ஜம்முனு வாழ காம்கேரின் OTP-119: சுத்தம் சோறு போடும்!

பதிவு எண்: 850 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 119
ஏப்ரல் 29, 2021

சுத்தம் சோறு போடும்!

காய்கறிகளும் பழங்களும் கூட நம் உடல்நிலையை ஆட்டம் காண வைத்துவிடுமாம். காய்கறிகள் சாப்பிட்டால் மூளை வளரும்னுதானே அம்மாக்கள் சொல்வாங்க… ஆனால் இது என்ன புதுக் கதையா இருக்கு?

கடைசி வரை படியுங்களேன்!

தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து சாப்பிட வேண்டும்.

காய்கறிகளை மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் நன்றாக சுத்தம் செய்து பின்னர் நல்ல தண்ணீரில் சுத்தம் செய்து, ஈரம் போக காயவைத்து துடைத்து பாதுகாக்க வேண்டும்.

மீண்டும் அடுத்த நாள் சமைக்கும்போது திரும்பவும் தண்ணீரில் சுத்தம் செய்தே எடுத்துப் பயன்படுத்த வேண்டும்.

கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, இஞ்சி போன்று தோல் உள்ள காய்கறிகளை தோல் சீவி திரும்பவும் தண்ணீரில் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

முட்டைக்கோஸை அப்படியே நறுக்கி சமைக்கக் கூடாது. ஒவ்வொரு இலையாக எடுத்து தண்ணீரில் கழுவிய பிறகே நறுக்கிப் பயன்படுத்த வேண்டும்.

கீரைகளை வாங்கிய அன்றே பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு இலையாக ஆய்ந்து மஞ்சளும் உப்பும் கலந்த நீரில் முதலிலும், நல்ல தண்ணீரில் அடுத்தும் நன்றாக சுத்தம் செய்த பிறகே சமைக்க வேண்டும்.

அதுபோலவே கறுவேப்பிலை, கொத்துமல்லி போன்றவற்றையும் அவசரத்துக்கு ஆய்ந்து அப்படியே சமையலில் சேர்க்கக் கூடாது. இலை இலையாக ஆய்ந்து தண்ணீரில் ஆய்ந்து பின்னரே சமையலில் சேர்க்க வேண்டும்.

தக்காளியில் காம்புப் பகுதி குழிவாக இருக்கும். அதில் உரத்துகள்கள், கண்களுக்குத் தெரியாத பூச்சிகள், புழுக்கள் அண்டி இருக்கலாம். எனவே அந்தப் பகுதியை நறுக்கிவிட்டுப் பயன்படுத்தலாம்.

அதுபோலவே பழங்களையும் நன்றாக மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரிலும், நல்ல தண்ணீரிலும் சுத்தம் செய்த பிறகே சாப்பிட வேண்டும். ஆப்பிள் போன்று தோல் சீவ வேண்டிய பழங்களை தோல் சீவியே பயன்படுத்த வேண்டும்.

சுகாதாரமில்லாத இடங்களில் சமைக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை சாப்பிடுவதை தவிர்க்கலாம். குறிப்பாக சாலையோர கடைகளில். தவிர்க்கவே முடியாத சூழல்களைத் தவிர மற்ற நாட்களில் ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அப்படியே சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கீரைகளையும், கிழங்கு வகைகளையும், சால்ட்டுகளையும் சாப்பிடுவதை ஒதுக்கிவிடலாம்.

சாலையோர கடைகளில் எண்ணெய் நாள் முழுவதும் கொதித்துக்கொண்டே இருக்கும். அதில் தயாரிக்கப்பட்ட பஜ்ஜி, போண்டா, சமோசா, பானி பூரி போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் அவற்றுக்கு உபரியாகக் கொடுக்கும் கிழங்கு, சட்னி, துவையல் போன்றவற்றில் பயன்படுத்தும் காய்கறிகளை எந்த அளவுக்கு சுத்தம் செய்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியாது. அத்துடன், சுத்தமில்லாத தண்ணீரில் கழுவிய தட்டு, டம்ளர், சாலையில் பரவிக்கிடக்கும் தூசி, அசுத்தக் காற்று என ஆரோக்கியமில்லா சூழலும் நல்லதல்ல. வீடுகளில்கூட ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

இப்படி நாம் சாப்பிடும் காய்கறிகளில் இத்தனை அக்கறை  எடுத்துக்கொள்ளாவிட்டால் ‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ வருமாம்.

‘என்ன அது வாயில் நுழையாதா பெயராக இருக்கிறதே’ என பார்க்கிறீர்களா?

‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ என்றால் மூளைப்பகுதியில் ஏற்படும் வீக்கம்.

நம் வயிற்றுக்குச் சென்ற நாம் சாப்பிட்ட காய்கறிகள் மூளையை எப்படி பாதிக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதா?

காய்கறிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கண்களுக்குத் தெரியாத நாடாப் புழுக்கள் நாம் சாப்பிடும்போது நம் வயிற்றுக்குள் சென்றுவிடும். பின்னர் அவை ரத்த நாளங்கள் வழியாகப் பயணம் செய்து நம் தசைகளில் ஒட்டிக்கொள்ளும். பின்னர் அவை மெது மெதுவாக நகர்ந்து முதுகெலும்புப் பகுதியை சென்றடைந்து மூளைப் பகுதியை பாதிக்கும். மூளைப் பகுதியில் வீக்கத்தையும் பாதிப்பையும் உண்டாக்கி, நீர்க்கசிவை ஏற்படுத்தும். அது வலிப்பு நோய் வரை கொண்டு விட்டுவிடும். மருத்துவ செய்திகள் இப்படி பாடம் எடுக்கின்றன.

காய்கறிகள் பழங்கள் தானே என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். அது ஏற்படுத்தும் பாதிப்பு உங்கள் உடலையே ஆட்டம் காண வைத்துவிடும். ஜாக்கிரதை!

இதுகுறித்து எங்கள் காம்கேர் தயாரிப்பில் வெளியான வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம். https://youtu.be/9aGPw0egrvY

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP,  #COMPCARE_OTP

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon