழ்வுக்கான தீர்வை கொடுப்பதில்தான் கவனமாக இருப்பார்களே தவிர, நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்போதுவரை ஒருநாளும் மேலே சொன்ன இரண்டு விஷயங்களைச் சொன்னதே இல்லை.
இந்த இரண்டு விஷயங்களை சொல்லி சொல்லி குழந்தைகளிடம் ‘சிம்பதி’ பெற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் ஒருநாளும் அவர்கள் மனதுக்குள் செல்லவே முடியாது.
பொதுவாக எல்லா காலகட்டங்களிலும் அடுத்த தலைமுறை என்பது முந்தைய தலைமுறையினரைவிட எல்லா விதங்களிலும் நன்றாகவேதான் இருப்பார்கள். இது இயற்கையான ஒன்று.
செய்ததைச் சொல்லிக் காட்டும் யாருமே எந்த காலத்திலும் மற்றவர்கள் மனதில் இடம் பெற முடியாது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 24, 2019