ஹலோ With காம்கேர் -312: இலவசங்களினால் படைப்புகள் மதிப்பிழந்து போகின்றனவா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 312
November 7, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’  – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்,கட்டுரையாளர்களை பொருளாதார முன்னேற்றம் அடைய விடாமல் தடுக்கிறதே. அனைத்தும் PDF ஆக இலவசமாக கிடைக்கும்போது படைப்பு மதிப்பிழந்து விடுகிறதே. இதற்கு என்ன செய்வது? – இந்தக் கேள்வியைக் கேட்டவர் திரு. பிரபாகரன்.

அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஒரு குறும்படத்தின் கான்செப்ட்டை அவர்களிடம் அனுமதி பெறாமல் காப்பி செய்து அப்படியே பயன்படுத்தி உள்ளதாக செய்திகள் வெளியானது.

இப்படி ஒருவரது கான்செப்ட்டை திருடுதல், படைப்பை திருடுதல், சாஃப்ட்வேர்களின்  ‘பைரட்டட்’ வெர்ஷன்களை பயன்படுத்துதல், திரைப்படம் வெளியாகும் முன்பே சம்மந்தப்பட்டவர்களின் அனுமதி இன்றி திருடி எடுத்து இலவசமாக யு-டியூபில் விநியோகம் செய்தல் இப்படி பல்வேறு வடிவங்களில் திருட்டு நடைபெறுவதால், எல்லாவற்றுக்கும் ஏன் காசு கொடுக்க வேண்டும், இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாமே என்ற மனோபாவம் நம் மக்களிடம் பெருகி வருகிறது.

இதே மனோபாவம்தான் புத்தகங்களை திருடி PDF ஆக பொதுவெளியில் பரவவிடுவதிலும் நடந்துகொண்டிருக்கிறது.

இலவச விநியோகங்களினால் படைப்பு மதிப்பிழந்து விடுவதை அலசி ஆராயும்போது கேப்ஸ்யூல்களாகும் தகவல்கள், மொழிப் பிரச்சனை, அச்சுப் புத்தகங்களின் வீட்சி, இ-புத்தகங்களின் பெருக்கம் போன்றவற்றைப் பற்றி விரிவாக சிந்திக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக இலவசங்களைப் பயன்படுத்துவதில் சுகம் காணும் மனிதர்களின் மனமே எல்லா பிரச்சனைகளுக்கும் மூலக் காரணம் என்பதே வேதனையான உண்மையாக உள்ளது.

  1. கேப்ஸ்யூல்களாகும் தகவல்கள்!

இன்று நம்மில்  பெரும்பாலானோருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப், யு-டியூப் போதுமானதாக உள்ளது. அதுவும் மொபைலில் ஒரு திரைக்குள் அல்லது அதிகபட்சமாக ஒரு ஸ்குரோல் செய்து படித்துவிடக்கூடிய தகவலாக இருந்தால் மட்டுமே படிக்கிறார்கள்.

ஆடியோ வீடியோக்களாக இருந்தால் ஒருநிமிடத்தில் இருந்து மூன்று நிமிடங்களுக்குள்  இருந்தால் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் பொறுமை இருக்கிறது. அதற்கு மேல் சென்றால் அடுத்தத் தகவலுக்கு தாவிவிடுகிறார்கள்.

பத்திரிகை, செய்தித்தாள்கள் ஃபேஸ்புக்கில் பகிரும்போது அவர்கள்  முன்னெடுப்புக்காகக் கொடுக்கும் தகவல்களோடு படிப்பதை நிறுத்திக்கொள்கிறார்கள். முழுமையாக தெரிந்துகொள்ளக் கூட அந்த வெப்சைட்டுக்குள் செல்வதில்லை.

இன்னும் சொல்லப் போனால் செய்திகளை மீம்ஸ்களுக்குள் அடக்கி விடுகிறார்கள் இன்று. படங்களுடன், வாசகங்களை சேர்த்து அன்றாட நிகழ்வுகளுக்கு மீம்ஸ்கள் உருவாக்கித் தருவதே ஒரு பிசினஸாக மாறி வருகிறது. பக்கம் பக்கமாக எழுதப்படும் செய்திகளை மீம்ஸ்களில் அடக்கி கேப்ஸ்யூலாக்கிக் கொடுக்கிறார்கள்.

தவிர வாட்ஸ் அப் மூலமும் தகவல்கள் ஷேர் ஆகிறது. ஒரே தகவல் ஃபேஸ்புக், டிவிட்டர், மெசஞ்சர், வாட்ஸ் அப் என பல வழிகளில் பல்கிப் பெருகி ஒருவித அயர்சியே ஏற்படுத்துகிறது.

வெரைட்டியான தகவல்கள் வெவ்வேறு வடிவில் ஃபேஸ்புக் உள்ளிட்ட ஆன்லைன் மீடியாக்களில் கொட்டிக்கிடக்கும்போது துண்டு துண்டாக செய்திகளை படித்து விடுவதால் மனமும் ஒருவித சோர்வுக்கு ஆளாவதை தவிர்க்க முடிவதில்லை. அதுவே எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட கானல்நீர் நிறைவை ஏற்படுத்திவிடுகிறது.

இதன் காரணமாய் எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக படிக்க வேண்டும் என்கின்ற உத்வேகம் குறைவதும் இயற்கைதானே.

  1. மொழிப் பிரச்சனை!

இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு தமிழே எழுதப் படிக்கத் தெரிவதில்லை. பின் எங்கே தமிழில் வெளிவரும் செய்தித்தாள்களையும், பத்திரிகைகளையும், புத்தகங்களையும், இலக்கியங்களையும் வாசிப்பது? இப்போது நான் எழுதி வரும் ஹலோ With காம்கேர் பதிவுகளைக் கூட தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் படிக்கத் தெரியாததால் படிக்க முடிவதில்லை. நாங்கள்தான் படித்து சொல்கிறோம் என பல பெற்றோர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அவர்களுக்காக நான் இந்தப் பதிவின் வீடியோவையும் எங்கள் காம்கேர் யு-டியூப் சேனலில் வெளியிட்டு வருகிறேன்.

எந்த ஒரு படைப்பும் மொழிப் பிரச்சனையினால் வீழ்ச்சி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தவே சொல்கிறேன்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள், அதைவிட முக்கியமாக தாய்மொழியை எழுத,படிக்க, பேச கற்றுக்கொள்ளுங்கள்.

  1. வாசிப்பு குறைவும் அச்சுப் புத்தகங்களின் வீட்சியும்!

தொழில்நுட்பத்தின் அசுர வேகப் பயணத்தில் நம் மக்களுக்கு வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் பகிரப்படும் செய்திகளை நுனிப்புல் மேயும் மனப்பாங்கு அதிகரிகரித்து விட்டது.

ஏதேனும் தேவை என்றால் கூகுளில் தேடி எடுத்துக்கொள்ளலாமே… எதற்காக காசு கொடுத்துப் புத்தகம் வாங்க வேண்டும் என்ற மனோபாவமும் அதிகரித்து விட்டது.

அத்தனையும் இலவசமாக கிடைக்கும்போது காசு கொடுத்து எதற்காக புத்தகங்கள் வாங்க வேண்டும்?

தவிர ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்களில் பெரும்பாலான அச்சுப் புத்தகங்கள் அவற்றின் அட்டையில் இருந்துத் தொடங்கி இம்பிரிண்ட் பக்கம் முதற்கொண்டு அச்சு அசலாக உள்ளது உள்ளபடி ஒரு புள்ளி, கமா, செமிகோலன் மாறாமல் கடை தேங்காயை எடுத்து வழிபிள்ளையாருக்கு உடைப்பதைப் போல இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறன.

பிறகு எப்படி காசு கொடுத்து வாங்குவார்கள் அச்சுப் புத்தகங்களை?

  1. இ-புத்தகங்கள் வாசிப்பதும் சுகமே!

முன்பெல்லாம் சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்குவேன். எனக்கு மட்டுமில்லாமல் அப்பா அம்மா அமெரிக்காவில் வசிக்கும் என் சகோதரன் சகோதரிக்காகவும் புத்தகங்களை வாங்கி குவிப்பது வழக்கம்.

நெடுந்தூர விமான பயணங்களில் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு மாற வேண்டிய சூழலில் பல மணி நேரங்கள்கூட காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதுபோன்ற சூழலில்  நான் சுமந்து சென்ற புத்தகங்கள்தான் நேரத்தை சுலபமாகக் கடக்க உதவி செய்யும்.

ஆனால் இ-புத்தகங்கள் பெருகிவரும் இந்நாளில் 70 வயதைத்தாண்டிய என் அப்பா அம்மா உட்பட நாங்கள் அனைவருமே இ-புத்தகங்களுக்கு மாறிவிட்டோம்.

நான் மட்டுமல்ல என் பெற்றோரும் இலவசமாக படிக்க அனுமதிக்கும் பத்திரிகைகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்திப் படிக்கக் கூடிய தினசரி, வாராந்திர மாதாந்திர பத்திரிகைகளுக்குக் கட்டணம் செலுத்தியும் ஆன்லைனில்தான் படிக்கிறோம்.

கம்ப்யூட்டர், டெஸ்க்டாப், ஸ்மார்ட்போன், கிண்டில் என எல்லா சாதனங்களிலும் அவர்களாலும் வாசிக்க முடிகிறது.

முதலில் அச்சுப் புத்தகங்களுக்குப் பழகிய நம் கண்களும் மனதும் இ-புத்தகங்களுக்குப் பழகுவதற்கு சற்று முரண்டுபிடிக்கும்தான்.

நடைமுறையில் அச்சுப் புத்தகங்களைவிட எல்லா விதங்களிலும் மிக சுலபமாக இருப்பது இ-புத்தகங்களே. இந்த விஷயம் புத்தக பிரியர்களுக்கும், ஆராய்ச்சிக்காக நிறைய புத்தகங்களைப் வாசிப்பவர்களுக்கும் நன்கு தெரியும்?

ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், பிளாக், வாட்ஸ் அப் என பலவழிகளில் தகவல்களைப் படித்துப் பழகிய நம் மக்களுக்கு இ-புத்தகங்களை வாசிப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான செயல்பாடல்ல.

கொஞ்சம் மெனக்கெட்டு இ-புத்தகங்கள் மீது கவனத்தைக் குவித்தால் அதுவும் சாத்தியமே.

அச்சுப் புத்தகமோ, இ-புத்தகமோ தமிழ் புத்தகங்கள் விற்பனை ஆவதற்கும் பதிப்புத்துறை வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கும் அடுத்துவரும்   தலைமுறையினருக்கு தாய்மொழி தமிழை பள்ளியிலோ அல்லது பிரைவேட்டாகவோ கற்றுக்கொள்ளும் சூழல் வர வேண்டும். தமிழ்ப் பேசக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது, படிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

கல்விச் சூழல், பெற்றோர் மனநிலை இப்படி எல்லாமே மாறினால் மட்டுமே வரும்காலத்தில் தமிழ் புத்தகங்கள் நிலைத்து நிற்கும். புதிதாக வாசகர்கள் உருவாகாவிட்டாலும் இப்போதிருக்கும் வாசகர்களையாவது தக்க வைத்துக்கொள்ள முடியும்.

  1. இலவசங்களை பயன்படுத்துவதில் சுகம் காணும் மனசு!

புத்தகங்கள் இலவசமாக PDF வடிவில் எங்கும் பரவிக் கிடப்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

நம்மில் எத்தனை பேர் நாம் பயன்படுத்தும் விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற அடிப்படை சாஃப்ட்வேர்களின் ஒரிஜினல் வெர்ஷனை வாங்குகிறோம் சொல்லுங்கள். பெரும்பாலும் ‘பைரட்டட்’ வெர்ஷன்களையே பயன்படுத்துகிறார்கள். ஒரிஜினல் வெர்ஷன் என்பது கட்டணம் செலுத்தி வாங்கிப் பயன்படுத்துவது. பைரட்டட் என்பது சட்டத்துக்கு விரோதமாக ஒரிஜினல் வெர்ஷனை காப்பி செய்து பயன்படுத்துவது.

ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கவும் வெற்றிகரமாக நடைமுறையில் இயக்கவும் எத்தனை தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பு தேவையாக இருக்கும், எத்தனை மாதங்கள் எடுத்துக்கொள்ளும், எத்தனை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும், எத்தனை முறை குவாலிட்டி செக் செய்ய வேண்டியிருக்கும், எத்தனை முறை அப்டேஷன்கள் கொடுக்க வேண்டியிருக்கும்… இப்படி பல்வேறு ‘எத்தனை’-களைத் தாண்டி எவ்வளவு லட்சம் செலவழித்து உருவாக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டால் பைரட்டட் வெர்ஷன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைக் குறையலாம்.

ஏன், நாம் அனைவருமே விரும்பிப் பார்க்கும் திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். எத்தனை கோடிகளில் உருவாக்கி இருப்பார்கள். ஆனால் அதையும் திருட்டு விசிடியாகவும், வெப்சைட்டுகளிலும் யு-டியூபிலும் அவை வெளிவரும் நாள் அன்றேவோ அல்லது அதற்கு முன்னேயோகூட திருட்டுத்தனமாக எடுத்து வெளியிட்டு திரைத்துறையினரையும் பொருளாதார வீழ்ச்சிக்கு உட்படுத்தும் நிகழ்வுகளும் பெருகித்தானே வருகிறது.

எந்த ஒரு படைப்பும் மதிப்பிழந்து போவதற்கு மிக முக்கியக் காரணம் இலவசங்களைப் பயன்படுத்துவதில் சுகம் காணும் மனிதர்களின் மனமே என்பதுதான் பேருண்மை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

நவம்பர் 12,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 6,390 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon