ஞாயிறு அன்று ‘அமேசான் ப்ரைமில்’ விஜய் சேதுபதியின் நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சீதக்காதி’ திரைப்படம் பார்த்தேன்.
ஆரம்ப நாடகக் காட்சிகள் கொஞ்சம் போரடித்ததால் ‘ஆஃப்’ செய்து விடலாம் என்றுகூட தோன்றியது. ஆனாலும் ‘என்னதான் சொல்லி இருக்கிறார்கள்’ என்ற ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
மெல்ல மெல்ல படம் சுவாரஸ்யமாக நகர ஆரம்பித்தது. வேதனையும், காமெடியும் கலந்துகட்டி முழு படத்தையும் பார்க்க வைத்தது அத்தனை காட்சிகளும்.
மேடையில் நடிப்பதையே தன் வாழ்க்கையாகக் கொண்ட ஐயா ஆதிமூலம் (விஜய் சேதுபதி) உன்னதமான நாடகக் கலையை மக்கள் நிராகரிப்பதை மன வேதனையுடன் நாட்களைக் கழிக்கிறார். நாடகம் நடக்கும் சபாவில் அவர்கள் குடும்பத்தாரைத் தவிர வேறு யாருமே பார்வையாளராக இல்லை.
ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே உயிர் துறக்கிறார் ஆதிமூலம். அதற்குப் பிறகான காலகட்டங்களில் நடக்கின்ற நாடகங்களின் கதாப்பாத்திரங்கள் எல்லாம் முன்பைவிட சிறப்பாக நடிக்க ஆரம்பிக்கிறார்கள். காரணம் ஆதிமூலம் ஐயாவின் ஆன்மா அவர்களுக்குள் சென்று நடிக்க வைப்பதாய் கதை நகர்கிறது.
நாடகக் குழுவில் ஒரு இளைஞனை சினிமா இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு அழைக்க அந்தப் படம் ஹிட்டாகி ஆதிமூலம் ஐயாவே அந்த ஹீரோ வடிவில் நடிப்பதாய் மக்கள் நம்புகிறார்கள்.
இதுபோல பல படங்கள் ஹிட்டடிக்கின்றன.
ஆதிமூலம் ஐயா ஆன்மாவின் மூலம் நடிக்கும் நடிகர்கள் எப்போது ‘தான்’ என்ற கர்வம் கொண்டு பேசுகிறார்களோ அப்போது ஆதிமூலம் ஐயா அவர்களை விட்டு விலகுவதாய் காட்டியிருக்கிறார்கள்.
காட்சிகள் அத்தனையிலும் காமெடிதான்.
ஒருகட்டத்தில் ஒரு நடிகன் ஆதிமூலம் ஐயாவின் ஆன்மாவை கொன்றுவிட்டதாய் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது.
இறுதியில் நீதிபதி இந்த விசித்திரமான கேஸை சாதுர்யமாக சமாளித்து நீதி வழங்குகிறார். நீதிபதியாக நடிக்கும் டைரக்டர் திரு. மகேந்திரன் இயல்பான நடிப்பு அற்புதம்.
நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் திரைப்படம். வெகு காலத்துக்குப் பிறகு சிரித்தபடி ஒரு திரைப்படத்தைப் பார்த்த நிறைவு எனக்குள்.
‘உண்மையான கலைக்கும், கலைஞனுக்கும் எப்போதும் அழிவில்லை’ என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள் ‘சீதக்காதி’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
ஜனவரி 29, 2019