ஹலோ With காம்கேர் -313: ஐடி துறையில் நிலைத்திருப்பதற்கான வழிமுறைகள்!

ஹலோ with காம்கேர் – 313
November 8, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’  – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: தற்போது கணினி படிப்பை படிப்பவர்கள் தங்களை எப்படி, எந்தெந்த தகுதிகளுடன் தயார்படுத்தி கொள்ள வேண்டும்? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. சுரேஷ்பாபு கிருபா.

கணினி என்று தமிழில் மூன்றெழுத்துகளிலும், Computer என ஆங்கிலத்தில் எட்டெழுத்துக்களில் தொழில்நுட்பத்துறையை குறிப்பிட்டாலும் அதன் சாகசங்களை எத்தனை வார்த்தைகளால் எழுதினாலும் எந்த அளவுகோலுக்குள்ளும் அடக்கிவிட முடியாது.

கம்ப்யூட்டர் என்றால் டெஸ்க்டாப், லேப்டாப் என்றளவில் இருந்த காலம்போய் ஒவ்வொருவரின் கையில் இருக்கும் மொபைலே கம்ப்யூட்டர் போல்தான் செயல்படுகிறது. தொழில்நுட்ப தேவைக்காக அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கம்ப்யூட்டர் வீட்டுக்குள் ஒரு டேபிளில் ’டெக்ஸ்டாப் கம்ப்யூட்டராக’ வந்து அமர வழி செய்தோம். பிறகு எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து பயன்படுத்தும் வசதிக்காக நம் மடிமீது ‘லேப்டாப்பாக’ வந்து உட்கார அனுமதித்தோம். இன்று தொழில்நுட்பம் இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலை உருவாகியதால்  தொழில்நுட்பத்தை நம் உள்ளங்கைக்குள் ‘ஸ்மார்ட்போனாக’ வந்து அமர இடம் கொடுத்துள்ளோம்.

இந்த எளிமையும், அவரவர்கள் தாய்மொழியில் பயன்படுத்தும் வசதியும், சாதனங்களில் விலைகுறைப்பும், இண்டர்நெட் இணைப்புகளின் கட்டற்ற வேகவும் இதனை சாத்தியமாக்கியுள்ளது.

இனிவரும் காலத்தில் எந்த சாதனமும் இன்றி நாம் நினைத்தாலே எல்லாமே நம்மிடம் வரும் அளவுக்கு தொழில்நுட்பம் உச்சத்தை எட்டும் என்பது உறுதி.

இன்றே டெட்டா சயின்ஸ், பிக் டேட்டா, ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என தொழில்நுட்பம் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, ஷாப்பிங்மாலில் ஒரு கடையில் நீங்கள் ஏதேனும் ஒரு பொருள் வாங்க சென்றிருந்தால், நீங்கள் அந்த ஷாப்பிங்மாலை விட்டு வெளியேறுவதற்குள் உங்கள் ஸ்மார்ட்போனில் அதே பொருள் இங்கெல்லாம்கூட கிடைக்கிறது என கூகுளும், ஃபேஸ்புக்கும் பட்டியலிட்டுக் காண்பிக்கிறது.

எனவே தொழில்நுட்பம் இல்லாத நம் வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதுதான் நிதர்சனம் என்பதால் கல்லூரி படிப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு நித்தம் மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுத்து இந்தத்துறையில் படித்துக்கொண்டும், அப்டேட் செய்துகொண்டே இருப்பதுதான் ஒரே வழி.

28 வருடங்களாக சாஃப்ட்வேர் நிறுவனத்தை தலைமைதாங்கி நடத்தி வரும் ஏன் நான் கூட நித்தம் ஒவ்வொரு நிமிடமும் ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.

அடிப்படையில் நல்ல ஆழமான விரிவான அறிவைப் பெற்றிருந்தால் இந்தத்துறையில் மேன்மேலும் கற்றுக்கொள்வது சுலபம். அடிப்படையிலேயே அறைகுறை என்றால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. எனவே அடிப்படையை உறுதியாக, ஆழமாக, விரிவாக கற்றுக்கொள்ளுங்கள். அது தானாகவே மற்ற விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வமும், பாதையும் உங்களுக்கு வழிநடத்தும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 2,031 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon