ஜம்முனு வாழ காம்கேரின் OTP-118: காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்!

பதிவு எண்: 849 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 118
ஏப்ரல் 28, 2021

காதுகளுக்கு ஏங்கும் மனிதர்கள்!

ஆலோசனைகள் சொல்லும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ஒருவருக்கு நாம் சொல்லும் ஆலோசனை மற்றொருவருக்கு பொருத்தமாக இருக்காது. அவரவர் கல்வி, அனுபவம், குடும்பப் பின்னணி இவற்றின் அடிப்படையில் அவரவர்களின் சிந்திக்கும் ஆற்றல் இருக்கும்.

‘உன் மனசுக்கு எது தோன்றுகிறதோ அதை செய்’ என்ற அறிவுரையை எல்லோருக்கும் பொதுப்படையாக்க முடியாது. ஒரு சிலருக்கு எது சரி, எது தவறு என்றே தெரியாது. குழப்பவாதியாக இருந்தால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியாது. அவருக்கு ஒரு நெம்புகோலோ அல்லது தூண்டுகோலோ தேவையாக இருக்கும்.

எனவே, ஆலோசனை சொல்கிறேன் என குழம்பிய எதிராளியை மேலும் குழப்பிவிடக் கூடாது.

ஒருசிலருக்கு பணம் இருக்கும், பதவி பட்டங்கள் இருக்கும். அதை வைத்துக்கொண்டு அவரால் ஒரு பிரச்சனையில் இருந்து சுலபமாக வெளிவந்துவிட முடியும். ஆனால் அவரது பிரச்சனையே வேறாக இருக்கும். அதாவது அவர் தன்னை சுற்றி தானே போட்டுக்கொண்ட இமேஜ் என்ற வேலியே அவருக்கு பாரமாக நெருக்கும். அதற்கு ஒரு பாதகம் வரும்போது பணமோ, பதவியோ, பட்டமோ, ஆள் பலமோ எதுவுமே அவருக்கு உதவப் போவதில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் மட்டும் எம்மாத்திரம்?

எனவே மன அழுத்தத்தில் இருக்கும் அவரிடம் பேசும்போது மிக கவனமாக இருக்க வேண்டும். ‘அச்சசோ… இது வெளியில் தெரிந்தால்… அவ்வளவுதான்… ஆனாலும் கவலைப்படாதே வழி இல்லாமலா போகும்…’ என்று நீங்கள் சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அவர் நீங்கள் சொல்லும் ஆலோசனையின் முதல் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வார். ‘அச்சசோ… இது வெளியில் தெரிந்தால்… அவ்வளவுதான்…’ என்பது அவர் ஏற்கெனவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் இமேஜ் என்ற வளையத்தைத் உரசிப் பார்த்துவிடும். உங்கள் ஆலோசனையின் இரண்டாவது பகுதி  ‘ஆனாலும் கவலைப்படாதே வழி இல்லாமலா போகும்… ‘ அவர் காதுகளுக்குள் செல்லாமல் காற்றில் பறந்துவிடும்.

தன் இமேஜை காப்பாற்றிக்கொள்ள தற்கொலை வரைகூட செல்வதற்கு வாய்ப்புண்டு.

ஆனால் இமேஜ் என்ற வரையறைக்குள் அடைபடாத ஒரு இயல்பான மனிதனால் எளிதில் அவருடைய பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்துவிட முடியும். ஆனால் அவருக்கு வேண்டியது ஆறுதலான வார்த்தைகளும், அவர் சொல்வதை கேட்கும் காதுகளும் மட்டுமே.

அவரால் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கும். நீங்கள் சரியாக வழிகாட்டினால் அவரால் அதில் இருந்து சுலபமாக வெளிவந்துவிட முடியும்.

‘நீங்கள் அன்று சொன்ன ஒரு வார்த்தை என் வாழ்க்கையே மாற்றிவிட்டது’ என உங்களைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் இல்லாத நேரங்களில் அவரது நண்பர்களிடமும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகளையே கவனியுங்களேன். ஒருசில குழந்தைகள் தானாகவே படித்துவிடும். சில குழந்தைகள் ‘படி படி’ என சொல்லிக்கொண்டிருந்தால் படிக்கும். இன்னும் ஒரு சில குழந்தைகளுக்கு ‘ஆஹா, என் செல்லாம்… சொல்லாமலேயே படித்துவிடுகிறாய். வெரிகுட்’ என சின்னதாக ஒரு பாராட்டு போதும். இதையெல்லாம் விட முக்கியமான ஒரு பிரிவு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் மிரட்டி, லேசாக அடித்து படிக்கச் சொன்னால் மட்டுமே படிப்பார்கள்.

குழந்தைகள்போல் தான் நாமும். வளர்ந்த குழந்தைகள். அவ்வளவுதான்.

எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் தன் அம்மாவிடம் ‘என்னை நீ இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாம். என்னை நீ எதுவுமே சொல்லாமல் என் இஷ்டத்துக்கு வளர்த்து விட்டாய்… இப்போ நான் தான் கஷ்டப்படறேன்’ என்று சொல்லி சண்டைப் போட்டாராம். ஒரு தாயின் புலம்பல் இது.

மற்றொரு பெண் தன் தாயிடம் ‘எனக்கு நீ சுதந்திரமே கொடுக்கலை… இப்போ பார், அலுவலகத்தில் என்னால் எல்லோரிடமும் சகஜமாக பேசக் கூட முடியவில்லை… தயக்கமாக இருக்கும்… வார்த்தைகள் தடுமாற்றமா இருக்கு…’ என்று சொல்லி புலம்பினாராம். இது மற்றொரு தாயின் வேதனை.

இப்படித்தான் குழந்தைகள் எப்படி வேண்டுமானாலும் திரும்பிக்கொள்வார்கள். செய்தால் ‘ஏன் செய்தாய்?’ என கேட்பது, செய்யாவிட்டால் ‘ஏன் செய்யவில்லை?’ என கேட்பது.

இதே மனநிலையில்தான் சங்கடத்தில் இருக்கும் மனிதர்களும் இருப்பார்கள்.

நீங்கள் சொல்லும் ஒரு சொல், ஒரு வார்த்தை, ஒரு ஆலோசனை எதை வேண்டுமானாலும் செய்யலாம். உச்சாணிக்கும் ஏற்றும், கீழே குப்புறவிழவும் செய்யும்.

எதிராளியின் மனநிலை தெரியாமல் எந்த ஒரு சிறு வார்த்தையையும் சொல்லிவிட வேண்டாம்.

எதையும் சொல்லத் தோன்றவில்லை என்றால் உங்கள் வாயை மூடி, காதுகளை மட்டும் திறந்து வைத்துக்கொண்டு எதிராளி சொல்வதை கேட்டுக்கொண்டிருங்கள்.

இங்கு பலருக்கும் தேவை தாங்கள் சொல்வதைக் கேட்கும் காதுகளே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 19 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon